615.
கதிரோ னெழமழுங்கிக் கால்சாயுங் காலை
மதிபோ லழிந்துபொறா மற்றவனுஞ் சுற்றப்
பதியோ ருடன்கூடப் பண்ணி யமர்மேற்சென்
றெதிர்போர் விளைப்பதற்கே யெண்ணித்
                      துணிந்தெழுந்தான்.
 8

     (இ-ள்.) வெளிப்படை. ஞாயிறு மேலே வரவரத் தன் ஒளி
குறைந்து மங்குகின்ற காலைநிலாப் போலக் குறைவடைந்து
பொறாமை மேற்கொண்ட மற்ற அந்த அதிசூரனும் தனது
சுற்றத்தாரையும் ஏனை ஊரவரையும் கூட்டி ஏனாதிநாதர் மேற்
சென்று எதிர்த்துப்போர் விளைப்பதற்கே நினைத்து அதுவே
துணிந்து எழுந்தான்.

     (வி-ரை.) கதிரோன் - ஞாயிறு. மதியுங் கதிருடையவாயினும்,
அவனது ஒளி ஞாயிற்றின் கதிரொளியினது எதிர்த் தோற்றமேயாம்
என்ப. ஆதலின் அடைமொழியின்றி வழங்கும் கதிரோன் என்பது
ஞாயிற்றினையே குறிப்பது மரபு.

     எழ மழுங்கி - எழுதலால் மழுக்கமடைந்து. எழுவதற்குமுன்
இருந்த விளக்கம் சிறிது சிறிதாகக் குறைந்துபடுதலை மழுங்கி
என்றார்.

     கால்சாயும் - இறுதியில் முற்றும் மங்கி உருத்தெரியாது
போகின்ற. கால் - (காலுதல்) கதிர்வீசுதலைக் குறிப்பது போலும்.
சாய்தல் - கதிர் வீசித் தோற்றப்படும் நிலை குறைதல்.
கால்சாய்தல்
- ஒரு சொன்னீர்மைப்பட்டு, முன்தோற்றத்தினின்றும்
வீழ்தலைக்குறிக்க வழக்குவதாயிற்று. கருதியபொருள் கைகூடும்
என்புழிக் கை என்பது போலக் கால் என்பதும் உபசர்க்கம்
போல்வதோ ரிடைச் சொல் என்றலுமாம்.

     மதிபோல் - வினைப்பற்றி வந்த இரட்டையுவமத்தின்
பாற்படும். கதிரோனெழுதல் - குலத்தாயத்தின் செய்தொழில்
வளம்நாளும் ஏனாதிநாதர்க்கு மேம்படுதலுக்கும், காலைமதி
யழிதல்,
அவ்வளத்தின் முன்னிலை அதிசூரனுக்கு நாளும்
குறைதலுக்கும் உவமங்களாம்.

     பொறா - பொறாமைபூண்ட. மற்றவன் - அயலான்.
அழுக்காறு கொண்டு தீமை குறித்தானாதலின் மற்றவன் என்றார்.

     சூற்றப் பதியோர் - தனக்கியைந்த சுற்றமும் பதியோரும்
என்க. எண்ணும்மை தொக்கது. வரும்பாட்டில் சுற்றத்தொடும்
போர்மள்ளர் கூட்டத்தொடும் என்றது காண்க. வல்லெழுத்து
மிகுதலால் பதியோராகிய சுற்றம் என்று பண்புத் தொகையாகக்
கொள்வாருமுண்டு.

     உடன்கூடப் பண்ணி - தன்னுடன்வந்து கூடும்படி -
சேரும்படி செய்து. திரட்டி. பண்ணி - செய்து நள்ளார்களும்
போற்றும் நன்மைத்துறையில் நின்ற நாயனார்க்கெதிர் முகமாய்
எவரும் இவனுடன் தாமாகச் சேராராதலின் பல உபாயங்களாலே
தன் உடன்கூடப் பண்ணித் திரட்டினான் என்பது குறிப்பு.

     அயர் மேற் சென்று - தன்மேல் வராதிருப்பவும், போர்க்கு
வேறு காரணமில்லா திருப்பவும் பொருளாசை பற்றிய அழுக்காறு
ஈர்ப்பத் தான் வலிந்து அவர்மேற் சென்றான் என்பது. இந்நாள்
மேனாட்டார் கீழ்நாட்டார்களுள் நிகழும் பெரும் போர்களின்
தொடக்கவரலாறுகளை இங்கே வைத்துக் காண்க. மக்கட்கூட்டம்
தீக்குணங்களின் வசப்பட்டொழுகும் நிலை மிக வருந்தத்தக்கது.

     எதிர்போர் விளைப்பதற்கே எண்ணி - எதிர்த்து எவ்வாற்றானும் சண்டை உண்டாக்குதற்கே எண்ணங்கொண்டு.
ஏகாரம் தேற்றம். வலியச் சண்டைக்கிழுக்க என்பதுலக வழக்கு.
எண்ணி - துணிந்து - எழுந்தான்
- நினைத்தல் அவ்வாறு
நினைத்ததனைத் துணிதல் - அதனை மேற்கொண்டு, நிச்சயித்து,
எழுதல் - இவை ஒரு செயல் நிகழுமுன் உண்டாகும்
மனநிலைகளின் வெவ்வேறு கூறுகள். எழுந்தபின் நிகழ்ந்தவை
இவற்றால் ஏவப்பட்ட உடற்செய்கைகளாம். இவை வரும் பாட்டிற்
காண்க. முன்பாட்டில் அவன் கொண்ட அழுக்காறும், இப்பாட்டால்
அதனால் விளைந்த அவாவும், வெகுளியும், வரும் பாட்டில் அதன்
மேல் விளையும் இன்னாச் சொல்லும் பின்னர், அது பற்றி வந்த
அறம் பிறழந்த செயலும் கூறிப் போந்த முறை காண்க.

     பண்ணியவர் மேல் - எண்ணியது துணிந்தான் -
என்பனவும் பாடங்கள். 8