621.
என்றுபகைத் தோனுரைப்ப, வேனாதி நாத"ரது
நன்றுனக்கு வேண்டுமே னண்ணுவ" னென்
                           றுண்மகிழ்ந்து
சென்றவன்முன் சொன்ன செருக்களத்துப்
                          போர்க்குறிப்பக்
கன்றி யிருபடையுங் கைவகுத்து நேர்மலைவார். 14

     621. (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு பகைத்தோனாகிய
அவன் சொல்ல ஏனாதிநாதர் "அது நன்றென்று உனக்கு
வேண்டுவதாயின் நான் அவ்வாறு சேர்வேன்" என்றுகூறி,
உண்மகிழ்ச்சியோடும் உடன்பட்டாராய் அவன் முன்னே குறித்துச்
சொன்ன போர்க்களத்துக்குச் சென்று போர் குறித்து நிற்கவே,
கோபித்து, இருவர் படைவீரர்களும் அணிவகுத்து எதிர்ரெதிர்
போர் புரியலாயினர்.

     இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன.

     621. (வி-ரை.) பகைத்தோன் - மாற்றான் - அதிசூரன்.
இவர் பகைக்கா திருப்பவும் தானே பொறாமையாற் பகைத்தவன்
என்பது குறிப்பு.

     அது நன்று உனக்கு வேண்டுமேல் - நன்று -
நல்லதென்று. உனக்கு வேண்டுமேல் - உனக்கு நன்றென்று
தோன்றி அதனை வேண்டுவாயாயின் என்க. நன்று - இங்குக்
குறிப்பு மொழியாய் நன்றன்றென்பதுணர்த்தி நின்றது.
"உடம்போடுயிரிடை நட்பு" என்ற குறளில் "நட்பு" என்றதற்குப்
பரிமேலழகர் உரைத்தது காண்க. அது - அமரிற் சாயாத
வலியாரே தாயம் கொள்வது என்ற அது.

     அது - அக்கொள்கை - நன்றன்று என்பது நாயனார்
கருத்து. என்னை? போரில் வலியாரே பொருளுக் குரியோராதல்
என்பது. நேர்மையுமன்று; நியாயமுமன்று. இவ்வாறு வலியார்
மெலியாரது பொருளைக் கவர்வது நன்மை தீமை பகுத்தறியும்
உணர்வில்லாத மிருக நியாயம் பற்றிய திருட்டு வழியும் மனிதக்
கூட்டத்தின் மிருகத் தன்மையான கொள்கை பற்றிய கொள்ளைச்
செயலுமாம் என்பது அறிஞர் துணிபு. இதுவே நீதிநூற் றுணிபுமாம்.
ஆயினும் அரசருள்ளேயும் குடிமக்களுள்ளேயும் முன்னாள் முதல்
நாகரிகப் பேரால் வழங்கும் அநாகரிக மூர்க்கப் போர்ப்பலம்
முழங்கும் இந்நாள்வரை மக்கட் கூட்டத்தினும் பல துறையினும்
இச்செயலே வழக்கிலிருந்து வருகின்றதென்பது உலக சரிதம்
கற்பிக்கும் உண்மைகளில் ஒன்று. "சிறுமீன் பெருமீனுக்கிரை"
என்பது பழமொழியாகி ஒரு நியாயம் போல உருவம் பெற்று
வழங்குகின்றது. பலமுள்ளதே எஞ்சும் - ஏனையவெல்லாம் துஞ்சும்
- (The survival of the fittest-The weakest go to the wall) என்பது நவீன
சாத்திரிகள் ஒரு கொள்கையாகவே கொண்டனர். ஆயின் இது
அறிஞர் வெறுக்கும் கொடுமைகளில் ஒன்றென்று இங்கு நாயனார்
திருவாக்கின்மூலம் பேரமைச்சராகிய ஆசிரியர் உணர்த்திய அழகு
காண்க. இதற்கு இவ்வாறன்றி -நன்று - அது நன்று - நல்லது -
என உடன் பட்டுப் போருக்கு இசைந்தனர் நாயனார் என்று உரை
கூறுவாருமுளர்.

     அது நன்று என்பது தமக்கு உடன் பாடின்றாயின் நாயனார்
போருக்கு இசைந்து நண்ணுவன் என்று கூறிச்சென்று
அமர்மலைந்தது என்னை? எனின், போர்குறித்து ஒரு வீரன்
அறைகூவி அழைத்தானாயின் அதனை ஏற்றுப் போர் குறித்தல்
வீரர் தன்மை. அவ்வாறு ஒப்பாமை பேடித்தன்மை என்பது போர்
வீரர் மரபு. அன்றியும் தமது ஆண்மை வெல்லும்; தருமமும் நீதியும்
சால்பும்" வெல்லும்; அன்பின்றிறமும் அடிமைத் திறமும் வெல்லும்
என்ற துணிபின் உரைத்தனர் நாயனார் என்க.

     உள் மகிழ்ந்து சென்று - போர்மலையப் போவார்
மனவெழுச்சியுடன் போதல் போர் மரபு. மற்று, அவனை வெல்வோ
மென்றாவது, வென்று தாயந் தனிகொள்வோமென்றாவது கருதி
உண் மகிழ்ந்தவரல்லர் என்க. பெருமிதம், அழுக்காறு முதலிய
தீயவை அதிசூரனை விழுங்கினவன்றி நாயனார்பால் ஒரு சிறிதும்
அவை நணுகவில்லை என்பது முன்னர்க்காணப்பட்டது.
இத்தகையோனுடைய பகைமை விரும்பிக்கொள்ளப்படும் என்ற
நீதிபற்றி மகிழ்ந்தார் என்றுரைப்பாருமுண்டு.

     முன்சொன்ன செருக்களம் - "இந்த வெளிமேல்" (620)
என்று அவன் சுட்டிய போர்பயிலுமிடம். போர் குறிப்ப - போர்
குறித்து நிற்க.

     கன்றி - கோபித்து. கோபத்தாலன்றிப் போர் நிகழாதாதலின்
கன்றினார். வேறு காரணமின்றிப் போர் துணிவதற்கே இருவர்
படையும் கன்றின. அவன் இகல்புரிந்தழைத்தான். இவர் அதனை
ஏற்று நின்றார். இவ்விரு தலைவர் தன்மையும் அவ்வலர் சார்பான
படைகட்கேறின. அச்சார்புபற்றி அவர்கள் கன்றி மலைவாராயினர்
என்பது.

     இருபடை - இருவர் படை. நேர் - எதிரெதிராய். மலைவார்
- போரினைத் தொடங்கிச் செய்வாராயினர். போர் செய்யும் வகை
மேல்வரும் பாட்டுக்களில் விரிக்கின்றார். போர் பின்னர்
நிகழ்வதாதலின் மலைவார் என எதிர்காலத்தாற் கூறினார்.

     இருபுடையும் - என்பதும் பாடம். 14