(இ-ள்.)
வெளிப்படை. அந்நிலையிலே, எழுச்சி பெற்ற
சேனைகள் எழுகடல்களும் ஒன்று சேர்ந்தொலித்தாற் போன்ற
ஓசையோடு ஆரவாரிக்கவும், உலகத்தார் எவரும் மகிழ்ச்சியோடு
வாழ்த்தவும் நெடிய பொன்னம்பலத்தே நித்தமாகிய திருக் கூத்து
ஆடுகின்ற இறைவனது திருவடிகளைச் சிரத்திற் றரித்தவராய்ச்
சோழர் தமது திருவளரும் கோயில் புகுந்தனர்.
(வி-ரை.)
அந்நிலை - அரசர் பெருமான் தமது
பட்டவர்த்தனத்தினை மேற்கொண்டு செல்லக் கண்ட அந்த
நிலையிலே.
ஆர்கலி
ஏழும் ஒன்றாய் மன்னிய ஒலி - முன்னர்த்
தனித்தனி ஆர்த்த சிறப்புக் கூறினார். இங்குச் சேனை வகைகளும்
இயங்களும் முழுதும் ஒன்றாய்ச் சேர்ந்து ஆர்த்த நிலையினைக்
கூறுகின்றார். 582 - உரை பார்க்க. ஆர்கலி - கடல். எப்போதும்
ஒலி நிறைந்தது என்ற பொருளில் வந்த காரணப் பெயர் போலும்.
மிக்க ஓசைப் பண்பில் உவமை கூறினாராதலின் இப்பெயராற்
குறித்தார். ஏழு கடல்களும் ஒன்றாய் ஒலிக்கும் காலம் உகமுடிவிற்
காணும் நீர்ப்பெருக்கி லாகும் என்பர் "கடைநாட் பொங்கும் கடல்"
(582) என முன்னர்க் கூறினார். கடல் ஏழு உவர்நீர், நன்னீர், பால்,
தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன் என்பவற்றானிறைந்தன என்பர்.
பொன்
நெடும் பொது - நெடும் பொற்பொது என மாற்றுக.
பொன்னம்பலம் என்க. இதன் நெடுமையாவது ஞானத்தால் எங்கும்
என்றும் நிறைந்திருத்தல்.
நீடிய
ஆடற் புனிதர் - என மாற்றுக. அவர் ஆடும்
அம்பலமும் நித்தம். அவர்தந் திருக்கூத்தும் நித்தம். அம்பலம்
ஞானமாம். கூத்து ஆனந்தமாம். ஆதலின் நெடும்பொதுவில்
ஆடலை, நீடிய ஆடல் என்றார். ஆடலை நீடி (யியற்றுகின்ற)
என்று கூட்டி யுரைப்பாருமுண்டு. புனிதர் - புனிதத்தைச்
செய்பவர் - தீர்த்தன் என்பது போல. அமலனாதலிற் புனிதர்
என்றார் என்றலுமாம்.
சென்னியிற்
கொண்டு சென்னி - சொற்பின் வருநிலை
என்ற சொல்லணி. தாள் சென்னியிற் கொண்டு என்றது
இறைவனது சீபாதங்களைத் தலைமேற் சூடினன் என்றதாம்.
தாளினைத் தாங்கிய தன்மை பெற்றனவே சென்னி யெனப்படும்.
அவ்வாறு தாங்காதவை வெறுஞ் சுமையே என்பர். "வணங்காத்
தலையும் பொறையாம்" - பொன் வண்ணத்தந்தாதி (42).
சோழர்
மரபு அரசர்கள் தமது சென்னியை இறைவனது தாளுக்கென்றே
ஒதுக்கி வைத்த நெறியினர் என்பது பழைய நூல்களிற் கண்ட
உண்மை. இச்சிறப்புடைய சென்னியார் ஆதலின் இவர்கள் சென்னி
என்ற மரபுப் பெயரானழைக்கப்பட்டார் போலும். இச்சிறப்பாலே
இவர்கள் அரச மரபினர்கள் எல்லாருள்ளுந் தலையாயார் என்றதும்
பொருள் போலும். "சென்னி வெண்குடை நீடநபாயன் திருக்குலம்"
- (404) முதலிய ஆட்சிகள் காண்க.
இங்குத், தாள்
சென்னியிற் கொண்டு என்றது
வெங்களிற்றின் மேற்கொண்ட அரசர் தமது உயர்ந்த தானமாகிய
முடியின் மேற்கொண்டது இறைவனது தாள் என்றதாம். அரசர்,
யானையின் மேலே ஊர்ந்த சிறப்பினும் இறைவரது திருவடியின்
கீழே நாமிருக்கின்றோம் என்ற உணர்ச்சியினைச் சிறப்பாக
எண்ணினார், எஞ்ஞான்றும் திருவடி மறவாத பான்மையார்,
என்பனவாதி குறிப்புக்கள் காண்க. எப்போதும் திருவடி முடியிற்
சூடியவர் இங்கும் சூடினார் என்றது தமது நாட்டில் திருவருள்
வெளிப்பாட்டினாலே திருத்தொண்டின் பெருமையை உணர்த்தி
உலகத்தை வாழ்வித்த உபகாரத்தை உன்னிச் சிறப்பாகச் சூடினார்
என்பது தெரித்தற் கென்க.
திருவளர்
கோயில் - அரசரது அரண்மனையைக் கோயில்
என்பது வழக்கு. கோ - அரசர். திருவளர் -
அருளும் பொருளும்
நிறைவாகியது. உலகாளும் மன்னவன் திருமாலின் கூறு
எனப்படுவனாதலின் திரு - இலக்குமி எனக்கொண்டு,
அவள
தடையாளமாயுளவாம் திரவியங்கள் மேன்மேல் வளர்தற் கிடமாகிய
என்றலுமாம்.
மகிழ்ந்து பொங்க
- என்பதும் பாடம். 53