624.
|
வெங்கண்
விறற்சிலை வீரர்கள் வேறிரு கையினு
நேர்பவர்
தங்கள் சிலைக்குல முந்தின தாவில் சரங்க
ணெருங்குவ
பொங்கு சினத்தெரி யிற்புகை போகு கொடிக்கள்
வளைத்தெதிர்
செங்கண் விழிக்கனல் சிந்திய சீறுபொறிச்செல
வொத்தன. 17 |
(இ-ள்.)
வெங்கண்.......நேர்பவர் - வெவ்விய கண்ணுடையராய்
வலிய வில் ஏந்தியவீரர்கள் பிறிதோரிடத்தில் இருவர்பக்கமும்
போர்புரிவாராகி; தங்கள்........நெருங்குவ - தத்தம் விற்
கூட்டங்களினின்றும் ஏவிய கெடுதலில்லாத அம்புகள் ஒன்றை
யொன்று நெருங்கி முனைக்கும் செயல்; பொங்கு சினத்து - மிக்க
கோபத்தில்; எரியில் வளைத்து - மூண்ட தீயினின்றும் புகை
போகும் மண்டிலங்கள் போல வளைத்து; செங்கண்....சிந்திய -
சிவந்த கண்களின் (கோபத்) தீயினின்று எதிரெதிராகப் போந்த;
சீறு....ஒத்தன - சீறித் தெறிக்கும் பொறிகள் செல்லுதலை ஒத்தன.
(வி-ரை.)
இப்பாட்டான் விற்போர்வீரர் போர்ச்செயல்
குறிக்கப்பட்டது.
வெங்கண்
- வெவ்விய தறுகண்மை. விறல்
- வலிமை.
சிலை வீரர் - விற்படை வீரர்கள்.
வேறு - முன் சொன்ன
வாட்படை வேற்படைப் போர் வீரர் முனைந்த இடத்தினின் வேறாக
அணிவகுத்து. இரு கையினும் - இருவர் பக்கத்தும்.
முன்னர் இரு
கைகளின் - என்றது காண்க. நேர்பவர் - முற்றெச்சம் நேர்வராகி
உந்தின என்க.
சிலைக்குலம்
- குலம் - கூட்டம் - வரிசை எனும்
பொருளில் வந்தது.
சரங்கள் நெருங்குவ
- பொறிச் செலவை ஒத்தன என்க.
செலவு - செல்லுதலை - இரண்டாம் வேற்றுமை
உருபு விரிக்க.
பொங்கு
சினத்து - சினத்து விழி என்றும், சினத்து எரி
என்றும் இரண்டுக்கும் கூட்ட நின்ற முதனிலைத் தீவகம். முன்னர்
எரி துள்ளினாலென (527) என்றது காண்க. ஆண்டுரைத்தவையும்
இங்கு உன்னுக.
எரியிற்
புகை போகு கொடிக்கள் - தீமூண்டு எரியும்
போது அதினின்றும் முன்னர்ப் புகைப்படலம் வளைவு வளைவாகக்
கொடிகள் போலத் தொடர்ந்து மேற் செல்வதியல்பு. கொடிக்கள்
வளைத்து - புகைக் கொடிகள்போல வளைத்து. ஒருவயிற்
போலியுவமையணி. மிக்க கோபங் கொண்டபோது புருவங்கள்
மாறி மாறி வளைந்து காட்டும் இயல்பு குறித்தது. சரம் உந்தும்
தோறும் சிலைகள் வளைவன சினத்திலே புருவங்கள் மாறி மாறி
வளைவன போன்றன. அவ்வாறு புருவங்கள் வளைவன எரியிற்
புகை போகு கொடிக்கள் வளைவன போன்றன. அம்புகள் சினத்து
விழியிற் பொறி போன்றனவாம். அவை தாம் சினத்தெரியிற் சீறு
பொறியும் போன்றன. இவை மூன்றினும் பொங்குசினம்
அடிப்படையாயினதும் காண்க. இங்குச் சிலை வீரர்களது சிலையின்
அம்புகளும் கண்களினின்று கோபத் தீப்பொறிகளும் பறந்தன
என்றதோர் தொடர்பாயின குறிப்பும் காண்க.
செங்கண்
விழி - பொங்கு சினத்தாற் சிவந்து
செங்கண்ணாகிய விழி.
சீறுபொறி
- சீறுதலாற் சிந்தித் தெறிக்கும் தீப்பொறிகள்.
சிறு என்பது முதல் நீண்டு சீறு என நின்றதாகக் கொண்டு
சிறுபொறிகள் என்பாருமுண்டு.
இம்மூன்று பாட்டானும்
வாளின் போர் - வேலின் போர் -
வில்லின் போர் தொடங்கி மூளும் வகை கூறிய ஆசிரியர், அவை
மூண்டு நிகழும் நிகழ்ச்சிகளை மேல் வரும் இரண்டு பாட்டாற்
கூறுகின்றார். 17
|