614. தானாள் விருத்திகெடத் தங்கள்குலத் தாயத்தி
னானாத செய்தொழிலா மாசிரியத் தன்மைவள

மேனாளுந் தான்குறைந்து மற்றவர்க்கே மேம்படலா
லேனாதி நாதர்திறத் தேலா விகல்புரிந்தான்.      7

     (இ-ள்.) வெளிப்படை. தனது தொழின்முறை குறைவுபடத்
தங்கள், குலத்திற்குரிமையாகிய தாய உரிமையிற் குறையாத
செய்தொழிலாகிய வாட்படை பயிற்றும் ஆசிரியத் தொழிலான்வரும்
ஊதியமானவை மேன்மேல் நாளும் தனக்குக் குறைந்து மற்ற
அவருக்கே மேம்பட்டு வருதலாலே ஏனாதி நாதர் திறத்திலே
பொருந்தாத பகைமை பாராட்டுவானாயினான்.

     (வி-ரை.) விருத்தி - பிழைக்கும் வழி. சீவனோபாயம்
என்பது வடமொழி வழக்கு. கெட - சீவனோபாயம் கெடுதலால்.
கெட (அதனால்) குறைந்து எனக் கூட்டுக.

     குலத்தாயத்தின்......வளம் - தமது அந்தக் குலத்தினுள்ளார்
அனைவர்க்கும் தாயபாக உரிமையின்படி பொருந்தியதாகிய. தாயாதி
பாத்தியப்பட்ட என்பது இந்நாள் வழக்கு. ஆனாத செய் தொழில்
- அரசர்க்குப் படைபயிற்றும் தொழிலாதலின் குறைவு படாத
செய்தொழிலாயிற்று. ஆசிரியத் தன்மை - படை பயிற்றுவிக்கும்
உபாத்திமை. வளம் - அதனாற் பெறும் பலவகை ஊதியங்களின்
பெருமை குறித்தது. 611 பார்க்க.

     மேல் நாளும் - மேல் - எதிர்காலத்திலே வரவர. நாளும் -
நாணாளும் - படிப்படியாக. மற்றவர்க்கே - இவனின் வேறாகிய
அவருக்கு. ஏகாரம் பிரிநிலை.

     மேம்படல் - இவனுக்குமேல் நாளும் குறைந்தது போல,
அவ்வளவிற்கு அவர்க்கு மேம்பட்டது என்க.

     ஏனாதிநாதர் திறத்து - ஏனாதிநாதர்பால். அவரிடத்திலே
என்க. திறம் - பகுதியுமாம். திறத்து - பகுதியிலே பக்கத்திலே.

     திறத்து - அவரது திறத்தின்கண் என்றுரைத்தலுமாம்.
திறமாவது படைபயிற்றுந் தொழில், விஞ்சையிற் றலைமை சார்ந்தமை,
அதனால் வளம்பெற வாழ்தல், நள்ளார்களும் போற்றும் நன்மைத்
துறையினிற்றல், வளத்தின் மேம்படல் முதலியன.

     ஏலாஇகல் - ஏலா - அவர்மாட்டுப் பொருந்தத் தகாத.
பொறாமை காரணமாக எழுந்ததாகலின் ஏலாததாயிற்று. அவர்
முன்னிலையில் தன் குறை அறிந்து திருத்திக் கொள்ள முயலாமற்
பொறாமை கொண்டான். "தம்மினுங் - கற்றாரை நோக்கிக்
கருத்தழிக கற்றவெலா, மெற்றே யிவர்க்கு நாமென்று" என்று
நீதிநூல்விதிப்பவும் அவ்வாறு ஒழுகாது அழுக்காறு கொண்டதனால்
அது அவாவை விளைத்தது; அது வெகுளியையும், அது இன்னாச்
சொல்லையும் முறையே உண்டாக்கின. இதனால் அறந் தேய்ந்தது;
மறம் வளர்ந்தது; அதனாற் பொருள் தேய்ந்தது; என முறையிற்
கண்டு கொள்க. "அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ,
டவ்வையைக் காட்டி விடும்" என்பது திருக்குறள்.

     இகல் - பகைத் தன்மை. புரிந்தான் - பலகாலமும்
மனத்தில் வைத்துச் சிந்தித்தான். "திருச்செற்றுத் தீயுழி யுய்த்து
விடும்" என்றபடி இகல் புரிந்தான் என்க. "அழுக்கா றவாவெகுளி
யின்னாச்சொல்" என்றபடி இவை முறையின் விளைக்கும்
மேல்விளைவை மேலிரண்டு பாட்டானுங் கூறுகின்றார். முள்கின்ற
செற்றம் - (616) என்றதுங் காண்க. 7