619.
புறப்பட்ட போதின்கட் போர்த்தொழில்கள் கற்கும்
விறற்பெருஞ்சீர்க் காளையர்கள் வேறிடத்து நின்றார்
மறப்படைவாட் சுற்றத்தார் கேட்டோடி வந்து
செறற்கரும் போர் வீரர்க் கிருமருங்குஞ்
                            சேர்ந்தார்கள்.  12

     (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு அவர் புறப்பட்ட போது
இவர்பாற் போர்த்தொழில் வாட் பயிற்சி பெறும் வலிய பெரிய
சிறந்த காளையர்களும், முன்னர்ப்பயின்று வெவ்வேறிடத்
தமர்ந்தவர்களும் கொலைபுரியும் பல படைக்கலங்களையும்
வாளையும் ஏந்திய சுற்றத்தார்களும் இது கேட்டு ஓடிவந்து போரில்
வெல்ல அரிய சிறந்த வீரராகிய ஏனாதிநாதருக் கிருபுடையும்
சேர்ந்தார்கள்.

     (வி-ரை.) புறப்பட்டபோது - ஏனாதியார் தமது மனையை
விட்டுப் போர் குறித்து வெளியே வரும்போது.
போர்த்தொழில்கள்......காளையர்கள்
- "மன்னர்க்கு வென்றி
வாடிவாட் படைபயிற்றும் தொழில்" (610) உடையவர் ஆதலின்
இவர்பாற் போர்த்தொழில் கற்போர் பலர். அவர் தமதியல்பானே
விறல் பகைத்தவர் - தொழில் கற்றதனாலே இயற்கை விறலுடன்
சீர் படைத்தவர் - இவர்பாற் கற்றலிற் பெருஞ்சீர் படைத்தார் என
அடைமொழிகட்கு உரை விரித்துக் கொள்க. காளையர்கள்.
இளமை மிக்குள்ளார். அதனாலும். துணிவும் வலியும் பெற்றார்.
இவர்கள் மன்னர் மரபினராதலினாலும் ஏனைப் பெருஞ்சீர் பலவும்
உள்ளார். தமதாசிரியராகிய நாயனார் போர்க்குப் புறப்பட்ட போதில்
அவர்பால் வைத்த அன்பினால் அவர்க்குத் துணையாய் எழுந்து
வந்தனர் என்க. மனைக்கடையில் வந்து நின்று பொர
அழைத்தரனாதலின் நாயனார் புறப்பட்ட போது முதலில் அவருடன்
சேர்ந்தார் அங்கிருந்து தொழில் கற்கும் இவர்களேயாவர்.
இதனாலும், பிற சிறப்பாலும் அங்கு வந்து சேர்ந்த காளையர்கள்,
வேறிடத்து நின்றார், சுற்றத்தார் என்ற மூவகையாருள் இவர்கள்
முதலிற் கூறப்பட்டனர். ஏனையோர் கேட்டோடிவந்து சேர்ந்தார்
என்றதும் காண்க.

     வேறிடத்து நின்றார் - அவ்விடத்தன்றி வேறிடத்து
நின்றார்கள். இவர்பால் வைத்த அன்பின் மிகுதியால் இது
கேட்டதும் தாமிருந்த இடத்தினின்றும் வந்து சேர்ந்தனர்.
இவர்களை வேறிடத்து நின்றார் என்றமையால் முன்னர்க் கூறிய
காளையர்கள் அங்கு நின்றவர்கள் என்க. தொழில் முதலிய எந்தக்
கலையும் கற்போர் தத்தம் ஆசிரியர்பாலே வதிந்து கலைபயிலுதல்
முன்னாள் வழக்கும் மரபுமாம். இவ்வழக்கு இந்நாள் ஒழிந்தமை
வருந்தத்தக்கது. இங்குக் கூறிய வேறிடத்து நின்றார் என்போர்
பயிற்சி முற்றியபின் வெவ்வேறு தத்தம் துறையில் வாழ்வார்.

     மறப்படைவாட் சுற்றத்தார் - மேற்கூறிய இவ்விரு
வகையாருமன்றிச் சுற்றத்தாரும் வந்தனர். அவரும் வீரமும்
படைவல்லாரும் ஆவார் என்பது. (ஒன்று) உண்டாயின போது
வந்து கூடியும் ஒன்றற்ற போது சென்றோடியும் விடுவார். சுற்றத்தார்
என்போரிற் நல்லோர். பக்கத்திருந்தும் உற்றுழி உதவாது நீங்குவார்.
அவர் உறவல்லார். "உற்றுழித் தீர்வா ருறவல்லர்" என்பது
நீதிநூல். ஆயின் இங்கு நாயனாரது சுற்றத்தார் அவ்வாறன்றிச்
சேய்மையிலிருந்தும் செய்தி கேட்டவுடன்விரைவில் ஓடி வந்து
படையுடன் போர்முகத்தராய்ச் சேர்ந்தனர். இவரே உண்மையில்
அன்பினாற் சுற்றி ஒழுகும் இயல்புடைய சுற்றத்தார் எனப்படுவர்.
மறம் - வீரம். படை வாள் - உம்மைத்தொகை. வேறு பல்படையும்
வாளும் பயின்று வல்லவர். சிறப்புப்பற்றி வாளைப் பிரித்தோதினார்.
படையாகிய வாள் என்பாருமுளர். பின்னர்ப் பலபடைகள் கூறுதல்
காண்க. இயற்பகையாரின் மனைவியாரது சுற்றத்தார் திறமும்
உன்னுக.

     கேட்டு ஓடி வந்து - கேட்டு - அதிசூரன் போருக்கு
அழைக்க இவர் தெம்முனையிற் புறப்பட்டது கேட்டு. ஓடி வந்து
என்ற விரைவு இவர்பால் இவர்களுக்குற்ற மெய்யன்பின் தீவிரங்
குறித்தது. இவர்க்காக இவர்கள் தம் உயிரையும் கொடுக்க
முற்பட்டார்கள் என்பது சரிதத்துட் காண்க.

     செறற்கு அரும் - எதிர்த்துப் போர்செய்தற்கரிய; போர்
வீரர்
- பெருவீரமுடைய ஏனாதி நாயனார். சரிதத்துட் காண்க.

     இருமருங்குஞ் சேர்ந்தார்கள் - அவர்க்கிருபுறமும்
அணிவகுத்துப் பக்கபலமாகச் சேர்ந்தார்கள்; செறற்கரும்
வீரராதலின் அவர் துணையாக ஒருவரையும் வேண்டினாரில்லை.
இவர்கள் தாமே வந்து கூடினார்கள் என்க. காளையர்கள்
நின்றார் - சுற்றத்தார்
- உம்மைத் தொகை. இவ்வாறன்றி
அதிசூரன் சுற்றத்தாரையும் மள்ளரையும் கூட்டிச் சென்றான் (616)
என்றதும் காண்க.

     போர்த் தொழில் வாள் - என்றதும் பாடம். 1