607.
தேனாருந் தண்பூங் கொன்றைச் செஞ்சடை
                        யவர்பொற் றாளி
லானாத காதலன்ப ரெறிபத்த ரடிகள் சூடி
வானாளுந் தேவர் போற்று மன்றுளார்
                          நீறு போற்று
மேனாதி நாதர் செய்த திருத்தொழி லியம்ப
                             லுற்றேன்.  57

     (இ-ள்.) வெளிப்படை. தேன் நிறைந்த குளிர்ந்த அழகிய
கொன்றைமலரை அணிந்த சிவந்த சடையினையுடைய
சிவபெருமானது பொன்னடிகளிலே குறையாத ஆசையுடைய
அன்பராகிய எறிபத்த நாயனாரது திருவடிகளைத் தலைமீது
தரித்து, வானுலகங் காவல்பூண்ட தேவர்கள் போற்றுகின்ற
அம்பலவாணருடைய திருநீற்றினைப் போற்றும் வாழ்வுடைய
ஏனாதிநாத நாயனார் செய்த திருத்தொழிலினைச் சொல்லப்
புகுகின்றேன்.

     (வி-ரை.) இச்சரிதத்தை முடித்துக்காட்டி மேல்வரும்
சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்தவாறு.

     தேன் ஆரும் - தேன் - இனிமை தருவது எனும் குறிப்பு.
தேன் பொருந்துதல் வண்டு மொய்த்தலுக்குக் காரணம்.
அன்பர்களாகிய வண்டுகள் மொய்க்கின்ற குறிப்புப் பெற இதனைக்
கூறினார். "ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவி" (திருவாசகம் -
திருப்பூவல்லி - 21), "இம்மலைப் பெருந்தேன் சூழ்ந்து" (கண் -
புரா - 101) என்ற திருவாக்குக்களின் குறிப்பும் இங்கு வைத்து
காண்க. தேன் - வண்டு என்றலுமாம். தண் - (இனிமையுடன்)
தண்மையும் தருவது. பிறவி வெயிற்சுட அடையும் உயிர்களுக்குத்
தண்மைதந் தாற்றுவது, "சுழலார் துயர் வெயிற் சுட்டிடும் போதடித்
தொண்டர்துன்னு நிழலாவன" என அப்பர் சுவாமிகள் திருவடியினை
நிழலாக உருவகித்தது காண்க. பூ - அழகினைத் தருவது.
கொன்றை - பிரணவ உருவாயது. சிவகாமியார் செய்துவந்த
"பூப்பறித்தலங்கல் சாத்தும்" திருத்தொண்டின் குறிப்புமாம். செம் -
செம்மை சடை - சிவபெருமானுக்குரிய திருவடையாளம்.

     சடையவர் பொற்றாளில் ஆனாத காதல் அன்பர் -
முன்னர் எம்பிரான் அன்பரான என்ற விடத்துக் கூறியவை
காண்க.

     வானாளுந் தேவர் - பெருந் தேவர்களான இந்திரன்,
பிரமன், மால் முதலியோர். இவர்கள் சிவபெருமா னருள்வழி நின்று
வானுலகங்கள் ஒவ்வொன்றின் ஆட்சி புரிவோர். ஆதலின் ஆளும்
என்றார்.

     போற்றும் - போற்றும் மன்று எனவும், போற்றும் மன்றுளார்
எனவும், போற்றும் நீறு எனவும் கூட்டியுரைக்க நின்றது. "வானவர்
மேலது நீறு" முதலிய திருவாக்குக்கள் காண்க. போற்றும் மன்று -
"தில்லையுட் செம் பொன்னம்பலம் போற்றி" முதலிய
திருவாக்குக்களானறிக.

     நீறு போற்றும் - தம்முயிரினுஞ் சிறந்த பொருளாக
எஞ்ஞான்றும் திருநீற்றின் மேல் வைத்த அன்பினைக் காப்பாற்றும்,
இஃது இவர் சரிதத்திற் போந்த உள்ளுறையாதல் காண்க. வானாளுந்
தேவர்கள் தவஞ்செய்து அமுத முண்டும் இறத்தல் பிறத்தலாதி
துன்பங்களுக் காளாகி யுழல்கின்றார். அது நீங்க ஒரோவழித்
துதிப்பர். ஆயின் ஏனாதி நாயனார் திருநீறு போற்றியதனாலே
இறைவன் திருவருளாற் பாசமறப் பெற்று என்றும் பிரியா அன்பினை
பெற்றார் என்ற அவர் சரித முடிபினை (649) இங்குத் தோற்றுவாய்
செய்து இந்நினைவுடனே நாம் இச்சரிதத்திற் பயிலுமாறு குறித்துக்
காட்டினர். எறிபத்த நாயனார் சரித உள்ளுறை அன்பர் பணியாம்;
அஃது அவர் செய்த ஆண்மையால் விளங்குவது என்ற பயனை
மேற்பாட்டில் வடித்துக் காட்டிய ஆசிரியர் இங்கு அதற்கு அடி
நிலையானது அரன்பாற் காதலன்பாம் என்பார் தாளில்
ஆனாதகாதல்
என எடுத்து முடிந்த முடிபாகக் காட்டினார்.

     அடிகள் போற்றி - செய்த திருப்பணி - என்பனவும்
பாடங்கள். 57