591.
"மாதங்கந் தீங்கு செய்ய வருபரிக் காரர் தாமு
மீதங்குக் கடவு வாரும் விலக்கிடா தொழிந்து
                                பட்டா;
ரீதிங்கு நிகழ்ந்த" தென்றா ரெறிபத்த; ரென்ன,
                               வஞ்சிப்
பாதங்கண் முறையாற் றாழ்ந்து
             பருவரைத்தடந்தோண்மன்னன்,
 41

     591. (இ-ள்.) வெளிப்படை. "யானை தீங்கு செய்யவும்,
அதனோடு வருகின்ற குத்துக்கோற்காரர்களும், அதனை
மேல்கொண்டு செலுத்தும் பாகர்களும் அது தீங்கு செய்த காலத்து
அதனை விலக்கா தொழிந்தமையாலே இறந்துபட்டார். இதுவே
யிங்கு நிகழ்ந்தது" என்றார். அவர் அவ்வாறு சொல்லவே, பெரிய
மலைபோன்ற தடந்தோள்களையுடைய அரசர், அஞ்சி அவரது
பாதங்களில் முறைப்படி வணங்கி 41

     591. (வி-ரை.) மாதங்கம் - யானை. வருபரிக்காரர் -
யானையின் இருபுறமும் முன்னரும் வரும் குத்துக்கோற்காரர்.
பரிக்காரர் - (562) வெய்யகோற்பாகர் (575) என்றவை பார்க்க.

     மீது அங்கு கடவுவார் - யானையை மேலிருந்து
செலுத்தும் பாகர்கள். மிசைக் கொண்டார் இருவர் - (575)
பார்க்க. மேலிருந்து என்பார் மீது அங்கு - என்றார். மேல்
அவ்விடத்திருந்தபடியே. பரிக்காரர் ஓடிச் செலுத்துபவர்.

     விலக்கிடாது ஒழிந்து - (தமது கடமையின்
வழுவினர்களாய்), விலக்கா தொழிந்தமையால் - ஒழிந்த
காரணத்தால் - பட்டார் - எறியப்பட்டு இறந்தார். எறியப்படுதலும்
அதனால் இறந்துபடுதலும் எனக் காரணகாரிய மிரண்டுங் குறிக்க
ஒரு சொல்லாய் வைத்த அழகு காண்க. யானை முழு
அறிவுள்ளதன்றாதலின் அதனைத் தண்டித்து வீழ்த்திய செயல்
எவ்வளவேயாயிற்று என்னும் பொருள் பட வீழ்த்தேன் என்றார்.
இங்கு அறிவு முதிர்ந்த பாகர் தமது கடமையின் வழு
வினமையின்
தாங்கள் படுவதற்குத் தாமே காரணராயினதால் பட்டார் - என
அவர் செயலும் விரவக் கூறினார்.

     ஈது இங்கு நிகழ்ந்தது - அங்குக் கேட்ட தொன்று
என்று கூறி இங்கு நிகழ்ச்சி வேறாகக் காண்கிறேன். அது யாது?
என வினாவுவார் பணியுமரபுபற்றிய பிறிது மொழியால் எறிந்ததே
போதுமே தான்?
என்ற அரசருக்கு இதுவே இங்கு நிகழ்ந்தது
என்றறிவித்தபடியாம்.

     என்றார் - எறிபத்தர் - நேசராகிய (590) எறிபத்தர் என்று
சொன்னார் என முன் பாட்டொடு புணர்த்தி உரைக்க.

     என்ன - அவர் அவ்வாறு சொல்ல. இவ்வாறன்றி,
எறிபத்தரென்ன - என்று கூட்டி, இவ்வாறு சொன்னவர் எறிபத்தர்
என்று தெளிந்து என்றுரைப்பாரு முண்டு. அது பொருந்தாமையறிக.

     அஞ்சி - சிவாபராதமும் அடியவர்பா லபசாரமும்
நேர்ந்ததற்குப் பயந்து. முன்னரும் பிழையென்றஞ்சி என்றார்.
தீவினையச்சம் என நீதி நூலுள்ளும் விதித்தார். "அஞ்சுவ தஞ்ச
லறிவார் தொழில்" என்ற திருக்குறட் கருத்தும், திருவாசகத்து
அச்சப்பத்தில் மணிவாசகப் பெருமான் அருளியனவும் இங்கு
வைத்துக் காண்க.

     பாதங்கள் முறையால் தாழ்ந்து - எறிபத்தரது
திருவடிகளில் விதிப்படி வீழ்ந்து வணங்கி: "வயப்புரவி மேனின்"
றிழிந்தனராய்த் தொழுது சென்று, நிகழ்ச்சி கேட்டறியும் வகையால்
இதுவரை நின்றார் அரசர். இப்போது அவர் பாலே தீர்வு நேர்ந்து
பெறும் வண்ணம் கீழ் வீழ்ந்து வணங்கினார் என்பது குறிக்க
முறையாற் றாழ்ந்து
என்றார். முறை - தம்மைப் புனிதராக்கும்
பெரியாரை முன்னர் வணங்குதல் - ஐந்துறுப்பு - எட்டுறுப்புக்களால்
வணங்குதல் - மும்முறை முதலாக வணங்குதல் முதலியனவாக
நூல்களில் விதித்தமுறை.

     பருவரைத் தடந்தோள் - "அவருள்ளுஞ் செல்வர்க்கே
செல்வந் தகைத்து" (திருக்குறள்) என்றபடி வன்மை யுடையாரிடத்தே
பணிவு சிறப்பாய் வேண்டப்படுவது. ஆதலின் பருவரை - என்றும்,
தடம் என்றும் உவமையோடு அடைமொழியும் புணர்த்திக் கூறினார்.
முன்னர் உலகமன்னன் என்றதும் இக்குறிப்புப் பற்றியது. பருவரை
சலியாத தன்மையுடையது. அதுவுங் கீழ்ப்பட்டுப் பணியும் என்றதாம்.
41