599.
ஈரவே பூட்டும் வாளை விட்டெறி பத்தர் தாமு
நேரியர் பெருமான் றாண்மேல் விழுந்தனர்;
                         நிருபர் கோனும்
போர்வடி வாளைப் போக எறிந்தவர் கழல்கள்
                               போற்றிப்
பார்மிசைப் பணிந்தான்; விண்ணோர் பனிமலர்
                          மாரி தூர்த்தார்.
 49

     (இ-ள்.) வெளிப்படை. தம் கழுத்தினை எவ்வாற்றானும்
அரியும்படி பூட்டிய வாளினை விட்டு எறிபத்தரும் சோழர்
பெருமானுடைய பாதங்களில் விழுந்தனர்; அரசர் பெருமானும் (தமது
கைப்பிடியினுட்பட்டுநின்ற) போருக்குவல்லதாய் வடித்த
அவ்வாளினைப் போக எறிந்துவிட்டு எறிபத்தரைத் துதித்து அவரது
திருவடிகளில் நிலமிசை விழுந்து பணிந்தனர்; தேவர்கள் குளிர்ந்த
பூமழையை நிறையப் பொழிந்தார்கள்.

     (வி-ரை.) ஈரவே - ஈரும் பொருட்டாகவே முழுதும் கருதி.
தேற்றேகாரம் அவரது துணிபுணர்த்தியது.

     வாளைவிட்டு - ஈர்வதற்கென்றே கழுத்திற் பூட்டினாராயினும்
எந்தத் தீர்வின் பொருட்டுப் பூட்டி அரியலுற்றனரோ அது
வேண்டப்படாமை திருவருள் காட்டிற்றாகலின் தாம் துணிந்த
அக்காரியத்தினையும் விட்டு என்றபடி. அது கொண்டு ஈர்வதற்கே
துணிந்தாராயினும் அந்த வாளினை. விட்டு - வாளைப்பற்றியிருந்த
பற்றை விட்டு. வடி - கூர்மையுமாம்.

     எறிபத்தர் தாழம் - ஆளரிப்போன்ற அவரும். உயர்வு
சிறப்பு. தாமும் வீழ்ந்தார் - கோனும் பணிந்தார் என எச்சவும்மை.
அருள் வாக்குக் கேட்டோரில், இந் நிகழ்ச்சி சிவனருளால்
நிகழ்ந்ததென்றுணரப் பெறாது சிவாபராதமாக நிகழ்ந்ததென்று
பிறழவுணர்ந்து முன்னர்ச் செயல் செய்தவர் தாம் எண்ணியபடி
யானையும் பாகரும் அபராதஞ் செய்யவில்லை என்று கண்டமையால்,
இவ்வறிவு பெறவும் திருவருள் வெளிப்படவும் கருவியாயிருந்த
அரசரது தாளில் எறிபத்தர் முதலில் விழுந்தனர். முன்னர் அன்பர்
என்ற பொதுநோக்கால் பாதங்கள் முறையிற்றாழ்ந்த - (591) அரசர்
இப்போது திருவருள் வெளிப்படக் கருவியாயின வீரமுடைய
பேரன்பர் எனச் சிறப்பு வகையால் உணர்ந்தமையாற் பார்மிசை
வீழ்ந்து எறிபத்தரது கழல் பணிந்தார்

     நேரியர் - நேரி - சோழர்களுக்குரியமலை,
நேரிமலையையுடையவர் - சோழர்.

     போர்வடிவாள் - போரில் வெற்றியே பெறும் தமது
வடிக்கப்பெற்ற உடைவாள்; வாளினைப் பற்றிய பற்றை எறிபத்தர்
விடவே, அவர் கையையும் வாளினையும் கூடிப் பிடித்த அரசர்
கையில் வாள் நின்றது; அதனைப் போக எறிந்து என்க.
உடைவாளை எப்போதும் கொள்வதே யியல்பாதலன்றிப் போக
எறிதல் அரசரது இயல்பன்று. ஆயின் இங்கு அரசராந்தன்மை யன்றி
அடியராந் தன்மையில் நின்றனராதலின் போக எறிந்தனர் என்க.

     வாள்விட்டெறிபத்தர் தாழமந்த - என்பதும் பாடம். 49