623.
கால்கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்க
                               ளடங்கிய
வாளொளி வட்டமு னைந்திட வந்திரு கைகளின்
                               முந்தினர்;
வேலொடு வேலெதிர் நீள்வன மேவிய பாதலம்
                               விட்டுயர்
ஞாலமு றும்பணி வீரர்க ணாநிமிர் கின்றன
                               வொத்தன.
16

     (இ-ள்.) கால்கழல்.......முந்தினர் - கால்களில் வீரக்கழல்
கட்டிய போர் மள்ளர்கள் கைகளில் உடலை மறைக்கும்
ஒளிவட்டமும் வாளுமாகக் கலந்து போர்புரிய வந்து இருவர்
பக்கத்தும் முந்திப் பொருதனர்; வேலொடு வேலெதிர் நீள்வன -
(இருவர் பக்கத்தும்) வேற்படையொடு வேற்படை மாறாகப் போரில்
நீள்கின்றவை; மேவிய.....ஒத்தன - தாந்தாம் இருந்த பாதல
உலகத்தைவிட்டு மேலிருக்கும் நிலவுலகத்தைப் பொருந்துகின்ற
நாகவீரர்களின் நாக்கள் மேலே நிமிர்கின்றவற்றைப் போன்றன.

     (வி-ரை.) ஒளிவட்டம் - ஒளியுடைய வட்டவடிவமா
யமைந்த கேடகம், மெய்களடக்கிய ஒளிவட்டம் என்க.
மெய்களடக்குதல் தம்முடலின்மேல் மாற்றார் வீசும் படையின்
ஊறு படாதபடி மறைத்தல். ஒளிக்க உதவும் பலகை என்பாருமுண்டு.
இது தற்காப்பு. முன்னர் வரவேண்டிய ஒளிவட்டம் எதுகை நோக்கி
வாள் - என்பதனை முன் கொண்டு நின்றது.

     கைகளில் - கைகளிரண்டில். இடதுகையிற்பலகையும்
வலக்கையில் வாளும் ஏந்துதல் மரபு. ஏந்திய என்பதனை வருவிக்க.
கைகளில் ஏந்திய ஒளிவட்டமும் வாளும்முனைந்திட என்க.
வாள்ஒளி வட்டம்
- வாளைவேகமாகச் சுழற்றிவீசுதலால் ஆகிய
ஒளிவட்டம் என உரைத்து இருகைகளிலும் இரண்டு வாள்கொடு
வீசிப் பொருத வீரர்கள் செயலைக் குறித்ததாக உரைத்தலு மொன்று.
இப்பொருளில் ஒளி வட்ட மென்றது ஒளியுடைய வாளின் வேகச்
சுழற்சியாலாகிய வட்டத்தை. "கறங்கோலை கொள்ளிவட்டம்" என்ற
வழக்கும் காண்க. கைகளில் ஏந்திய வாட்களின் சுழற்சியே தமது
மெய்யை மறைத்துக் காக்கவும் எதிர்த்தாரை முனைந்து பொரவும்
பயன்பட்டன என்றபடி. மின்னிரை (622) சுழலும்போது
ஒளிவட்டமாக்கல் இயல்பாம். வாள்வீரரிற்
பெரும்பான்மையாராய்ப் பலகையும் வாளும் ஏந்திப் பொருவாரை
மேற்பாட்டிற் கூறி, அவருட் சிறுபான்மை இரு கைகளிலும்
இரண்டு வாள் ஏந்திய வீரரை இங்குக் குறித்தார் என்றபடி.

     வாள் - ஒளி என்று கொண்டு, வாள் ஒளிவட்டம் - மிக்க
ஒளியுடைய கேடகம் என்றுரைப்பாரு முண்டு. மேலே கண்டவாறு
இப்பாட்டின் முன்னிரண்டு அடிகள் வாட்போர்வீரர் செயல்
குறியாது, பலகையும் வேலும் ஏந்திப் பொரும் வேற்படைவீரர்
செயலைக் குறிப்பதாக உரைத்தலுமாம். இப்பொருளில்
மேற்பாட்டில்வாள் வீரரையும் இப்பாட்டில் வேல் வீரரையும்
அம்முறையே வரும்பாட்டில்வில் வீரரையும் கூறியதாகக் கொள்க.
கேடகம் பெரும்பான்மையும் வட்ட வடிவமாக அமைவதாம்.
சிறுபான்மை சதுர வடிவாயும் அமைப்பர்.

     முந்தினர் - கலந்து போர் செய்வதில் முற்பட்டனர்.

     வேலோடு வேலெதிர் நீள்வன - வாளினை
வீசிப்பொருதலும், வேலினை நீட்டித் தாக்கிப் பொருதலும் உரியன.
ஆதலின் நீள்வன என்றார். இது வேற்படைஞர் போர் குறித்தது.
எதிர் - எதிரெதிராக. நீள்வன - நிமிர்கின்றன (வற்றை) - ஒத்தன
என்று கூட்டுக. இரண்டாம் வேற்றுமைத் தொகை.
இல்பொருளுவமை. பாதலம் விட்டு உயர் ஞாலம் உறும் -
தற்குறிப்பேற்ற அணி. பாதலம் பாவ உலகமாகலின் அதைவிட்டு
உயர்ந்த உலகம் உறுவார் போல என்பது.

     பணிவீரர்கள் நாநிமிர்கின்றன - நாக வீரர்களின் நாக்கள்
வெளியே நீண்டு சுழல்கின்றவற்றை. அனந்தன் கார்க்கோடகன்
முதலியோர் நாக வீரர்கள். நாகங்கள் நீண்ட நாவுடையன; அவை
நாவை நீட்டிச் சுழற்றும் இயல்பும் உடையன; அவை கொடிய
சீற்றமும் வீரமும் குத்தித்தாக்கும் இயல்புமுடையனவாதல் முதலிய
தன்மைகளை இவ்வுவமையில் வைத்து அழகுபடக் கண்டு கொள்க.

     ஒளிவட்ட முனைத்திட - என்பதும் பாடம். 16