585.
பொன்றவ ழருவிக் குன்ற மெனப்புரள் களிற்றின்
                                 முன்பு
நின்றவர் மன்று ளென்று நிருத்தமே புரியும்
                               வெள்ளிக்
குன்றவ ரடியா ரானார்; கொன்றவ ரிவரென்  
                                றோரான்;
"வென்றவ ரியாவ?" ரென்றான்வெடிபட முழங்குஞ்
                               சொல்லான்.
 35

      (இ-ள்.) வெளிப்படை. பொற்சன்னங்கள் நீருடன் கலந்து
வருதற்கிடமாகிய அருவிகளையுடைய குன்று போலப் புரண்ட
யானையின் முன்னே நின்றவர் திருவம்பலத்திலே எப்போதும்
ஆனந்தக் கூத்தினையே பயில்கின்ற வரும், வெள்ளிமலையினை
யுடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு அடியவராயினார். ஆதலின்
இவர் யானையையும் பாகரையும் கொன்றவரென்று
நினைக்கமாட்டாதவராய், "வென்றவர் யாவர்" என்று வெடிபட
முழங்குஞ் சொல்லாற் கேட்டனர் (அரசர்).

     (வி-ரை.) குன்றம் - யானைக்கும், அருவி - அதனை
வெட்டிய ஊறினின்றும் வெளியோடும் குருதி நீரின் ஓட்டத்திற்கும்,
பொன்தவழ் என்றது அக்குருதியின் செந்நிறத்திற்கும்
உவமையாயின. பொன் - செம்பொன்னின் றுகள். வெட்டுண்டு
நேரஞ் சென்றமையானும், செந்நீரோடு யானையினது முன்னர்ப்
பொங்கிய களிப்பினோடும் பொழிந்த மத நீரும் (562)
சேர்ந்தமையானும், குருதியின் அடர்ந்த செந்நிறம் மாறி நீர்த்துச்
செம்பொன் னிறம் பெற்றுக் காண்டலின் பொன்றவ ழருவி
என்றார். இவ்வாறன்றி, இதற்குப் பொற்பட்டத்தோடு புரண்ட
என்றுரைப்பாரு முண்டு. ஈண்டு யானை பட்டமணிந்ததை
எடுத்துக்கூறாமை குறிக்க. குருதி கலந்த நிலப்புழுதி
யென்பாருமுண்டு.

     புரள் களிறு - மரணவேதனையாற் புரண்டயானை.
வெட்டுண்டுபட்ட உடற்குறை பின்னருஞ் சிறிது நேரம்
அவ்வேதனையாற் புரள்வது இயல்பாம். "மைவரை யனைய வேழம்
புரண்டிட" (575) என்ற மட்டில் முன்னர்க் கூறியதும் காண்க.

     மன்று - திருவம்பலம். நிருத்தம் - அருட்கூத்து. ஏகாரம்
தேற்றம். வெள்ளிக்குன்று - வெள்ளிமலை - கயிலை. (காரை -
புரா - 56; ஏயர்கோன் - புரா - 362).

     வெள்ளிக் குன்றவர் - வெள்ளிமலை; பனிமலையில்
இருக்கையுடையார் என்பாருமுண்டு.

     அவர் கூத்து இயற்றுமிடம் மன்று ஞானமயம். கூத்து
அருளும் இன்பமுமாகிய நிறைவு, அவர் இருக்கை வெள்ளிமலை.
அது புண்ணி யந்திரண் டுள்ளது போல்வது (12). இவர் அவரதன்பர்.
ஆதலின் நற்குண நிறைவுடையாராவர் என்பன குறிப்பு. பின்னரும்
அன்பராங் குணத்தின் மிக்கார் (587) என்று இதனையே
உட்கொண்டு கூறுதலும் காண்க.

     கொன்றவர் இவர் என்று ஓரான் - அடியாராதலின் இவர்
கொன்றிருப்பார் என்ற எண்ணம் தோன்ற மாட்டா தவராகி. ஓரான்
- ஓராராகி. முற்றெச்சம். ஓர்தலைச் செய்யமாட்டாராய். இவரென்று
ஓரான் என்ற எதிர்மறையெச்சம் இவரல்லர் என்று ஓர்ந்து என்னும்
பொருளில் வந்தது.

     வென்றவர் - கொன்றுவிட்டாராதலின் அவ்வளவில் வெற்றி
பெற்றாராய் எண்ணியவர் என்பார் வென்றவர் என்றார். எறிந்தவர்
- கொன்றவர் என்ற பொருளில் வந்தது. அடியார் ஆனார் -
(ஆதலால்) வென்றவர் யாவர் - என்க.

     வெடிபட - வெடித்தல் படுமாறு அதிர. சொல் வெடிபட
முழங்குதல் அளவில்லாத சீற்றத்தாலாயது. வெடி - இடி என்றும்,
பட
- கீழ்ப்பட என்றும் இடியும் கீழ்ப்படுமாறு முழங்கும் -
என்றலுமாம்.

     சொல்லான் - சொல்லினாலே, சொல்லையுடையவனாய்
என்பாருமுண்டு.

     ஓரானாய் - சொல்லான்- என்றான் - எனக் கூட்டிமுடிக்க. 35