622.
|
மேக
வொழுங்குகண் முன்கொடு மின்னிரை
தம்மிடை
யேகொடு
மாக மருங்கினு மண்ணினும் வல்லுரு மேறெதிர்
செல்
வாக நெடும்பல கைக்குல மாள்வினை வாளுடை
யாடவர்
காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து
கலந்தனர். 15 |
(இ-ள்.) மேக....முன்கொடு
- மேக வரிசைகளை முன்னாற்
கொண்டும்; மின்...கொடு - மின்னல் வரிசைகளைத் தமக்கிடையிடை
கொண்டும்; மாக.....ஏறு - ஆகாயத்திலும் பூமியிலும் வலிய இடி ஏறு;
எதிர்செல்வனவாக - எதிரெதிர் செல்வனபோல; நெடும்....ஆடவர் -
நெடிய கேடக வரிசைகளையாளுந் தன்மையும், வாள் ஆளுந்
தொழிலையும்கொண்ட போர்மள்ளர்; காகம்...கலந்தனர் - காகங்கள்
நிறைந்த போர்க்களத்தில் இருபக்கமும் எதிரெதிர் வந்து கலந்தனர்.
(வி-ரை.)
மேக ஒழுங்கு - மின்நிரை - உரும் ஏறு -
இவைமுறையே பலகைக்குலம் - வாள் - ஆடவரோசை -
இவற்றுக்கு உவமிக்கப்பட்டன. மேகக்கூட்டம் முன்னர்த்
தெரிவன.
மின் - அவற்றின் சேர்க்கையிற் பின்னர் உளவாகிக் காட்சிப்படுவன.
இடியேறு - மின்னல் தோன்றியபின் சிறிதுபோது
தாழ்த்துச்
செவிப்புலப்படுவன. மேகங்கள் தொடர்ந்தும், மின்னும் இடியும்
இடைவிட்டும் காணப்படுவன. ஒரே காலத்து ஒரே இடத்து
வானிற்றோன்றிய மின்னும் இடியும் அவ்வவற்றின் ஒளி - ஒலி
வேக ஏற்றத் தாழ்ச்சி காரணமாக மின் முன்னும் இடி பின்னும்
புலப்படுவனவாதலின் அம்முறையே மின்னை முன்னும் இடியைப்
பின்னும் வைத்தார். மேகத்தினின்று இவ்விரண்டுந் தோன்றலின்
மேகம் முதலிற் கூறப்பட்டதும் காண்க. கரிய பலகைக்கூட்டம்
மேகங்கள் போன்றன என்பது. பண்புவமம்.
இடையே
கொடு - இடை இடையே கொண்டு. தோன்றி
மறைந்து காணப்படுதல் இடையே எனக் குறிக்கப்பட்டது.
மாக
மருங்கினும் மண்ணினும் - வானிலும் நிலத்திலும்.
மேகம் - மின் - இடி - இவை புறப்பட்டுநிகழ்வது வானிலும்,
புலப்பட்டுத் தாக்கித் தொழில் செய்வது நிலத்திலுமாம். இவ்வாறே
ஆடவர் செல்வது நிலத்தும், அவர்கள் ஏந்திய பலகைக் குலமும்
வாளும் மேலிடத்தும் தோன்றுவன. எனவே இவ்விரு வகையும்
மேலிடத்தும் மண்ணிலும் தொடர்வுறுவன என்ற தன்மை காண்க.
மின் தாக்கிற்று, இடி வீழ்ந்தது என்ற வழக்குக்களும் இவற்றைப்
பிணைப்பது காண்க.
வல்
உரும் ஏறு - தாக்கியிடின் அழிவு உறுதியாதலின் வல்
என்றார்.
உரும்
ஏறு - பேரிடி. வெறு முழக்கோடொழியாது பயன்
றந்தேவிடும் பெரிய இடி. ஆணிடி - பெண்ணிடி என்றும்,
நெருப்பிடி - நீரிடி என்றும், குமுறல் - முழக்கம் என்றும் இவற்றின்
பயன்பற்றி வழங்கும் வழக்குக்களும் காண்க. மின் சத்தி, உடன்பாடு
- எதிர்மறை - என இருவகைத்து எனவும், இவை மேகவரிசைகளின்
எதிரெதிரிற் கூர்வனவாகு மெனவும், இவை ஒன்றையொன்று தாக்கித்
தம்முட்கலந்த போதே மின்னல் விளைவன எனவும், அவ்வாறு
கலக்கும்போது உளதாகும் முழக்கமே இடி எனவும், பிறவாறும்,
இதுபற்றி நவீன சாத்திரிகள் கூறும் முடிபுகளும் இங்கு
இவ்வுவமானத்துப் பொருந்தக் காண்க. போர்வீரர்களின் வீரப்
பிரதாப ஆரவாரம் இடிபோன்ற தென்ப.
ஆள்வினை
- ஆளுந் தன்மையின்மேம்பாடு.
முயற்சியுடைமை - மெய்ம்முயற்சியுடையனாதல் என்பர்
பரிமேலழகர். பலகைக்குலம் ஆள்வினை - வாள் ஆள்வினை
என ஈரிடத்தும் கூட்டுக. நடுநிலைத் தீபம், வாள் மாற்றாரைக்
கொல்லுதலும் பலகைக் குலம் தற்காப்புச் செய்தலும் குறித்தலின்
இரண்டிலும் ஆள்வினை வேண்டப்படும். பலகைக்குலத்தையும்
ஆள்வினையையும் வாளையும் உடைய ஆடவர். உடைய என்பது
ஈறு குறைந்து நின்றது, ஆடவர் - ஆண்மக்கள்,
இங்குப்
போர்வீரர்களைக் குறித்தது. ஆண்மக்களே பெரும்பான்மையும்
போர்மள்ளராயினும் வாளுடையார் என்னாது வாளுடை யாடவர்
என்றது தேற்றமும் சிறப்புங் குறித்தது. பெண்களும் போர்
மக்களாதல் சிறுபான்மை முன்னாளிலும் காணப்படும்.
காகம்
மிடைந்த களம் - போர் குறித்து மக்கள்
புறப்படுதல் கண்ட காகங்கள் தம் இயற்கையுணர்வானே போர்
விளைவுண்டென்றும், அதன் விளைவாகக் களத்திற்படும்
நிணங்களின் உணவுண்டென்றும் கண்டு எதிர்பாத்தவைகளாய்,
வீரர்கள் களத்திற் கூடுமுன் கூடின. காகபலி கொடுப்பார்
பலியிடுமுன்னர்க் காகங்கள் கரைந்து திரண்டு வந்து கூடுதல்
கண்கூடு. இவ்வாறன்றிப் போர் வழக்கமாய் நிகழும் களமாதலின்
காகங்களுக்கு நித்திய உணவு கிடைக்குமாதலின் அவை
கூடிநின்றன என்றலுமாம். இந்தவெளி (620)
என்று சிறப்பிற்
சுட்டியதும் காண்க.
இருகைகளின்
- இருவர் பக்கங்களினும். உம்மை தொக்கது.
கலந்தனர்
- சேர்ந்து கொண்டனர். மின்கலத்தலால்
உருமேறு உண்டாகும் வகைபற்றி உவமானத் துரைத்ததனை இங்கு
வைத்துச் சிந்திக்க. உருமேறு முன்மேக ஒழுங்கு கொடு, மின் நிரை
இடையே கொடு, மாகமும் மண்ணும் செல்வன எனக் கூட்டுக.
இப்பாட்டாற்
போர் கலக்கும் முன் நிலை கூறப்பட்டது. 15
|