592.
|
"அங்கண
ரடியார் தம்மைச் செய்தவிவ் வபரா
தத்துக்
கிங்கிது தன்னாற் போதா; தென்னையுங்
கொல்லவேண்டு;
மங்கல மழுவாற் கொல்கை வழக்குமன்; றிதுவா;ழு
மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக் கொடுத்தனர்
தீர்வு நேர்வார்.42 |
592.
(இ-ள்.) வெளிப்படை. "இறைவனிடத்தும்,
அவனடியார்களிடத்தும் செய்த இந்த அபசாரத்துக்கு இங்கு
இதுமட்டும் போதாது; என்னையுங் கொல்ல வேண்டும்; தேவரீரது
மங்கலம் பொருந்திய மழுவாயுதத்தினாலே கொல்லுதல் பொருத்தமு
மன்று; இது அதற்குத் தக்கது." என்று தீர்வினை நேர்வாராயச்
செவ்விய கையினாலே தமது உடைவாளை உருவி அவர் கையிற்
கொடுத்தனர். 42
இம்மூன்று
பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுபெற்றன.
592. (வி-ரை.)
அங்கணர் அடியார் தம்மை -
உம்மைத்தொகை. அங்கணர் தம்மையும் அடியார் தம்மையும் என
விரித்துக் கொள்க. "சிவகாமியாண்டார் - பன்னகாபரணர்ச் சாத்தக்
கொடுவரும் பள்ளித்தாமம் - பறித்துச் சிந்த" (590) என்று அவர்
அறிவிக்க அறிந்தாராதலின் இருவகையினும் அபசாரப்பட்டமை
தெரிந்த அரசர் இவ்வாறு கூறினார்.
தம்மைச்
செய்த - தமக்குச் செய்த. இரண்டனுருபு
நான்கனுருபுப் பகைப் பொருளில் வந்தது. வேற்றுமை மயக்கம்.
அபராதத்துக்கு
- குற்றத்துக்குத் தீர்வு - தண்டம். பிராயச்
சித்தம் என்பர்.
இது
தன்னால் - போதாது. இவ்வபராதத் தீர்வு பெறத்
தேவரீர் இங்குச் செய்த இத்தண்டம் போதியதன்று. அபராதத்துக்குப்
போதிய தண்டனையன்று. இச்சிறிய தண்டத்தால் அப்பெரிய
அபராதம் தீர்வு பெறாது என்றபடி. ஆதலின் எனவருவிக்க.
என்னையும் கொல்லவேண்டும்" எனப் பின்வகுத்துக் கூறுதற்குக்
காரணங் கூறியதாம். அரசாங்கத்தார் செய்யும் எவ்வகைத்
தீர்ப்புக்கும் காரணங் காட்டிச் செய்தல் வேண்டுமென்ற இந்நாள்
நீதிமுறை விதியுங்காண்க. என்னையும் கொல்லவேண்டும்
-
சிவாபராதம் விளைத்த யானையினையும், அறியாப் பாகரையும்
வைத்திருந்தமையால் - இவ்வபசாரத்துக்குத் தாமும் பொறுப்புள்ளவர்
என்றமையாலேஅதற்குத் தீர்வாகத் தன்னையும் கொல்லவேண்டும்
என்றார். தாமே அரசரும் பேரடியாரும் ஆதலின், அடியார்
நிலையினின்று குற்ற நிச்சயமும், அரசர் நிலையினின்று
அக்குற்றத்துக்குத் தக்க தண்ட நிச்சயமும் தாமே வகுத்திவ்வாறு
முடித்தனர்.
மங்கல மழுவால்
கொல்கை வழக்கும் அன்று -
அடியவர் கையில் ஏந்தியது மங்கலமாயது. துய்மையுடையது.
அதனாற் றண்டிக்கப்பட்டுப் பேறு பெறுந் தகுதி தமக்கில்லை.
ஆதலின் அது வழக்கன்று. தகுதியில்லாமையுடன் வழக்கும் அன்று
என உம்மை இறந்தது தழுவிய எச்சஉம்மையுமாம். தண்டநெறி
வழக்கு நெறியினைப்பற்றி நின்றதென்ற குறிப்பும் காண்க.
"பிள்ளையார் தந்திருக்கையிற் கோலமழுவா லேறுண்டு குற்ற நீங்கி"
என்று சண்டீசநாயனார் புராணத்துக் கூறுதல் காண்க. இதனால்
அரசர் அடியார்களிடத்தில் வைத்த உயர்ந்த நோக்கமும்,
தம்தாழ்வினிடத்தே வைத்த பிறநோக்கமும் புலப்பட்டமை காண்க.
அடியார் முன்பு மிகச்சிறியரா யடையும் பொதுப் பண்பு
நிலையேயன்றி இங்கு நேர்ந்த சிவபராதத்தாலும் தம்மை மிகக்
கீழாகக் கருதி யிவ்வாறு கூறினார் என்க.
மங்கலமழு
- மங்கலமுடையது
- மங்கலஞ் செய்வது.
சிவபெருமானது ஆயுதமாதலும் குறிப்பு.
இது
- ஆம் - இதுவே வழக்குஆம். இது என்ற சுட்டு
உடைவாள் வாங்கி நீட்டும் செயலைச் சுட்டியது. இதனைச்
சொல்லாலன்றிச் செயலால் நாடகச் சுவை பெறக் காட்டியதோர்
கவிநயமாமென்க. அரசர்க்கு இச் செயலில் இருந்த தீவிரங் குறித்தது.
இனி, இது என்ற சுட்டுவாங்கி நீட்டும் உடைவாளைச்
சுட்டியதென்று
கொண்டு, மங்கலமழுவினால் எறிந்துபட நான் தகுதியில்லேன் -
என்னைத் தண்டிக்க இந்த வாளே தக்கது என்று பொருள்
கொள்பவருமுண்டு.
உடைவாள்
செங்கையால் வாங்கி என மாற்றுக.
உடைவாள் தமது அரையிற் றூங்கிய நீண்டவாள். வாங்கி
உறையினின்றும் உருவி எடுத்து. உறைகழித்தெடுத்து.
தீர்வு
நேர்வார் - தமது குற்றத்துக்குத் தக்க கழுவாய்
நேர்படுபவராய். முற்றெச்சம். நேர்வார் - கொடுத்தனர் என்க. தீர்வு
சிவாபராதத்துக்குரிய நரக முதலிய கொடுமை நேராமல்
இத்தண்டத்தாலே - தீர்த்தல். கழுவாய் - உய்வு - உய்தி யென்பர்.
இங்கிவை
தம்மாற் போதா - என்பதும் பாடம். 42
|