616.
தோள்கொண்ட வல்லாண்மைச் சுற்றத்
                        தொடுந்துணையாங்
கோள்கொண்ட போர்மள்ளர் கூட்டத்
                           தொடுஞ்சென்று
"வாள்கொண்ட தாயம் வலியாரே கொள்வ"
                                தென
மூள்கின்ற செற்றத்தான் முன்கடையி
                         னின்றழைத்தான். 9

     (இ-ள்.) வெளிப்படை. தோளின் வலிய ஆண்மை கொண்ட
சுற்றத்தாருடனே, தனக்குத் துணையாகக் கொள்ளப்பட்ட
போர்மள்ளர்களின் கூட்டத்தோடு சென்று, ஏனாதிநாதரது மனையின்
முன் கடையில் நின்று, "வாழ்பயிற்றும் தொழில் தாயத்தை அதில்
வலியவர்களாயுள்ளாரே கொள்ளத்தக்கவர்" என்று, மிக மூண்ட
கோபத்தினால் அறை கூவினான்.

     (வி-ரை.) வல் ஆண்மை தோள் கொண்ட என மாற்றுக.

     துணையாம் கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டம் -
இவனுக்குத் துணையாகக் கொள்ளப்பட்ட போர்வீரர் கூட்டம்.
காள்கொண்ட
என்றது இவன் அவர்களைக் கூலி
முதலியவற்றாற்றுணையாகக் கொண்டான் என்றாதல்; அவர்கள்
இவனை ஆசிரியனாகக் கோடல் முதலிய பல தொடர்புகளால்
தமக்குத் துணையாகக் கொண்டார்கள் என்றாதல் உரைகொள்ளக்
கிடக்கின்றது. இங்குத் துணையாந்தன்மை எவ்வாற்றானும்
இயல்பாலேனும் மெய்மையாலேனும் அன்பாலேனும் உண்டாகாது
ஒருவகையால் வளைத்துக் கொள்ளப் பட்டதே யென்பார். துணையாங் கோள் கொண்ட என்றார். கோள் - குய்யச்சொல் -
புறங்கூறல் எனுங் குறிப்புப்பெறக் கொள்வது மமையும்.

     சுற்றத்தார் - அதிசூரனது சுற்றத்தார். எனவே தாய
உரிமையினால் நாயனார்க்கும் இவர்கள் சுற்றத்தாராவர். ஆயினும்
அவன் போலவே, வேறு காரணமின்றி அழுக்காறு கொண்டு
பகைமைப் படுவோர் சுற்றத்தாரிற் பல்லோர். இது உலக இயல்பாம்.
"எதார்த் தவாதி வெகுசன விரோதி" என்ற பழமொழியும் காண்க.
நன்மைத்துறைக்குப் பகை பல என்க.

     வாள்கொண்ட தாயம் - வாட்படை பயிற்றுகின்ற
குலத்தாயத் தொழிலுரிமை. வலியாரே கொள்வது என -
போரில் வெற்றிபெறும் வலிமையுடையார் எவரோ அவரே
கைக்கொள்ளத்தக்கது என்று சொல்லி.என - அழைத்தான்
என்று கூட்டுக. அழைத்தல் - அறைகூவிப் போருக்கு
அழைத்தல். "ஆர்கொல் பொர அழைத்தான்?" என்று (618)
பின்னர் இதனை விளக்கியது காண்க.

     முள்கின்ற செற்றத்தால் - அழுக்காறு அவாவை விளைக்க,
அவாவிய பொருள் கிட்டாத போது அது வெகுளியைத் தரச்,
செற்றம் மூண்டது. அது இன்னாச் சொல்லை விளைக்குமாதலின்
அவன் "தாயம் வலியாரே கொள்வது" எனச் சொல்லத் தகாத சொல்
கூறினான். செற்றத்தான் - செற்றமுடையானாகி என்றலுமாம்.

     முன்கடையில் - ஏனாதிநாதரது மனையின் முன்றிலில்.
சுற்றத்தொடும் - கூட்டத்தொடும் - சென்று - செற்றத்தான் -
முன்கடையில் நின்று - "தாயம் வலியாரே கொள்வது" என
அழைத்தான் - என்று கூட்டியுரைக்க. 9