606.
ஆளுடைத் தொண்டர் செய்த வாண்மையுந் தம்மைக்
                                    கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை
                                    தானும்
நாளுமற் றவர்க்கு நல்கு நம்பர்தா மளக்கி லன்றி
நீளுமித் தொண்டி னீர்மை நினைக்கிலா ரளக்க
                                வல்லார்? 56

     (இ-ள்.) வெளிப்படை. ஆளுடைய தொண்டராகிய எறிபத்த
நாயனார் செய்த வீரச் செயலினையும், தம்மையுங் கொல்லும்படி
தமது உடைவாளையுங் கொடுத்து நின்ற சோழனாரது
பெருமையினையும், நாளுநாளும் அவர்க்கு அருள்கள் நல்கும்
நம்பராகிய இறைவர் தாமே அறந்தாலன்றி, நீளச் செல்கின்ற இந்தத்
திருத்தொண்டின் தன்மைகளை நினைக்குமிடத்து யாவர் அளக்கும்
வன்மையுடையா ராவர்? (ஒருவருமிலர்.)

     (வி-ரை.) ஆளுடைத் தொண்டர் - தாம் அடியார்க்கு
ஆளாகவும் தம்மை அவர்களது உடைமைப் பொருளாகவும்
கொண்ட தொண்டர். அடியவர்க்காளாகத் தொண்டு செய்தலே
தமது செயல் என்பதாம். மேற்பாட்டில் உரைத்தவை காண்க.
ஆளுடைய அரசு என்பதுபோல் இறைவனால் ஆளாகக்
கொள்ளப்பட்ட என்றுரைப்பாரு முண்டு.

     ஆள் - ஆண்மை என்பாருமுண்டு. மேலும் ஆண்மையும்
என்றமையால் அஃதுரையன் றென்க.

     ஆண்மை - வீரச் செயல். இச்சரிதத்தின் நிகழ்ச்சிகள்
காண்க. யானையின் பலமும், அதுவும் மதங் கொண்டதும், பாகரும்
பலராய்ப் பெரிய அரசரின் வலிய சார்பு கொண்டதும்,
தமதுதனிமையும் முதலிய ஒன்றும் எண்ணாது திருத்தொண்டினுக்குச்
செய்த அபசாரம் ஒன்றினையே கருதிச் செய்த தீரச் செயலை இங்கு
உன்னுக.

     வளவனார் பெருமை என்ற விடத்தும் அரசர்பால் நிகழ்ந்த
முன்னிகழ்ச்சிகளை எண்ணுக. பெருமை - செம்பியன் பெருமை
(604) என்றதின் கீழ் உரைத்தவை காண்க. மேற்பாட்டில் எறிபத்த
நாயனார் அப்பெருமைகளைச் சிந்தித்தவாறு கூறினார். இங்கு
ஆசிரியர் தாம் சிந்தித்துக் கண்டவாறு உலகுக்குக் காட்டுகின்றார்.

     நாளும் - எப்போதும். "அருணாளுந் தரவிருந்தீர் செய்தவா
றழகிது" (ஏயர் கோன் புரா - 262), "நாளு மின்னிசை யாற்றமிழ்
பரப்பும்" - (தேவா) என்றவை காண்க.   நல்கும் நம்பர்தாம்
அளக்கில் அன்றி
- "அன்புடையாரை அறிவன் சிவன்", "அழுது
காமுற் றரற்றுகின் றாரையும், எழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப
ரீசனே", "விடமுண்டவெம் மத்த னாரடி யாரை யறிவரே",
என்பனவாதி திருவாக்குக்கள் காண்க. அளத்தல் - அளவிட்டறிதல்.
மற்று அவர்க்கு - மற்று
- அவ்வவர் எண்ணிய எண்ணங்களின்
வேறுபாடு குறித்து நின்றது.

     நீளும் - எஞ்ஞான்றும் எவ்விடத்தும் பொருந்த நீள்கின்ற.
தத்தம் பயன்களைத் தந்து அழியும் பசு புண்ணியங்கள் போலன்றி
அழியாது பெருகும். ஆண்மையும் பெருமையும் தொண்டின்றிறங்கள்
என்றபடி. நீளும் - என்றமையால் இச்சரித நிகழ்ச்சியின் பின்னரும்
இவ்விரு நாயன்மார்களும் பல காலமுந் தத்தம்
திருத்தொண்டுகளைச் செய்து வாழ்ந்தமையுங் குறித்தபடியாம்.

     யார் அளக்க - வல்லார்? வினா ஒருவருமிலர் என்று
குறித்தது. அளக்கவல்லார் என்றது அளந்து இனைத்துஎன்று
அறிவால் நிச்சயிக்கும் வன்மையுடையாராதலை. இப்பாட்டுக்
கவிக்கூற்று. மேற்பாட்டிற் சரிதத்தை நிறைவு செய்த ஆசிரியர்,
இச்சரிதத்திற் போந்த தொண்டின் நினைப்பரிய பெருமைகளைச்
சிந்தித்துக் கொண்டு அதிற் றாம்பெற்ற அற்புத உணர்ச்சியை
இதனைக் கற்போருக்கும் அழகு பெற ஊட்டுகின்றார். இஃது
இச்சரிதத்தால் ஆசிரியர் கற்பித்த கற்பனையாய் இதன் அருமை
பெருமைகளை உணர்த்தி நின்றது.

     தொண்டர் நீர்மை - அளத்தலன்றி - என்பனவும் பாடங்கள்.
56