586.
|
அரசனாங்
கருளிச் செய்ய வருகுசென் றணைந்து
பாகர்,
"விரைசெய்தார் மாலையோய்! நின்விறற்களிற்
றெதிரே நிற்கும்
திரைசெய்நீ ருலகின் மன்ன ரியாருளார்? தீங்கு
செய்தார்
பரசுமுன் கொணடு நின்ற விவ" ரெனப் பணிந்து
சொன்னார். 36 |
(இ-ள்.)
வெளிப்படை. அரசர் அவ்வாறு சொன்னாராகப்,
பாகர்கள் அவர் பக்கத்தே சென்று சேர்ந்து, "வாசம் பொருந்திய
மலர்மாலையும் மணி மாலையும் அணிந்தோய்! உனது வலிய
யானையின் முன்பு எதிர்த்து நிற்கவும் வல்லார் அலைகடல் சூழ்ந்த
உலக முழுவதினும் யாவர் மன்னர் உள்ளார்? அத்தீங்கு செய்தார்
மழுவாயுதத்தை முன்னே ஏந்தி நின்ற இவரேயாம்" என்று வணங்கிச்
சொன்னார்கள்.
(வி-ரை.)
ஆங்கு - அவ்வாறு. செய்தவர் தம் முன்பு
நிற்கவும் அவரல்லர் என்று கருதிய அப்படி.
அருளிச்செய்ய
- சொல்ல. மரபு வழக்கு.
பாகர்
- யானையுடன் வந்தோரில் வெட்டுண்ணாது தப்பிச்
சென்று அரசனுக்குச் செய்தியை அறிவித்த பாகர்கள். 577 - பார்க்க.
விரைசெய்
தார் - மணமுடைய பூமாலை. சோழருக்குரிய
அடையாள மாலை குறித்தது. கிளாமணித் தோளலங்கற்
சுரும்பினம் - (578) என முன்னர் இதனையே குறித்ததும் காண்க.
மாலை - மணிமாலைகள்.
மாலையோய்!
- சீற்றத்தாலும் வலிமையாலுங் கிளர்ந்த
மாலைத் தோளின் கிளர்ச்சி அடுத்தபடியிலேதணிந்து தாழ
உள்ளதாதலின் ஒய்வினையுடைய என்ற குறிப்பும் பெற, மாலையாய்
என்னாது மாலையோய் என்று கூறினார்.
"தாழ்ந்து பருவரைத்
தடந்தோள் மன்னன்" (591) என்றது காண்க. இக்குறிப்புப் பற்றியே
வரும்பாட்டில் இழிந்தனன் என்றதும் குறிக்க.
விறற்களிறு
- இதுவரையும் வெற்றியே பெற்ற வலிய யானை.
எதிரே
நிற்கும் - அதனைக் கிட்டிப் போர் செய்தல் நிற்க,
அதன் எதிரில் நிற்கத் தானும் வல்லவராகிய.
திரை
செய்நீர் உலகு - அலைகளையுடைய கடல் சூழ்ந்த
உலகம். "அடுத்து மேன்மேலலைத்தெழு மாழி" (312) என்றது
காண்க. வலிமையாலும் நீதியாலும் இவர்க்கு உலகிலே எவரும்
பகையிலர் என்பார் உலகில் என்றார். வரும்பாட்டிலும் உலக
மன்னன் என்றது காண்க.
மன்னர்
யாருளர்? - பகை யரசர் ஒருவரும் எதிர்த்து
நில்லாத வண்ணம் நீர்வென்று உலகங் காக்கும் தண்ணளிக் கவிகை
மன்னராததின் (583) இது செய்ய வல்லார் தேவரீர் கருதிக்
கேட்டபடி மன்னர் ஒருவருமிலர் என்றபடியாம்.
வினா இன்மை
குறித்தது. உலகில் எதிரே நிற்கும் மன்னர் யாருளர்? எனக் கூட்டுக.
தீங்கு
செய்தார் - இத்தீய செயல் செய்தவர். தீங்கு
செய்தார் மன்னர் யாருளர் எனவும், (வேறு யாவர் எனின்), தீங்கு
செய்தார் இவர் எனவும் முன்னும் பின்னும் கூட்டி உரைக்கச் சிங்க
நோக்காக இடையில் வைத்த அழகும் சொற்சுருக்கமும் காண்க.
முன்
பரசு கொண்டு என்க. தேற்றமாக இவர்களும்
மழுவினையே குறித்தது காண்க. இந்த மழுக்கொண்டு துணித்தனர்
என்ற குறிப்புமாம்.
பணிந்து
அரசரிடம் அறிவிக்கும் மரபு குறித்தது. பணிந்து
-
577 காண்க.
|