604.
|
தம்பிரான்
பணிமேற் கொண்டு சிவகாமி யாருஞ் சார
எம்பிரா னன்ப ரான வெறிபத்தர் தாமு "மென்னே!
யம்பல நிறைந்தார் தொண்ட ரறிவதற் கரியா"
ரென்று
செம்பியன் பெருமையுன்னித் திருப்பணி
நோக்கிச்சென்றார், 54
|
(இ-ள்.)
வெளிப்படை. தம்பிரானாரது பணியை மேற்கொண்டு
சிவகாமி யாரும் திருக்கோயிலை நோக்கிச் செல்ல, இறைவனது
அன்பராகிய எறிபத்த நாயனாரும் "என்னே! அம்பல நிறைந்த
சிவபெருமானது தொண்டர்கள் அறிதற்கரியாராவர்" என்று சோழரது
பெருமையை நினைத்து அற்புதமடைந்தாராகித் தமது திருப்பணி
நோக்கிச் செல்வாராயினர்.
(வி-ரை)
தம்பிரான் பணி - தமது பெருமானாகிய
ஆனிலையடிகளார்க்குத் திண்ணிய அன்பு கூர்ந்து விதிப்படி
அலங்கல் சாத்தும் திருத்தொண்டு. அரசர் தமது திருவளர் கோயில்
புக்காராகச், சிவகாமியார் தமதுபிரான் பணியிலே திருக்கோயில்
நோக்கிச் சென்றார்; எறிபத்தர் தமது திருப்பணி நோக்கிச் சென்றார்;
என அவ்வவர் திருத்தொண்டுகளிலே அவ்வவரைப் போக்கிச்
சரிதத்தை நிறைவு செய்கின்றவாறு.
தம்பிரான்பணி
மேற்கொண்டு - திருப்பணி நோக்கி -
இறைவனுக்கு மாலை சாத்தும் பணியினை நியதியாய் மேற்கொண்ட
சிவகாமியார் இன்று திருவருளினாலே மலர்கள் மீள நிறைந்த
பூங்கூடையை எடுத்து நின்றாராதலின் தாம் முன்னர் மேற்கொண்ட
அப்பணியினையே மேற்கொண்டு சார்ந்தனர்
என்றார். ஆயின்,
எறிபத்தர், "அழலவிர் சடையா னன்பர்க் கடாதன வடுத்த போது,
முழையரி யென்னத் தோன்றி முரண்கெட எறிந்து தீர்க்கும்" (557)
திருப்பணி செய்வராதலானும், அஃது, அன்புடையார்க்கு
இடையூறுமிகும் இந்நாளிற் போலன்றி, அக்காலத்து, ஒரோவழி
அருகியே நிகழ்வதாதலானும் அதனைத் தேடிப் போயினார் என்பார்
திருப்பணி நோக்கிச் சென்றார் என்றார்.
அவர் என்றும்
செய்யலாம்; இவர் பணி கிடைத்த வழியே செய்யலாம் என்பது.
முன்னையதனைத் தம்பிரான் பணி என்று சிறப்படை மொழி தந்து
சுட்டிக் குறித்தும், பின்னையதனை அடைமொழியின்றித் திருப்பணி
என்று தேற்றம் பெறக் குறித்ததும், அரண்பணியினும் அன்பர்
பணியின் பெருமை உணர்த்தியவாறு காண்க, "அன்பர்பணி
செய்யவெனை யாளாக்கி விட்டு விட்டால், இன்பநிலை தானேவந்
தெய்தும் பராபரமே" - என்ற தாயுமானார் திருவாக்கு இங்கு
நினைவு கூர்தற்பாலதாம்.
எம்பிரான்
அன்பாரான - எம்பிரான் -
சிவபெருமான். முன்னர்த் தம்பிரான் என்ற ஆசிரியர். இங்கு
இப்புராணமுடையார்க்குப் பிரானாஞ் சிறப்பு நோக்கி
எம்பிரானன்பர் என்றார். எம்பிரானிடத் தன்பராயினார்க்கே
அவனது அன்பரிடத்து அன்பும் அவர்களது பணி செய்தலில்
ஆர்வமும் உண்டாகும் என்பது உண்மை நூற்றுணிபு. "ஈசனுக்
கன்பில்லார் அடியவர்க் கன்பில்லார்" என்ற திருப்பாட்டில்
(சிவஞான சித்தியார் - பன்னிரண்டாஞ் சூத்திரத்தில்)
இவ்வுண்மையினை விரித்திருத்தல் காண்க. அதுபற்றியே
"ஆசையொடு மரனடியா ரடியாரை யடைத்திட்டவர்கரும
முன்கருமமாகச்செய்து" என்றதும் நோக்குக. இக்கருத்துப்
பற்றியே, "புனிதரை வழிபட்டுந் தொழிலராகி," "இறையவர்க்
குரிமைபூண்டார்க் கருட்பெருந் தொண்டுசெய்வார்" எறிபத்தர் -
(556) - என்று தொடக்கத்துக் காட்டியதுபோல இங்கும்
எம்பிரானன்பரான எறிபத்தர் என முடித்துக்
காட்டினார்.
என்னே!
- ஆச்சரியக்குறிப்பு. இஃதென்ன ஆச்சரியம்
என்றபடி.
அம்பல
நிறைந்தார் - அம்பலம் - அருட்சத்தியின்
சொரூபம். அதனில் நிறைந்தார் என்றது தமது சத்தியினிடமாகவே
வியாபித்து நிற்பர் என இறைவனிலக்கணங் குறித்தது.
நிறைந்தார்
தொண்டர் அறிவதற்கு அறியார் -
நிறைந்தாரைப்போல அவர் தொண்டரும் அறிவரியார்.
நிறைந்தாரின் என ஒப்புப்பொருளில் வரும் ஐந்தாம் வேற்றுமை
இன்விகுதி தொக்கது எனவும், நிறைந்தாரும் தொண்டரும் என
உம்மைத்தொகை எனவும், கொண்டுரைப்பினு மமையும்.
தொண்டர்
அறிவதற்கரியார் - இஃதோர் உண்மையாகிய
பொதுவியல்பு. இதனை எறிபத்த் நாயனார் இச்சரித நிகழ்ச்சியின்
அனுபவத்திலிருந்து "தெள்ளிவடித் தறிந்தபொரு"ளாய் உணர்ந்து, அதனைத் தோற்றுவித்த
செம்பியர் பெருமையை யெண்ணி
யெண்ணித் திளைக்கின்றார்.
பெருமை
உன்னி - அப்பெருமையினைத் "தொண்டர்தம்
பெருமை சொல்லவும் பெரிதே" என்றபடி சிந்தித்துக் கொண்டு.
ஒரு அரசர் வடிவுக்குள்ளே அறிதற்கரிதாய் நின்று அரசர்
பெருமையினும் தொண்டர் பெருமை மிக நிறைந்ததனை நினைந்து
நினைந்து என்க. இப் பெருமையினைப் பின்னரும் இவரது
(பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச் சோழர்)
புராண முடிபிலும்
காண்க. "எத்தொழிலைச் செய்தாலென் ஏதவத்தைப் பட்டாலென்
முத்தர் மனமிருக்கும் மோனத்தே" என்ற கருத்தும் இங்குக்
காணத்தக்கது.
அடியார்க் கடாதன
அடுத்தபோததனைத் தீர்த்தலில்
முற்பட்டொழுகிய எறிபத்த நாயனார், தம்மால் அடியார்க்கிடர்
நேர்ந்ததாகக் கருதி தம்முயிரினையே விடத் துணிந்த அரசரது
மனப்பான்மையாகிய அன்பின் பெருமையை உன்னினார்
என்பதாம்.அவர் பெருமை கண்டபோது தஞ்செயலும் தம்
பெருமையும் கண்டாரில்லை என்க. 54
|