581.
|
சங்கொடு
தாரை காளந் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரற் பம்பை கண்டை வியன்றுடி திமிலைதட்டி
பொங்கொலிச் சின்ன மெல்லாம்பொருபடை மிடைந்தபொற்பின்
மங்குல்வான் கிளர்ச்சி நாண மருங்கெழுந் தியம்பி
மல்க, 31 |
581. (இ-ள்.)
வெளிப்படை. சங்குடனே, தாரையும், காளமும்,
மிக்க ஒலி முழங்கும் பேரியும், வெங்குரலுடைய பம்பையும்,
கண்டையும், பெரிய துடியும், திமிலையும், தட்டியும் முதலிய
பொங்கொலி செய்யும் வாத்திய விசேடங்கள் யாவும் கூடிய
இவ்வகையிலேபோர்ப்படைகள் நெருங்கிய சிறப்பினாலே, மேகங்கள்
நிறைந்த ஆகாயத்தின் கிளர்ச்சியும் கீழ்ப்படுமாறு, பக்கங்களில்
எழுந்து சத்தித்து நிரம்ப, 31
581. (வி-ரை.)
சங்கொடு - மேற்பாட்டில். வில்லொடு
என்றதற் கேற்ப இங்கும் மிகுதியும் சிறப்பும்பற்றி ஏனை
வாத்தியங்களினின்றும் சங்கினைப் பிரித்துக் கூறினார்.
வெற்றிக்கறிகுறியாகச் சங்கு முழக்குதலும் காண்க. பாரதத்திற்
கண்ணன் சங்கமூதியது முதலிய கதைகளுங் காண்க.
தழங்கு
ஒலி முழங்கு பேரி - பேரி - மிக்க பேரொலி
முழக்கும் வாத்திய விசேடமாதலின் இவ்வாறு பலஅடைமொழி
புணர்த்தார். பேரி, யானை முதலியவற்றின் மேலிருந்தும் முழக்கப்
பெறும்.
வெங்குரல் பம்பை
- பம்பை பரந்த இருமுகமுடையதாயும்,
பெரிய உருவுடையதாயும் உள்ள வாத்திய விசேடம். வெவ்விய -
கடிய ஓசைமுழக்குவது. தடாரி.
கண்டை
- ஒருவகைப்பறை. திமிலை -
சல்லரி என்பர்.
வியன்துடி - பெரும் உடுக்கை. பம்பை போலாது
இடை
சிறுத்துள்ளது துடி. சிறுதுடியினின்றும் வேறுணர வியன்றுடி
என்றார்.
தட்டி
- கரடிப்பறை. இதனைத் தட்டை என்பது பிங்கலம்.
"கரடி நாமக் கட்டுரை தட்டை".
பொங்கு
- ஒலி - சின்னம் - இவ்வகையும் ஏனைப்
பலவுமாகிய சின்னங்கள், இவை போரிற் சேனைகளை
ஊக்கப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் பயன்படுவன. இதுபற்றியே
இவை படைமிடைந்த மருங்கு எழுந்தியம்பின என்றார். படைஞர்
இவற்றால் உற்சாகப் படுத்தப் பெற்றுத் தமது இன்னுயிரையும்
பொருட்படுத்தாது போரில் முனைந்து நின்று வெற்றிபெறுமாறு
செய்யவல்லது இந்த வகைப் போர்முனை யியங்களின் இசையின்
சத்தி என்க. இக்காலத்தும் ஆங்கிலர் முதலிய நவீனர் போர்க்குச்
செல்லுங்கால், பற்பலவகை, இயங்களை (War
Band) முழக்கி,
அவ்வானந்தத்தில் ஈடுபட்டுச் செல்வது காணலாம்.
மிடைந்த
- நெருங்கிய.
மங்குல்வான்
கிளர்ச்சி நாண - மேக நிறைந்த
கார்காலத்து ஆகாயத்தில் எழும் ஓசையும் கீழ்ப்பட, நாண
-
கீழ்ப்பட என்றதை வெட்கத்தால் நாண என்று உயர் திணைபோல்க்
கூறினார். கிளர்ச்சி - ஒலி. ஒலியணுக்கள்
விசையிற் றொகுதியாகக்
கிளர்வதனால் உண்டாவதால் கிளர்ச்சி என்பது ஒலிகுறித்தது.
மருங்கு
- சேனைச் செலவில் இருபக்கமும்.
எழுந்தியம்பி
மல்க - எழுந்து - மிகக் கிளர்ச்சியுடன்
ஆர்ப்பரித்து. இயம்பி - வேறு வேறு தத்தம் இயல்புக்கு ஏற்றவாறு
ஒலித்து. மல்க - நெருங்க, வகையானும் தொகையானும் பலவாகி
மலிந்தபடியால் மல்க என்றார்.
மங்குல்வான்
- மங்குல் - மேகம் - பலகூட்டமாகிய மேக
கர்ச்சனையும் வானத்தின் எதிர் ஒலியும் கூடியதால் கிளர்ச்சி
என்றார். வானம் ஒலி என்னும் குணமுடையதுமாம். வான்கிளர்ச்சி
- இடி என்றலுமாம்.
கிளர்ச்சி
மான - என்பதும் பாடம். 31 |