613.
மற்றவனுங் கொற்ற வடிவாட் படைத்தொழில்கள்
கற்றவர்க டன்னிற் கடந்துளா ரில்லையெனும்
பெற்றிமையான் மாநிலத்து மிக்க பெருமிதம்வந்
துற்றுலகிற் றன்னையே சால மதித்துள்ளான்.    6

     (இ-ள்.) வெளிப்படை. மற்ற அவனும் வெற்றி வடிவாட்படைத்
தொழில் கற்றவர்களிலே தன்னைவிட மேம்பட்டவர்கள் இல்லை
என்னுந் தன்மையால் உலகிலே மிகுந்த பெருமித முடையானாய்,
உலகில் தன்னைத் தானே மிகவும் மதித்துள்ளானாயினான்.

     (வி-ரை.) மற்றவன் - அவன் மற்றையவனே; நமரல்லன்
என்பது குறிப்பு.

     எனும் பெற்றியமையால் - என்ற எண்ணம் படைத்ததனால்.
பெருமிதம் - அகங்காரம். தானே தன்னைப் பெரியானாக மதித்துக்
கொள்ளுதல். நூல்களில் வகுத்த மெய்ப்பாடுகள் எட்டனுள்
பெருமிதம் என்பதொன்றாம். அது "கல்வி தறுகண்ணிசைமை
கொடையென" நான்கா வகுப்பர். இவை உண்மையில் மிக்க கல்வி
முதலிய பெருமையகளால் வருவது. இதனையே வீரம் என்றும்
சொல்வர். எல்லாரொடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல்
பெருமிதம் எனப்படும் என்றார் பேராசிரியர். ஆயின் இங்கு
அதிசூரன் உற்றது ஒருவாற்றானும் அவ் வகையுட்பட்ட
பெருமிதமாகாது தன்னிற் கற்றாரில்லை எனும் பெற்றிமையாலே
தன்னைத்தானே சாலமதித்த அகங்காரத்தின்பாற்பட்ட தென்பார்
பெற்றிமையால் என்றார். மிக்க - அளவுக்கு மிகுந்த.

     தன்னையே சால மதித்துள்ளான் - தானே தன்னைப்
பெரியானென்று மதித்துக்கொண்டான். பிறர் மதிப்பதே மதிப்பாம்.
பிறர் தன்னைப் பெரியவன் என மதிப்பவும் தான் அவ்வாறு
கொள்ளாது சிறியனாக எண்ணி ஒழுகுதல் வேண்டுமென்பது
நன்னெறி. விசுவாமித்திரர் எல்லா வன்மையுடையரா யிருந்தும்
வசிட்டராற் சொல்லப்பட்ட பின்னரே பிரமரிஷியாயினர் என்ற
சரிதமும், அதுபற்றியெழுந்து வழங்கும் "வசிட்டர் வாக்கில்
வந்தாலே பிரமரிஷி" என்ற பழமொழியும் காண்க. "தன்னை
வியப்பிப்பான் றற்புகழ்த றீச்சுடர், நன்னீர் சொரிந்து
வளர்த்தற்றால்" என்றது நீதி நூல். "தன்னைப் புகழ்தலுந்
தகும்புலவோர்க்கே" என்று விதித்த இடங்கள் வேறு. அதுவே
வேறிடங்களிற் றற்புகழ்தல் - கூடாதென்பதனை வலியுறுத்தும். இங்கு
அதிசூரன் அதனுள் அமையாது எங்கும் தானே தன்னை மதித்து
அகங்கரித்து ஒழுகினான் என்பதாம். இதனாலே நீதி வாக்கியப்படி
தன் தொழிலிற் குறைந்து கேடடைந்தான் என்பது அவன் கைமேற்
பெற்ற பலனாக அடுத்து வரும் பாட்டாற் கூறினார்.

     உலகில் தன்னையே மதித்துளான் என்றமையால் உலகில்
வேறு பலரும் இவனை மதிப்பாரிலர் எனறதும் குறிப்பாம். 6