600.
|
இருவரு
மெழுந்து வானி லெழுந்தபே ரொலியைப்
போற்ற
அருமறைப் பொருளா யுள்ளா ரணிகொள்பூங் கூடை
தன்னின்
மருவிய பள்ளித் தாம நிறைந்திட வருள மற்றத்
திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமி யாரு
நின்றார். 50 |
(இ-ள்.)
வெளிப்படை. இருவரும் எழுந்து நின்று, வானில்
எழுந்த அந்தப் பெரிய திருவாக்கின் ஒலியைப் போற்றினார்களாக,
அருமறைப் பொருளாயுள்ள சிவபெருமான் அழகிய பூங்கூடையில்
முன் பொருந்திய திருப்பள்ளித்தாமம் நிறைந்திடும்படி அருள்செய்ய,
மற்ற அந்தத் திருவருட் செயலைக் கண்டு பெரு வாழ்வடைந்தாராய்
மகிழ்ந்து சிவகாமியாண்டாரும் நின்றனர்.
(வி-ரை.)
பேரொலி - பலருங் கேட்க மேல் வந்ததெழுந்த
திருவாக்கின் பெரிய ஒலி. ஒலி - சுத்தமாயை முதற்காரணமாகிய
எழுத்தொலி. இங்கு அவ்வொலி எல்லாவற்றிற்கும் நிமித்த
காரணமாகிய இறைவனிடத்தினின்றும் போந்தபடியாற் பேரொலி
எனப்பட்ட தென்றலுமாம்.
ஒலியைப்
போற்றுதல் - சிதாகாயத்தினின்று மெழுந்த
அருணாத வொலியாகலின் அதனை எழுவித்த திருவருளினைத்
துதித்தல். பேரொலி என்பது வாக்கையுணர்த்தலால் ஆகுபெயர்.
மறைப்பொருள்
- வேதங்களாற் பேசப்பட்ட பொருளாவார்.
வேதங்கள் நுதலிய பொருள்.
அணிகொள்
பூங்கூடை - கோலப் பூங்கூடை (560) என்றது
காண்க. அணி கொள்ளும்வகை முன்னர் உரைக்கப்பட்டது.
இறைவனுக்கு அழகுசெய்யும் மலர்களை அணியாகியவைகளைத்
தன்னகத்துக் கொள்ளும் என்றலுமாம்.
மருவிய
பள்ளித்தாமம் - தெய்வ நாயகர்க்குச் சாத்தும் -
நல்லகமழ் முகை - அலரும் வேலை - தெரிந்து கொய்து நிறைத்த
வகையால் (559) முன்னர் மருவிய - அவ்வாறே அமைந்த என்க.
நிறைந்திட
அருள - சினக்கரி பறித்துச் சிந்திய அந்த
மலர்கள்,
கீழே நிலத்திற்சிந்தியனவாதலின்
விதிப்படி பூசைக்குதவா
வாயின. அது பற்றியே சிவகாமியார் கையாற் றரையடித்து வருந்தி
முறையிட்டனர். கீழே நிலத்தில் விழுந்த மலர் பூசைக்காகா என்று
விதியிருப்பவும் இந்நாட் பலரும் பூசைக்குரிய பூக்களைக் கீழே
போட்டும் உதிர்த்தும் பின்னர் அவற்றையே பூசைக்குதவியும்,
நிலத்தில் வீழ்ந்த மலர் - இலைகளை - எடுத்தும் அபசாரம்
செய்கின்றார்கள். இது பணியாகுமா? இஃதென்ன பாவம்! என்ன
கொடுமை! பூத் திருப்பணி செய்வாரும் செய்விப்பாரும் இதனை
அறிந்து திருந்தச் செய்வார்களாக.
ஆயின் இங்குத்
திருமலரைக் கரி சிந்த அருளியதும்
அத்திருவருளே. பின்னர் அவற்றையே நிறைந்திட அருளியதும்
அத்திருவருளே. ஆதலின் அவை நிலத்திற் சிந்தப்பட்டனவாயினும்,
அந்நிலனும், பலர் மிதித்து நடக்கும் தெருவும் பின்னர்ப் பலர்
பட்டு வீழ்ந்த படுகளமும் ஆயினும், முன்குறித்த அவ்விதி இங்குப்
பொருதாதாயிற்று. அந்த மலர்கள் திருவருளாற் சிந்தவும்,
நிறையவும்பெற்று இருமுறையும் புனிதமாகி இறைவன் பணிக்கு
உகந்தனவாயின. அதனாலே சிவகாமியாரும் வாழ்ந்து தம்பிரான்
பணி மேற்கொண்டு - சார்ந்தனர் (604) என்க. இவரது பணி
முட்டுப்படாது நிறைவேறிய வழியே திருவருட்டிறம் இங்கு முற்ற
நிறைவெய்திய தாகும். அப்பணி முற்றியதனாலே அது கண்டு
வாழ்ந்து அவரும் நின்றார் என்க. நியதியான திருப்பணி
முட்டுப்படின் வாழார் என்பது குறிப்பு.
மற்றத் திருவருள்
கண்டு -
வாக்கு எழுந்ததும் பாகரோடு
யானை எழுந்ததும் திருவருட் செயல்களேயாயினும் அன்பராகிய
சிவகாமியார் அவை கண்டும் பொதுவகையான் வாழ்வடை
வாராயினும்தமது பணி முட்டாது நிறைவேறிய வழியன்றி அவர்
தமது வாழ்வு வாழ்வாகக் கருதிச் சிறப்பாக மகிழாராதலின் மற்று
- அ - திருவருள் கண்டு என மற்று என்ற வினைமாற்றுச்
சொல்லும், அ என்ற சிறப்புச் சுட்டும் புணர்த்து ஓதியதுடன் மற்ற
இருவரைப்போலப் போற்றி என்னாது வாழ்ந்து
என்றும் கூறினார்.
வாழ்ந்து
- புத்துணர்வு பெற்று என்றுரைப்பாரு முண்டு.
சிவகாமியாரும் - அவர்களோடு இவரும் என
இறந்தது தழுவிய
எச்சவும்மை.
வாழ்ந்து
நின்றார் - மலர் சிந்தக் கண்டபோது கையாற்
றரையடித்து நின்று (565) சிவதா என நின்ற
அவர், இங்குத்
திருவருளால் மலர்நிறைந்திடக் கண்ட போது வாழ்ந்து நின்றார்
என்பது.
சங்கார முறையினைப்
பின்பற்றியே புனருற்பவ முறை
நிகழுமாதலின் அம்முறையே முதலில் நிகழ்ந்த செயலாகிய கூடை
நிறைந்த மலர்சிந்தியது, சிந்திய மலர் கூடையில் நிறைதலாகி,
இறுதியில் நிறைவெய்தியது. முன்னர் (598) உரைத்தவையும் இது
பற்றித் திருவாரூர்த் திருநகரச் சிறப்பி லுரைத்தவையும் காண்க.
மேற்பாட்டிலே
இரு பெருமக்களில் அவ்வவரும் தத்தம்
நிலையினின்று அடியார்களைப் பணிதலாகிய செயலைக் கூறி,
இங்குப் பேரொலி போற்றலாகிய அரன்பணியை இப்பாட்டிற்
கூறினார். அடியார் பணி - அரன் பணி என்ற இரண்டும் செய்தலில்
அடியார் பணியே முன்னர்ச் செய்யத்தக்கது என்பது குறிப்பு. இவை
பற்றி விறன்மிண்ட நாயனார் புராணத்தும் (495) பிறாண்டும்
உரைத்தவை காண்க. அசிந்திதனாகிய சிவனைச் சிந்திதனாகக்
கண்டு வழிபடுக என்பது சாத்திரம். சிவனை விசுவ ரூபனாகக்
கண்டு வழிபடுதலில், உலகம், சரம் அசரமென இருவகைத்தாகி
நிற்க, அவற்றில் அசர ரூபமாகிய இலிங்கத் திருமேனியுள்ளும்,
சரரூபமாகிய குருவினுள்ளும், அடியாருள்ளும் சிவன்
விளங்குபவனாம். சித்துருவாகிய இருவருள்ளும் தம்மை யடைந்த
பக்குவர்க்கே யருள்பவர் குரு; அடியார்கள் எல்லார்க்கும்
அருள்பவர்களாதலால் முதற்கண் வழிபடப்படுவர் என்பது
நூற்றுணிபாம். 50
|