617.
|
வெங்கட்
புலிகிடந்த வெம்முழையிற் சென்றழைக்கும்
பைங்கட் குறுநரியே போல்வான் படைகொண்டு
பொங்கிப் புறஞ்சூழ்ந்து போர்குறித்து நேர்நின்றே
யங்கட் கடைநின் றழைத்தா னொலிகேளா, 10
|
617. (இ-ள்.)
வெளிப்படை. வெவ்விய கண்ணுடைய
புலியிருந்த கடியகுகை யிற் சென்று அதனை அறைகூவி யழைக்கும்
சிறுகிய கண்ணுடைய குறுநரியே போல்வானாகிய அதிசூரன்
தனதுபடையைத் துணைக்கொண்டு பொங்கிப்புறத்திற் சூழ்ந்து
போரினைக் குறித்து நேரே வந்து நின்று இடமகன்ற தமது
கடைத்தலையில் நின்று அழைத்தவனுடைய ஒலியைக் கேட்டு. 10
617.
(வி-ரை.) வெங்கட்புலி
பைங்கட்குறுநரி - முறையே
ஏனாதிநாதருக்கும், அதிசூரனுக்கும் வினைபற்றிக் கூறிய ஒப்புமை.
அழைக்கும் நரியேபோல் வான் என்றதை நரி அழைக்கின்றதே
போல் எனக்கொண்டு மெய்யுந் தொழிலும் பற்றி விரவி வந்த
உவமமென்பர். வெங்கட்புலி - பைங்கட்குறுநரி என்பன
தன்மையணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். கண் - இங்குப்
பார்வை குறித்தன.
புலிகிடந்த
- கிடந்த - தான் ஒன்றும் மிகை செய்யாது
தன்னளவில் அமைந்துகிடக்கின்ற என்பது குறிப்பு. புலிகிடத்தல்
என்பது மரபுமாம். புலி - புல்லி
என்ற சொற் புலி என வந்தது.
தனது இரையினை மேற்பாய்ந்து புல்லிக்கொல்வது என்பது பொருள்
என்பர். புலி பெருமிதமுடையது. போரிற் சினந்து நேரெதிர்த்துப்
பெரும் பிராணிகளின் மீது பாய்வதே யன்றிக் கீழ்மையாய்
ஒளித்திருந்து அற்பப்பிராணிகளைப் பற்றி வதைக்காது. நரி
-
வஞ்சனையோடு பதுங்கும். புலி - கம்பீரமாய்ப் பாய்ந்து யானை
முதலியவற்றையும் எதிர்க்கும். நரியின் தன்மையாகிய வஞ்சம்,
ஏமாற்றுதல், முதலியவை குறிக்க நரிப்பு என்பது
மரபு. "அவர்
முன்னே நரிப்பாய் நாயே னிருப்பேனோ?" திருவாசகம்,
"திருச்சிராப்பள்ளி யென்றலுந் தீவினை, நரிச்சி ராது நடக்கு
நடக்குமே" திருக்குறுந்தொகை முதலியவை காண்க.
வெம்முழை
- கொடிய குகை - முழை - மலைக்குகை
முதலிய பதிவிடங்கள். அதனுட் பதுங்கிக் கிடக்கும் புலி முதலிய
கொடு விலங்குகளின் வெம்மை - கொடுமை - முழையின்மே
லேற்றப்பட்டது.
பைங்கட்
குறுநரி - பைங்கண் - வஞ்சமுட் கொண்ட
பார்வையும், வெங்கண் வீரந்ததும்பும் பார்வையும் குறிக்கும். கண்
தீயினது கூறுகொண்டதனால் ஒளி கவரும் சக்தியுடையது. புலி -
பூனை - முதலிய பிராணிகளின் கண்கள் இச்சக்தி மிகுதியு
முடைமையால் இருளிலே சிறிய பிராணிகளையும் பாய்ந்தோடிப்
பற்ற வல்லனவாகின்றன. பறவைகளில் ஆந்தை, கோட்டான் கூகை
முதலியவற்றிற்கும் நாய்முதலியவற்றிற்கும் இரவிற் கூரிய பார்வை
யுண்டு. ஆதலின் அவை பைசாச உருவமாகிய வாயு சரீரங்களையும்
காணவல்லன; மக்கள் உயிர் போகுங்காலத்தில் இவை கூவுதல்,
குரைத்தல் முதலிய துன்னிமித்தங்கள் இதுபற்றியே நிகழ்வன
என்பது நூற்றுணிபு. மக்களிற் பூனை சுகண்ணுடையாரும் இது
போன்றதோ ரொளியுடையார் என்பர்.
படை
கொண்டு - படை - மேற்சொன்ன சுற்றத்தாரும்
மள்ளரும் கூடிய படைஞர். படை - வாள், பலகை
முதலிய
படைகளைக் கொண்டு என்றலுமாம்.
பொங்கி
- புறஞ்சுழ்ந்து - போர்குறித்து - நேர்நின்றே
- இவை ஒவ்வோர் தனிச் செயல் குறித்தன. பொங்கி -
வஞ்சினங்கூறி ஆரவாரித்து; புறஞ்சூழ்ந்து - அவரது
திருமனைப்புறத்திற் சுற்றிவளைத்து. போர்குறித்து -
போர் -
உட்கொண்டதைப் புலப்படுத்தும் செயல்பலவும் செய்து; நேர்நின்று
மறைமுகமாயன்றி நேர்நின்று.
அங்கட்கடை
- கடை - திருமனையின் முன்வாயில்.
"கடைமுன் கேளா" - 113, முதலிய வழக்குக்கள் காண்க. அங்கண் -
அருட்பார்வை யுடையாரது என்றலுமாம்.
ஒலி
- இவர் பேர் குறித்துக் கூவித் ‘தாயம் வலியாரே
கொள்வது' என்ற பொருள்பட அறைகூவி யழைத்த சத்தம். இது நரி
ஊளையிடுதலே போன்ற தென்பார் ஒலி என்ற இலேசாற் குறித்தார்.
புடை
சூழ்ந்து - என்பதும் பாடம். 10 |