589.
|
செறிந்தவர்
தம்மை நீக்கி, யன்பர்முன் றொழுது
சென்றீ"
தறிந்திலேனடியே; னங்குக் கேட்டதொன்; றதுதா
னிற்க;
மறிந்தவிக் களிற்றின் குற்றம் பாகரோ டிதனை
மாள
வெறிந்ததே போது மோதா? னருள்செயு" மென்று
நின்றார்.39 |
589. (இ-ள்.)
வெளிப்படை. தம் பக்கத்து நெருங்கி
வந்தவர்களை யெல்லாம் விலகி நிற்கச் செய்து, அன்பராகிய
எறிபத்தர் முன்னே போய், "இதனை அடியேன் அறிந்திலேன்;
அடியேன் அங்குக் கேள்விப்பட்டது ஒரு செய்தி; அது நிற்க;
இறந்த யானையால் நேர்ந்த பிழைக்குத் தீர்வு பாகருடனே இதனை
மாளும்படி எறிந்த செயலே போதுமோ? அருளிச் செய்யும்" என்று
நின்றார் (அரசர்). 39
இவ்விரண்டு பாட்டுக்களும்
ஒரு முடிபு கொண்டன.
589.
(வி-ரை.) செறிந்தவர்
தம்மை நீக்கி - அந்தப்
படுகளத்தினிடை அரசர் செல்லஇடையூறாகச் சூழ்ந்த பரிசனங்கள்.
தன்னுடன் சேர்ந்த இந்திரியங்கள் ஆன்மாவை மயக்கி வினையிலே
வீழ்த்துவனபோல, உண்மை சொல்லாது தம்மை
அபசாரத்துக்குள்ளாக்கும் நிலையினால் இவர்கள் நீக்கத் தக்கார்
என்பார் நீக்கி என்றார். இங்கு நீக்கி
என்றது அவர்கள் தம்பாற்
செறியாது விலக்கி என்பதாம். அறியாமையால் ஏதேனும் விளைத்து
விடாதபடி விலக்கினார். சேனை வரவினை மாற்றினார் என்க.
எறிபத்தர் மனத்து வேறு எண்ணம் விளையாதபடி விலக்கினார்
என்பாருமுண்டு.
தொழுது
சென்று - தொழுதுகொண்டபடியே நடந்துபோய் -
சென்றுதொழுது என்னாது இவ்வாறு கூறியது அடியவர்பால் இவர்
ஒழுகிப் பயின்ற பண்பும் பணிவுங் குறித்தது. "கொழுநற்
றொழுதெழுவாள்" என்ற குறளிற்போலக் காண்க.
ஈது
- இது செய்தார் ஒரு அன்பர் என்ற செய்தி.
கேட்டது
ஒன்று - கேட்டது வேறு ஒன்று.
அங்கு
- அரண்மனையில். இங்குக் கண்டதுங்
கேட்டதுமாகிய இதனுக்கு மாறாகியது என்பது குறிக்க அங்கு
என்றார்.
அதுதான்
நிற்க - அது கிடக்க. சேனையும் தாமும் அங்கு
வரநேர்ந்தது பிழைபட்ட கேள்வியாலாகியது என்று அன்பர்பால்
தமது பிழையினை உணர்த்தும் குறிப்புப் பெற நிற்க -
என்றார்.
அச்செய்தி மனங்கொளவாராது ஒருபுறம் ஒதுங்கி நிற்பதாக; அதனை
விரிக்க வேண்டா - என்றபடி.
களிற்றின்
குற்றம் - இங்குப் பட்டார்கள் பட்டதற்குப் பாகர்
குற்றமே காரணமாயின் களிற்றினை எறியக் காரணமிரா தென்ற
அனுமானம் பற்றிக் களிறு குற்றம் செய்ததுண்டு என அரசர்
உட்கொண்டு கூறியதாம். யானை பூக்கூடையினைப் பறித்துச் சிந்திய
செய்தியினை அரசர் அன்பர் வாயிலாகப் பின்பே உணர நின்றார்
ஆதலின் இங்குக் களிற்றின் குற்ற மென்றது கருதலளவைப்
பொதுவறிவு பற்றி யென்பது. பாகர் பட்டதும் அவர்கள் செலுத்திய
யானையால் நிகழ்ந்திருத்தல் வேண்டுமென்று உட்கொண்டதும்
அவ்வாறேயாம். குற்றம் - முன்னர்ப் பிழைபடின்
அன்றி
- என்றும், என்கொலோ பிழை - என்றும்
கூறியன காண்க.
மாள
எறிந்ததே போதுமோ தான்? - மாள - மாளும்படி.
எறிந்ததாலே அவர் மாண்டனர் என முன்னர் உணர்ந்தாராதலின்
மாள எறிந்தது என்றார்.
போதுமோ
தான்? - என்கொலோ பிழை? என்றஞ்சி
அதனை அறியலுற்ற அரசர் நேர்ந்த பிழை யாது? என அன்பர்பால்
வினவாது எறிந்தது போதுமோ தான்? அருள் செய்யும் என்றார்.
இது பெரியோர்பாற் பொருள் வினவியறியும் மரபு. தான்
- எறிந்தது
தானும் போதுமோ என்க. தான் - அசை யென்பாருமுண்டு.
அருள்செயும்
- அன்பர்பாற் பிழைபட்டே மென்று
உட்கொண்டாராதலின் இவ்வாறு பணிந்திரந்தனர். பெரியோர்பாற்
கேட்கும் மரபுமாம்.
நின்றார்
- தொழுது சென்றதும், அருள்செயும் என்றதும்,
நின்றதும் பெரியோர் - திருமுன்பு ஒழுகும் ஒழுக்க முறை. இங்குப்
பிழைபாடு நேர்ந்தமையின் இவை மேலும் இன்றியமையா
ஒழுக்கமாயின. நிற்றல் - கட்டளையைக் கேட்கும்முறை.
39
|