597.
வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்தி நிற்ப
அளவிலாப் பரிவில் வந்த விடுக்கணை யகற்ற
                               வேண்டிக்
களமணி களத்துச் செய்ய கண்ணுத லருளால்
                               வாக்குக்
கிளரொளி விசும்பின் மேல்வந் தெழுந்தது பலருங்
                               கேட்ப,
   47

     597. (இ-ள்.) வெளிப்படை. தாம் கொண்ட வாளினையும்
கையினையும் வளவனார் (தாம் துணிந்த செய்கையைச் செய்ய)
விடாமற் பற்ற, அதனாற் பெருந்தவராகிய எறிபத்தர் வருந்தி நிற்க,
இவ்விருவரிடத்திலும் அளவற்ற அன்பு காரணத்தினால் வந்த
இடுக்கணை நீக்கும் பொருட்டு, விடத்தை யணிந்த கண்டத்
தினையுடைய செம்மைதரும் கண்ணுதற் பெருமா னருளினாலே
(ஞான) ஒளிகிளரும் விசும்பிற் பலருங் கேட்குமாறு எழுந்ததாகிய
திருவாக்கானது, 47

     597. (வி-ரை.) முன்பு அன்பனார் என்றது நாயனார்
மனத்துள் எண்ணியநிலை. இங்கு வளவனார் என்றது ஆசிரியர்
அரசரைக் குறித்துக் கூறும் நிலை. முன்னர் வேந்தன் - (593)
அரசன் - (596) என்ற ஆசிரியர், இங்கு அன்பனார் - (595) என்ற
நாயனார் குறித்தற் கேற்பத் தாமும் வளவனார் என்றது காண்க.
முன்னர்ப் பன்மையிற் கூறிய மன்னனார் - (594) என்றதும்
இக்கருத்தே பற்றியது.

     விடாது பற்ற - தாம் நினைத்தபடி செய்ய விடாமற் பிடிக்க.

     மாதவர் - இறையவர்க்குரிமை பூண்டார்க்கு அருட்பெருந்
தொண்டு செய்வார் (556), அன்பின் மிக்கார் (598), சடையவர்
பொற்றாளில் ஆனாத காதலன்பர் (607) ஆதலின் மாதவர் என்றார்.
அன்பாற் செய்யுந் தொடண்டே - பெருந்தவமா மென்பது . "நெக்கு
நெக்கு நினைபவர்" எனும் வாகீசர் தேவாரம் காண்க.

     வருந்தி நிற்ப - அன்பனார்க்குத் தீங்கு நினைந்தேன்
எனும் எண்ணத்தை வருவித்த தீமைக்குத் தீர்வு தாமே செய்து
கொள்ள விடாது அந்த அன்பனார் தாமே தடுத்து நின்றனர் என்ற
வருத்தம்.

     அளவு இலா பரிவில் வந்த இடுக்கண் - இடுக்கண்
அன்பின்மையால் நிகழ்வது இயல்பு. ஆயின் இங்கு இவ்விருவர்க்கும்
நேர்ந்த அச்சமும் (அஞ்சி - 591, அஞ்சி - 594,) அது காரணமாகத்
தம் உயிரைக் கொடுக்க நேர்ந்தமையும், அது தடைபட்டமையும்,
அதனால் உண்டாயின மனவருத்தமும், பிறவுமாகிய இடுக்கண்கள்
அளவுட்படாத - எல்லையில்லாத - அன்புடைமை மீக்கூர்தலின்
உண்டாயின. ஆதலின் பரிவில் வந்த இடுக்கண் என்றார்.

     களம் அணி களம் - சொற்பின் வருநிலை. சொல்லணி.
களம்
- (முன்னையது) கறுப்பு. அந்நிறமுடைய விடத்துக்காயிற்று,
பண்பாகு பெயர். களம் - (பின்னையது) கழுத்து - மிடறு. எனவே
விடத்தைப் போனகமாக நுகர்ந்து அதனையே அணிகலமாக
அம்மட்டில் நிறுத்திக் காட்டிய கழுத்து என்க. ‘கறைமிட றணியலு
மணிந்தன்" என்றலுங் காண்க. தீருறுநீலகண்டம். களம்
களத்தணிந்தது கொடிய ஆலகாலவிடத்தினால் தேவர்களுக்கு
நேர்ந்த இடரை நீக்க. இங்கு அடியா ரிருவருக்கும் அன்பினால்
விளைந்த பரிடுக்கணை நீக்க ஆகாயத்தில் திருவரக்கு
எழுவித்தலால் இங்ஙனங் கூறினார்.

     செய்ய கண்ணுதல் - செய்யகண் - செம்மைதருங் கண் -
அருட்பார்வையினால் உயிர்களை ஈடேற்றும் கண். கண்ணுதல் -
கண்ணைக் கொண்ட நுதலை உடையோன், அன்மொழித்தொகை.

     செய்யகண் - இந்தக் கண் தீயாதலின் சிவந்தகண்
என்றலுமாம், "பொங்குமனல் சிவப்பு" என்பது சாத்திரம். இந்தக்
கண் ஒருகால் காமனை எரித்ததேனும் அதுவும் அருளேயாம்.
"வல்லிருளா யெல்லா வுலகுடன்றான் மூடவிருளோடும் வகை நெற்றி
யொற்றைக்கண் படைத்துகந்த உத்தமன்" - (திருக்கலய நல்லூர் -
பண் - தக்கராகம் - 4) - என்ற சுந்தரமூர்த்திசுவாமிகள்
தேவாரத்திற் குறித்தபடி உலகிற் பரந்த வல்லிருளை ஓட்டும்
வகையிலே திறந்தருளியது இந்நுதற்கண். "செற்றங் கனங்கனைத்
தீவிழித் தான்றில்லையம்பலவன், நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு
மற்றினிக் காண்பதென்னே" - என்று அப்பர் சுவாமிகள் இதன்
அருட்டிறத்தை விளக்கியருளினார். இங்கு இருவர்பாலும் நேர்ந்த
இடுக்கணை யகற்றும் அருள்கொண்டு திருவாக்கு எழுதலால்
களமணி
களம் என்றதனோடு கண்ணுதல் என்ற இவ்வியல்பாலும்
இறைவனை எடுத்துக் காட்டினார். இருவர்க் கருள்செய்தலின்
இரண்டு அருட் செயல்கள் உடன் காட்டப்பட்டன.

     அருளால் - இருவர்பாலும் இடுக்கண் தீர எழுந்ததாதலின்
அருளால் என்றார்.

     எழுந்தது - வாக்கு - எழுந்ததாகிய வாக்கு. வரும்பாட்டில்
என்று பலருங்கேட்ப அங்கு எழுந்தது என முடிந்தது. இங்கு
எழுந்தது
திருவருள் எங்கும் பரந்த நிலையினின்றும் கூர்ந்து
ஓரிடத்து வந்த தொடக்கநிலை. வரும் பாட்டில் எழுந்தது என
முடிந்தது அதனைப் பலரும் கேட்கும்படி முடிந்து நின்றநிலை.

     ஒளி கிளர் விசும்பு - என மாற்றுக. ஒளி - ஞானவொளி, 
இங்குப் பலருங்கேட்ப எழுந்து இறைவனது திருவருளின் ஞானத்தை
உணர்த்தலால் ஒளி கிளர் என்றார். ஞானாகாயம் இறைவனது
திருமேனி யாதலால் அதினின்றும் ஞானவாக்கு எழுந்ததென்க.
இவ்வாறன்றி ஞாயிறு - மதி - மீன்கள் - முதலிய பல
ஒளிப்பொருள்களும் கிளர்ந்து செல்வதற்கிடமாகிய ஆகாயம்
என்றுரைப்பாரு முண்டு.

     பலருங் கேட்ப - இச்செயல் "தொண்டினை மண்மேற்
காட்ட அருளினாற் கூடிற்று" என்று வரும்பாட்டிற் காண்கின்றோம்.
"காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" என்றபடி பலரும்
கேட்ப அறிவித்தாலன்றி மண்ணோர் காண்பதும் அறிதலும் இல்லை.
உலகிற் பரந்த வல்லிருளை ஓடத்துரந்து ஒளி காட்டிய கண்ணுதல்
அவ்வருட் கண்ணாற் கண்டு உலகிற்குக் காட்டினார் என்பார்
பலருங் கேட்ப
எழுந்த (தாகிய) வாக்கு என்றார். கண்ணுதல்
என்றதனாற் போந்த சிறப்பை இதனாலும் காண்க.

     மாதவர் வருந்துகின்ற என்று பாடங்கொண்டு, மாதவர்
என்றது இவ்விருநாயன்மார்களையும் உணர்த்தியதாக
உரைப்பாருமுண்டு. 47