612.
நள்ளார் களும்போற்று நன்மைத் துறையின்க
ணெள்ளாத செய்கை யியல்பி னொழுகுநாட்
டள்ளாத தங்க டொழிலுரிமைத் தாயத்தி
னுள்ளா னதிசூர னென்பா னுளனானான்.    5

     (இ-ள்.) வெளிப்படை. பகைவர்களும் பாராட்டும்படியான
நன்மைத் துறையிலே எவ்வகையானும் இகழப்படாத செய்கையில்
இயல்பிலே இவர் ஒழுகுகின்ற காலத்தில் விடுபடாதபடி
பிணைந்துள்ள தமது தொழில் உரிமைத் தாயத்தில் உள்ளானாய்
அதிசூரன் எனப்படுவா னொருவனிருந்தான்.

     (வி-ரை.) நள்ளார்களும் போற்றும் நன்மைத்துறை -
நன்மைத்துறையாதலின் பகைவர்களும் போற்றினார்கள்.
பகைவராலும் பாராட்டப்படத் தக்கவாறு இவரது நன்மைநிலை
யொழுக்கம் சென்றது என்பதாம். நள்ளார் - இவர்பால்
வாள்விஞ்சை பயின்ற அரசரால் வெல்லப்பட்டோரும் வெல்லப்பட
நின்றோரும் ஆகிய பகைவர். போற்றும் பாராட்டும் வகையால்
பகைத்திறம் ஒழிந்து உய்யும். இவர் அன்பர் ஆதலின் இவர்
எவரையும் நள்ளாராகக் கொண்டாரலர். இவர் பாற் படைபயின்ற
அரசர்க்கே அரசகாரியத்தில் நள்ளார் உளராவர் என்க.
அங்ஙனமாயினும் ஒருவன் தாயபாகப் பொறாமை கருதி இவர்பால்
ஏலா இகல்புரிவானாயினான் எனச் சரிதந் தொடங்கிச்
செல்லுமுகத்தால் ப்பாட்டில் இவரது இயல்பு ஒழுக்கங்கூறி
அவ்விகல் கொண்டோனையும் உடன் கூறிய உள்ளுறை காண்க.
"புல்லாதார் முரணடக்கிப் பொருள் கவர்வாரென்பதெவன்?,
செல்லாத பல்வேறு தீபத்துச் செங்கோன்மை, வல்லாருந் தத்தமதேத்
தரிய பொருள் வரவிடுத்து, நல்லாரா யொப்புரவு நட்படைய
நடக்கின்றார்" (திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்) என்ற
திருவிளையாடற் புராணக்கருத்தை இங்கு வைத்துக் காண்க.
உம்மை உயர்வு சிறப்பு.

     நள்ளார்களும் போற்றுதல் பகைமை பற்றி யிகழாது,
நெறிவழுவாது நிற்கும் தன்மை நோக்கிப் புகழ்தல். நன்மைத்துறை -
நல்லொழுக்கம் - திருநீற்றினன்பு. எள்ளாதசெய்கை இயல்பு -
என்றும் கைவிடா தொழுகும் தன்மை. இயல்பு - அவர் நினைந்து
மேற்கொள்ள வேண்டுவதொன்றன்று - இஃதவரியற் கையேயாம்
என்னும்படி. விபூதியைப் பாதுகாக்கு நன்னெறியில் நூல்களால்
கழப் படாத திருத்தொண்டினை நூலாராய்ச்சியின்றி
யியற்கையாகவே கொண்டொழுகுகின்ற - என்பது இராமநாத
செட்டியார் உரைக் குறிப்பு.

     தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயம் - விலக்க
முடியாத வண்ணம் தமது தொழிலின் உரிமை பெற்ற தாயபாக
முடையவன். தாயத்தின் உள்ளான் -
தாயாதி. தாயத்தால் மட்டும்
உள்ளானேயன்றி வேறு எவ்வகையானும் உள்ளானல்லன் என்பது
குறிப்பு.

     அதிசூரன் என்பான் - என்பான் - எனப்படுவான்.
படுவிகுதி தொக்கது. தன்னையே தான் சாலமதித்துத் தன்னை
அதிசூரன் என்று சொல்லிக்கொள்வான் என்றுரைத்தலு மொன்று.
வரும்பாட்டுக்காண்க. உளன் ஆனான் - அவ்வகையிலே
உள்ளவனாயினன்.

     அரிசூரன் - என்பது பாடம். 5