620.
|
வந்தழைத்த
மாற்றான் வயப்புலிப்போத் தன்னார்மு
"னந்தமது வாள்பயிற்று நற்றாயங் கொள்ளுங்கா
லிந்தவெளி மேற்கைவகுத் திருவேம் பொருபடையுஞ்
சந்தித் தமர்விளைத்தாற் சாயாதார் கொள்வதென". 13
|
620.
(இ-ள்.) வெளிப்படை. (மனைக்கடையில்)
வந்து
போருக்கு அழைத்த பகைவனாகிய அதிசூரன், வெற்றியுடைய
புலியேறுபோன்ற நாயனாரின் முன்னே நின்று "வாள் வித்தை
பயிற்றுதலாகிய, நல்ல, தாய உரிமையை நாம் கைக்கொண்டு அதன்
ஊதியங்களைப் பெறுங்கால், இந்த வெளியிடத்திலே நாம் இரு
வேமும் அவ்வவர் படைகளைக் கைவகுத்து எதிரெதிர் கலந்து
அமர் செய்தால் அதில் வெற்றி பெறுவோரே, அதனைக்
கொள்ளத்தக்கது" என வுரைத்தான்.
620.
(வி-ரை.) வந்து- தானே வலிய வந்து.
மாற்றான்
- மாறு கொண்டவன். "இகல்புரிந்தான்" (614)
வயப்புலிப்
போத்து - வயம் - வெற்றியுடைய - வலிய
என்றலுமாம். புலிப்போத்து - ஆண்புலி. போத்து -
மிருகச்
சாதியுட் சிலவற்றின் ஆண்பாற் பெயர். ".........போத்துங் கண்டியுங்
கடுவனும் பிறவும், யாத்த வாண்பாற் பெயரென மொழிப" என்பது
தொல்காப்பியம். [பொருளதிகாரம் - மரபியல் 2] இப்போரில் இங்கு
இவரே வெற்றிபெற, அவன் ‘உடைந்து புறகிட்டான்' (636) எனக்
காண்போமாதலின், இவர்க்கு ஆண்புலியை வெற்றியொடு புணர்த்தி
உவமித்த ஆசிரியர், மாற்றானுக்கு எப்பொருளையும் இங்கு
உவமித்திலர். முன்னர்க் கதிரோனையும் காலை மதியையும் (615)
இவரது எழுதலுக்கும் அவனது மழுங்கலுக்கும் உவமித்தார்.
புலிகிடந்த முழையிற் சென்றழைக்கும் குறுநரி (617) என, இவர்
இருக்க அவன் அழைத்தபோது உவமித்தார். போரில் அவன்
ஒன்றுக்கும் பற்றாதவன் என்பார், இங்கு எவ்வாற்றானும்
உவமித்திலர். ஆக உயர்ந்த பொருளாகிய பரம்பொருளுக்கும்
உவமையின்றாம். ஆகக் கடைப்பட்டதற்கும் அவ்வாறே என்பது.
இவ்வாறே பின்னரும் "வெம்புலி யேறன்னவர்தம்" (635) என்ற
பாட்டினுங் காண்க. இறுதியில் இதற்கு மேலாய் அவனை உயிரற்ற
பிணமாகிய மாமிசமே என்பார் விடக்கு என்றும்,
இவரை வென்றி
மடங்கல் - (643) என்றும் குறித்து முடித்ததுவுங் கருதுக.
"பேசுவதென் னறிவிலாப் பிணங்களை" (12-ம் சூத்திரம் - 2) என்ற
சிவஞானசித்தியாரும் இக்கருத்தே பற்றியது.
நந்தமது
வாள் பயிற்று நற்றாயம் - "தங்கள்குலத்
தாயத்தின் ஆனாத செய்தொழிலா மாசிரியத் தன்மை" (614),
"மன்னர்க்கு வென்றி வடிவாட் படை பயிற்றுந் தன்மைத் தொழில்"
(610) என்றவை காண்க. நந்தமது - நம்மிருவேமுக்கும்
உரிமையாகிய, வாள் - வாள் வித்தை, நல்தாயம்
- தாய
உரிமையால் வரும் வளம். நல் என்றது அரசர்க்கு
வாள் பயிற்றும்
மேன்மையும் அதனால் தமக்கு வரும் வளத்தின் சிறப்பும், உலகம்
ஓம்பப்படும் நற்பயனுங் குறித்து நின்றது. நந்தமது தாயம்,
பயிற்றுதலான் வருந் தாயம் எனத் தனித்தனி முடிந்தது. வாள்
பயிற்றும் என்றது இடைப்பிறவரலாய்த் தாயத்தை விசேடித்து
நின்றது.
கொள்ளும்கால்
- அனுபவிக்கும் காலத்தில்,
அவ்வூதியத்தைப் போரிற்சாயாதாரே கொள்ளுதல் ஆம் என்க.
சாயாதார் - சாய்தவில்லாதார் - முடிந்தொழியாதார்.
சாய்தல் -
போரில் முடிந்துபோதல். அதிசூரன், "தன்னிற்
கடந்துளாரிவ்வுலகிலில்லை என்னும் பெருமிதம் வந்து - தன்னையே
சாலமதித்துள்ளான்" (613) ஆதலின் தான் வெல்ல எண்ணினான்.
ஆயின் "ஏலா இகல்புரிந்தான்" (614) ஆதலினால் தன்னால் வெல்ல
இயலாவிடினும் எவ்வாற்றாலும் கொல்ல எண்ணினான்.
பெருமிதத்தால் விழுங்கப்பட்ட இவன் போரில் வெல்ல எண்ணியது
பிழைத்த பின்னர், ஈனமிகு வஞ்சனையால் வெல்ல எண்ணிச் செயல்
செய்தமையாற் காண்க. இவ்வெண்ணங்களால் இங்கு "வென்றார்
கொள்வதென" என்னாது "சாயாதார் கொள்வதென" என்றான்.
என்னை? நேர் முறையால் வெற்றி தோல்வியின்றியே
இச்சரிதத்துப்பின்னர்க் காண்கின்றபடி, வஞ்சனையாலும்
சாயாமையும் சாய்தலும் நிகழுமாதலின் என்க.
கொள்வதென
- உரைத்தான் என்னும் முடிக்குஞ் சொல்
எஞ்சி நின்றது; "சிவிகை பொறுத்தானோ டூர்ந்தானிடை" என்ற
விடத்துக் "காணப்படும்" என்பது எஞ்சி நின்றதுபோற் கொள்க.
இதற்கு என்று எனப் பொருளுரைப்பாருமுளர். வரும் பாட்டு "என்று
பகைத்தோனுரைப்ப" எனத் தொடங்குதலால் அஃதுரை யன்றென்க.
இங்கு, என - என்று எனக்கொண்டும், வரும் பாட்டில் வரும் என்று
- கதிரோன் எனப்பொருள் கொண்டும், 615ல் கூறிய உவமைக்
கேற்பப் பொருள் அமைத்துக், கதிரோனைப் பகைத்த
மதிபோன்றானாகிய அதிசூரன் கொள்வது என உரைப்ப என்றுரை
கூறுவாருமுண்டு.
இந்தவெளி
- ஊர்க்குப் புறத்தே படைப்பயிற்சி, போர்
முதலியவற்றிற்காக உள்ள பொதுவிடம். இந்த - அண்மைச்சுட்டு:
வாள்வித்தை முதலியன பயிற்றுவோர் இருக்கைகளுக்கு
அணிமையில் அஃதமைந்ததனைக் குறிப்பது போலும். ஒவ்வொரு
தொழில்பற்றிய வகுப்பினர் ஒவ்வோர் தனியிடங்களில் கூடி
வசிப்பதுவும், அவ்வக் கூட்டத்தாரின் தொழிற்குரிய பொதுவிடம்
அவ்வவர் இருக்கைகளுக்கு அணிமையில் அமைப்பதும் முன்னாள்
நமது நாட்டில் வழங்கிய நகர அமைப்பாகும். அது இந்நாளில்
நாகரிக மென்றபேரால் மாறிப் பல அல்லல்களுக்கிடனாத விளைதல்
வருந்தத்தக்கது. இதுபற்றி முன் உரைத்தவைகளும் நினைவுகூர்க.
படைபயிற்றுவோர் புறநகரிகருக்கை கொள்ளுதலும்
அவர்தொழிற்கேற்ற இயல்பாகும். ஓது கிடைகளும் இவ்வாறே பிற
காரணங்கள் பற்றி முன்னாள் நகர அமைப்பிலே நகர்ப்புறத்
தமைந்தன என்பதும் அறியக்கிடக்கின்றது. வெளிமேல் -
வெளியினிடத்து. மேல் - ஏழாம் வேற்றுமையுருபு. இவ்வெளியினை,
செருக்களம் - (621), போர்செய்களம் (625), அமர்செய் பறந்தலை
(626), கொல்களம் - (634), களம் (640) என்று குறித்தமை காண்க.
கைவகுத்து
- படையைப் போருக்கு ஏற்றவாறு வரிசைபெற
அணி வகுத்து. வரும் பாட்டினும் "கைவகுத்து நேர்மலைவார்"
என்றது காண்க. வாள் வீரர்க்கு வாள் வீரரும், வேல் வீரர்க்கு
அவரும், வில் வீரர்க்கு அவ்வகையோரும் என
அவ்வப்படையோரும் அவ்வவற்றிற் கேற்ற படையேந்திய
அவ்வவருடன் பொருதற்குரியதாய்ப் படை வகுத்தல் கைவகுத்தல்
எனப்படும். இவ்வாறே நால்வகைச் சேனையோடும் பிறவற்றோடும்
போர்புரியும் பேரரசர் போரினும் படை வரிசைகள்
அணிவகுக்கப்படும். இங்குப் பின்னர், வாள் - பலகை ஏந்திய
வரிசையினரின்போர் 622 - 623 பாட்டுக்களினும், வில் வீரர்
வகுப்பினர் போர் வேறாக 624லும், வேற்படைஞர் போர் தனியாக
648லும் பிரித்தும் வகுத்தும் விரித்தது காண்க. இவ்வாறே அரசரது
நால்வகைப் படை அணிவகுப்புப் புகழ்ச் சோழர் புராணத்தும்
பிறாண்டுங் காண்க. இங்கு நிகழும் போர், மன்னரல்லாத
குடிமக்களிடையே நிகழும் சாதாரண ஆட்போராதலின் கைவகுத்து
என்றமைந்தார். இவ்வகைப் போரினை முன்னர் இயற்கை
நாயனார்புராணத்துக் கூறியவையும் இங்கு நினைவு கூர்க இருவேம்
பொருபடை - இருவேமுடைய போர்ப்படை வரிசைகளும்,
சந்தித்து - எதிரெதிர்முட்டி. அமர் விளைத்தால்
- போர்
செய்தால்.
அமர்
மலைந்தால் - என்பதும் பாடம். 13
|