583.
பண்ணுறு முறுப்பு நான்கிற் பரந்தெழு சேனை
                               யெல்லா
மண்ணிடை யிறுகான் மேன்மேல் வந்தெழுந்
                        ததுபோற் றோன்றத்
தண்ணளிக் கவிகை மன்னன் றானைபின் றொடரத்
                                 தானோ
ரண்ணலம் புரவி மேல்கொண் டரசமா வீதி
                             சென்றான்.
   33

     (இ-ள்.) வெளிப்படை. வகை பண்ணப்பட்ட நால்வகை
உறுப்புக்களினாற் பரந்தெழுந்த சேனையெல்லாம், உலகத்து
அழிவைச் செய்யும் ஊழிக்காற்று மேன்மேல் வந்தெழுந்ததுபோலத்
தோன்ற, (அவ்வாறெழுந்த) சேனை தம்மைப் பின்றொடர்ந்து வரத்,
தாம் ஓர் பெருமை பொருந்திய குதிரையின்மே லேறிக் குளிர்ந்த
கருணை பொருந்திய கொற்றக் குடையுடைய அரசர், அரசமா
வீதியிலே சென்றார்.

     (வி-ரை.) உறுப்பு நான்கு - தேர் - யானை - குதிரை -
காலாள் - என்பன. சதுரங்கசேனை யென்பர். "நெருங்கிய
சாதுரங்கம்" எனத் திருநாவுக்கரசு நாயனார் புராணத்துக் (6) கூறியது
காண்க. இவற்றில் முதல் மூன்று 579-ம் பாட்டிலும், நான்காவது
காலாட்படையைப் படைஞர் என 580 - ம் பாட்டிலும் கூறினார்.

     இறுகால் - இறுதலினை - அழிதலைச் - செய்யும்
ஊழிக்காற்று. சண்டமாருதம் என்பர். கால் - காற்று. கால்
மண்ணிடை வந்தெழுந்தது என்று கூட்டுக.

     போல் தோன்ற - தோற்றத்தால் மட்டும் இவ்வாறு
காட்டியதேயன்றிச் செயலில் ஒன்றும் நிகழ்ச்சியின்றாம் என்பார்
போல் என்றும், தோன்ற என்றும் குறித்தார். ஓசையும் விரைவின்
அசைவும் ஆகிய இரண்டு குணமுடைமையின் சேனைச் செலவிற்குக்
காற்றினை உவமித்தார். "மாருதத் திரண்டை" (திருப்புள்ளிருக்கு
வேளூர்த் திருத்தாண்டகம்), "வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய்
போற்றி" (திருவாசகம்) என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.
ஐம்பெரும் பூதங்களில் ஊறு - ஓசை எனும் இரண்டு குணமுடையது
காற்று என்பது சாத்திரம்,

     மேன்மேல் - படை வகை ஒவ்வொன்றும் இக்குணச்
செயல்களுடன் வந்து கூடினவாகலின் மேன்மேல் வந்து என்றார்,

     தண்ணளிக் கவிகை மன்னன் - அரசர் பகைவர்மேற்
சென்ற செயல் பிறரின் அழிவு கருதாது தமது குடிகாத்தலாகிய
தண்ணளியின் செயலாம் என்பது கருத்து. அரசர் கருணை
அதற்கடையாளமாகிய கவிகை - குடையின்மேல் ஏற்றப்பட்டது.
"தண்ணளி வெண்குடை வேந்தன்" - (130) என்றது காண்க.

     அண்ணல் அம் புரவி - நூல்களில் வகுத்தவாறு
நல்லகுதிரைக்குரிய எல்லா நல்ல இலக்கணங்களும்
பொருந்தியதுடன் அழகும் உடையதொரு குதிரை என்க.

     அரசமா வீதி - அரசர்கள் செல்வதற்கமைந்த வீதி.
அரசரது தலைநகரங்களில் ஒன்றாதலின் பலவகையானும் மாறுபாடு
விளையாவண்ணம் பலவகையினர்க்கும் உரியனவாய் வெவ்வேறு
பற்பலதெருவுகள் அமைந்தன. எல்லாத் தெருவுகளும் எல்லாமும்
இயங்குதற்குரியன என்பது பிற்கால நவீனக் கருத்து. இவற்றின்
பொருத்தங்கள் ஆராயத் தக்கன. "அரசுலாந் தெருவில்" (116)
என்றதுங் காண்க. 33