602.
ஆனசீர்த் தொண்டர் கும்பிட் "டடியனேன் களிப்ப
                                    விந்த
மானவெங் களிற்றி லேறி மகிழ்ந்தெழுந் தருளு"
                                  மென்ன
மேன்மையப் பணிமேற் கொண்டு வணங்கிவெண் 
                               குடையினீழல்
யானைமேற் கொண்டு சென்றா ரிவுளிமேற் கொண்டு
                                  வந்தார்.52

     (இ-ள்.) வெளிப்படை. ஆயின சிறப்புடைய தொண்டராகிய
எறிபத்தர் அரசரைக் கும்பிட்டு, "அடியேன் கண்டு களிக்கும்படி
இந்தப் பெரியதும் விருப்பத்தைத் தருவதுமாகிய யானையின்மேல்
ஏறி மகிழ்ச்சியுடன் இனி உமது அரண்மனைக்கு எழுந்தருளக்
கடவீர்" என்று சொல்லக், குதிரையேறி வந்தாராகிய மன்னவர்
மன்னர் மேலோராற் றரப்படும் மேன்மை தங்கிய அந்தக்
கட்டளையை ஏற்று, மேற்கொண்டு, அவரை வணங்கி
வெண்குடையின் நிழலிலே யானையினை மேற்கொண்டு சென்றனர்.

     (வி-ரை.) ஆனசீர் - சரித நிகழ்ச்சியிற்றுணை நின்ற சிறப்பு
அரசருக்கு முன்னையினும் சிறந்த கீர்த்தியை உண்டாக்கியதனால்
ஆனசீர்
என்றார் என்றுரைப்பாருமுண்டு.

     அடியனேன் களிப்ப என்றது திருவருட் கிலக்காகி நின்ற
பேரன்பரை யானையின்மீது பவனிவரக் கண்டு களிக்க வேண்டு
மென்று எறிபத்தர் கொண்ட ஆசை மிகுதியினை உணர்த்திற்று.
முன்னர் மங்கலவிழவு கொண்டு (562) மாநவமி முன்னாளாகிய
அந்நாளிலேவந்த அந்த யானை அவ்விடை இந்நிகழ்ச்சியால்
தடையுண்டு நின்றதாக, அரசரும் அன்பருமாகிய தன் முதல்வனைத்
தன்மேற் கொண்டு மங்கலவிழாக்கொண்டு உலாப்போதல்
தகுதியுடையதாம் என்பதும் எறிபத்த நாயனார் திருவுள்ளமாம்.
அடியார்கள் திரண்டு ஆளுடைய பிள்ளையாரை யானையின்மீது
திருவுலாப் போதுமாறு விண்ணப்பித்த கருத்தினைத்
திருவுலாமாலையில் நம்பியாண்டார் நம்பிகள் அமைத்ததனை இங்கு
நினைவு கூர்க.

     இந்த மான வெங் களிறு - இந்த - இறைவனது பேரருள்
வெளிப்பாடு பெறக் கருவியாதற் குரிமைபெற்ற உயர்வுடையதாய்
இங்கு அணைய வந்து நிற்கின்ற என அண்மைச் சுட்டுச் சிறப்பும்
உணர்த்திற்று. மானம் - உயர்வு. உருவாலும் திருவாலும் உயர்வு
குறித்தது. மானம் - வலிமை என்பாருமுண்டு. வெம் - விருப்பம்
பெற்ற - விரும்பிய. அரசர்க்கு இதன்மீது உள்ள விருப்ப மிகுதி
முன்னர்க் குறிக்கப்பட்டது (584). இங்கு இஃது அதனை முன்னர்க்
கடிந்த சிவகாமியாண்டார், எறிபத்தர் உள்ளிட்ட யாவராலும்
விரும்பத் தக்கதாயிற்று.

     மேன்மை - மேலாயின. அன்பராங்குணத்தின் மிக்காரால்
(587) இடப்பட்ட பணியாகிய மேன்மை.

     வணங்கிய - பெரியோராயின சீரன்பரின் முன்னே
வாகனமூர்ந்து செல்லுதல் முறையன்றாதலின் அவர்
இட்டகட்டளையை மேற்கொள்ளும் வகையாலே யானையினை
அவர் முன்பு ஊர்ந்து செல்ல ஒருப்பட்டமைகின்றாராதலின் அவரை
வணங்கினார். அன்றியும் அவர்பால் விடைபெறுகின்ற குறிப்புமாம்.

     யானை மேல்கொண்டு சென்றார் - இறைவரது திருவருட்
பிரசாதமாகிய யானையின்மீது அரசர் அன்பர் பணிப்ப ஏறினார்.
இறைவனருளிய முத்துச் சிவிகையினை ஆளுடையபிள்ளையார்
மேற்கொண்டதும், வெள்ளை யானையை ஆளுடைய நம்பிகள்
மற்கொண்டதுமாகிய, அவரது ஆணையின் வழியே நிகழ்ந்த
சரிதங்களை நினைவுகூர்க.

     இவுளி - குதிரை. அரசர் வந்தநிலை வேறு; இப்போது
செல்லுநிலை வேறு என்று குறிப்பார் இவுளி மேல் கொண்டு வந்தார்
யானைமேற்கொண்டு சென்றார் என்றார். மேற்சரித நிகழ்ச்சிகளை
எல்லாம் இங்கு வைத்து நினைவு கூர்க.

     களிற்றையேறி மனமகிழ்ந்து - என்பதும் பாடம். 52