584.
|
கடுவிசை
முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர்
வீழ்ந்த
படுகளங் குறுகச் சென்றான்; பகைப்புலத் தவரைக்
காணான்,
விடுசுடர் மழுவொன் றேந்தி வேறிரு தடக்கைத்
தாய
வடுகளி றென்ன நின்ற வன்பரை முன்பு
கண்டான். 34 |
(இ-ள்.)
வெளிப்படை. (அரசர்) மிக்க வேகமாகப் போய்
யானையோடு பாகர்கள் இறந்துபட்ட களத்தினை அணுக
அடைந்தனர்; அங்கே பகைப்புலத்தவர்கள் ஒருவரையுங்
கண்டாரில்லை; ஒளிவீசுகின்ற ஒரு மழுவினை ஏந்தியதாய், வேறு
இரண்டு பெருங் கைகளையுடையதாய் அழிக்கும் யானைபோல
நின்ற அன்பரை முன்னே கண்டார்.
(வி-ரை.)
கடு - விசை - முடுகி - சேனைகள் ஊழிக்
காற்றினைப்போல மேன்மேல் வந்து எழுந்தன; அவை தாமும்
பின்வர முன்னே சென்றது அண்ணலம் புரவி; அதனை ஊர்ந்த
அரசரோ யார் செய்தார்? என்றுங் கேளாது எழுந்த அளவில்
சீற்றத்தின் நிலையினர். ஆதலின் கடு - விசை - முடுகி
என்று
மும்மடங்கு அடுக்கிக் கூறினார். விசை கடுவிசையாக, அதுவும்
முடுகியதாயிற்று என்க.
படுகளம்
- பட்டஇடம் - இறந்துபட்ட களம்.
பகைப்
புலத்தவர் - பகைவர். வேற்றுப் புலத்தவர். பகைப்
புலம் இங்குப் பகையாகிய நாட்டத்தினைக் குறித்தது. ஆன்மாவுக்குப்
பகையாகிய புலத்தவர். நின்றவர் உயிர்க்குப் பகையல்லா துறுதிதருங்
அன்பர் என்பதும் குறிப்பு.
விடுசுடர்
- சுடர் விடு எனமாற்றுக. தூரத்தே முதலிற்
காட்சிப் படவும் முதன்மை பெற்றும் விளங்கிற்று என்பதாம்.
கொலைமழு - (570)
எரிவாய் சிந்தும் அங்கையின் மழு
(572) என முன்னர்க் கூறியன காண்க.
மழு
ஒன்று - ஒருமழு. கைகளிரண்டாயினும் ஏந்திய
தொருமழுவே என்பது. ஒன்று - ஒப்பற்ற என்றலுமாம்.
வேறு
இரு - தடக்கைத்து ஆய அடுகளிறு தடக்கை -
பெரிய துதிக்கை. வேறு இரு - உவமித்த யானைத்
துதிக்கையின்
வேறாய தன்மை கொண்ட. எண்ணிக்கையில் இரண்டு; யானைத்
துதிக்கை ஒன்று - ஆனால் இரண்டு தன்மை கொண்டது. "இருகை
யானையை ஒத்து" - (திருவாசகம்) முதலிய திருவாக்குக்கள் காண்க.
ஆயின் இங்குக்கண்ட களிற்றினுக்குக் கைகள் எண்ணாலும்
தன்மையாலும் வேறு என்றபடி. இவரது இரண்டுகைகளும் யானைத்
துதிக்கை போன்றன என்பது. அடுகளிறு - தமது அடப்பட்டகளிறு
பட்ட களத்தில் அரசர் பகைப் புலத்தவரைக் காணார்; ஆனால்
ஒரு களிறே கண்டார்; அது அடுங்களிறாயிருந்தது; இருகைகளை
யுடைத்து; அவை வேறு தன்மையன - என்று தொடர்ந்து பொருள்
கொள்க. களிறு - முன்னர் முழையரி - (557), வாளரி -
(572)
எனச் சிங்கமாக உவமித்த ஆசிரியர் இங்கு நாயனார்க்குக்
களிற்றினை உவமித்ததென்னை? எனின், அடியார்க் கடாதன
அடுத்தபோது அவற்றை விளைக்கும் பொருள்களின் முன் எறிபத்தர்
நிற்கும் நிலையினை ஆசிரியர் தாங் கண்டவாறு உவமித்தலின் அரி
என்றார். யானையை அடர்த்து வெல்வது அரியேயாம். இடையூறு
யானை போன்ற எத்துனை வலியதேயாயினும் அரி போலக் கிளம்பி
அதனை எறியும் வலிமை பெற்றார் என்பது. ஆயின், ஈண்டு அரசர்
நாயனாரைக் கண்டவாறு தாமுங் கண்டு காட்ட வேண்டுதலின்
அடுகளிறு என்றார். அரசர் தமது யானையின்மேல்
வைத்த
விருப்பமே இங்குவரக் காரணமாயிற்று. அன்பரைக் கண்ட போதும்
அவ்வகை விருப்பமே முன்னின்றதாதலின் இவர் அவர் காட்சியிற்
களிறே போன்றார். கையொன்றே யுடைய யானையினும்
இருகையுடைய இவரை அதிக விருப்பத்துடன் கண்டாராதலின்
வேறிரு தடக்கைத் தாய என்றார். அன்பரைக்
கண்டார் என்ற
குறிப்பும் காண்க. அன்பர்களைக் காணிற் கசிந்துருக்கும் இவ்வரசரது
திறம் இவர் புராணத்துப் பின்னர்க் காண்க. வேறு இரு தடக்கை -
வடிவாலுங் குணத்தாலும் யானைக் கையின் வேறாந் தன்மை யுடைய
இரண்டு பெருங்கைகள் என்றது யானையின் ஒருகை இங்கு
அன்பர்க்கு அடாதன செய்யக் காரணமாயினதாக, இவ்விரு கைகள்
அவ்வறான்றி அன்பர்க்கு அரணும் ஏனையோர்க்கு முரணும் ஆயின
என்றதாம்.
அன்பரை
முன்பு கண்டான் - யானையினையும் பாகரையும்
எறிந்த பின்னர், அச்செய்தி கேட்டு அரசரும் சேனையும்
வருமளவும், வந்தபின்பும், அப்படுகளத்தினீங்காது நின்றதும் பின்னர்
அரசர் வெடிபட முழங்குச் சொல்லாற் கேட்டபோதுந் தான் செய்த
செயலை ஒரு சிறிதும் அஞ்சாது எடுத்துச் சொல்லுந்திறனும் (590 -
591), நாயனாரின் வீரத்தை மேலும் விளக்குகின்றன. "ஈர அன்பினர்;
யாதுங் குறைவிலார்; வீர மென்னால் விளம்புந் தகையதோ?"
எனத்திருக்கூட்டச் சிறப்பிற் சிறப்பாக எடுத்துக் கூறிய
அன்பரிலக்கணத்தை இங்கு எறிபத்தர்பால் வைத்துச் சிறக்கக்
காண்க.
பகைப்புலத்தவர்
செயலே இது என உட்கொண்டு
பெருஞ்சினத்துடன் வந்த அரசர், அவ்வாறு பகைவர் ஒருவரையும்
காணாராய்த் தம்மால் அன்பு செய்யப்பட்ட, தம்பிரான் றமராய
அன்பரையே கண்டார். ஆதலின் இது இவர் செய்தனர் என்ற
கருத்து அரசர் மனத்தில் உதிக்கவில்லை. ஆதலின் அவர் முன்பு
நிற்கக் கண்டும் யாவர்? என மேல் வினாவினார்.
இதனை வரும்
பாட்டிற்றொடர்ந்து விரித்தது காண்க.
சென்றான் -
காணான் - கண்டான் - என்றான் என்ற வினை
முற்றுக்கள் ஒன்றன்பின் ஒன்றாய் முற்றிய செயல்களாய் அரசன்
மனத்து உண்டாகிய நிகழ்ச்சிகளை ஓவியம் போலத் தீட்டிக் காட்டும்
சொல்லமைப்பின் அழகு காண்க.
முன்பு
- அரசர் காட்சியிலே முதலில். முதன்மையாக -
தேற்றமாக என்றலுமாம். களிற்றின் முன்பு என்று கூறுவாருமுண்டு.
வரும்பாட்டில் களிற்றின் முன்பு என்றலால் அஃதுரையன் றென்க.
முடுகிப்
பொங்கி - என்பதும் பாடம். 34
|