625.
|
வாளொடு
நீள்கை துடித்தன; மார்பொடு வேல்கள்
குளித்தன;
தோளொடு வாளி நிலத்தன; தோலொடு தோல்க
டகைத்தன;
தாளொடு வார்கழ லின்றன; தாரொடு சூழ்சிர
மற்றன;
நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர்செய்
களத்தினில். 18 |
(இ-ள்.)
வெளிப்படை. தங்களது இழைத்த நாளெல்லையுடனும்,
சீறிப் போர் புரியவல்ல அவ்வீரர்கள் நாடிய போரினைச் செய்யும்
அந்தப் போர்க்களத்திலே வாள்களோடு அவற்றைத் பிடித்த நீண்ட
கைகள் துடித்தன; மார்புக்குள்ளே வேல்கள் குளித்தன; (தாம்
துளைத்து அறுத்த) தோள்களோடு அம்புகள் நிலத்தில் வீழ்ந்தன;
வீரர்களது உடலிற்றாக்கி அழுந்திக் கேடகங்கள் அத்தோலுடனே
ஒன்றுசேர்ந்து பதிந்தன; கால்களுடன் அவற்றிற் கட்டிய வீரக்
கழல்களும் இற்றன; சுற்றிய மாலையுடன் அவை சூழ்ந்த தலைகளும்
அற்றன.
(வி-ரை.)
மேன்மூன்று பாட்டானும் கூறிய வாள், வேல், வில்
என்ற மூன்று வகைப் படைகளின் போர் மூண்ட விளைவுகளை
அம்முறையே இப்பாட்டிற் கூறுவது காண்க. வாளொடு நீள்கை
துடித்தன என்பது வாட்போர் விளைவும்; மார்பொடு வேல்கள்
குளித்தன என்பது வேலின் போர் விளைவும், தோளொடு வாளி
நிலத்தன என்றது வில்லின் போர் விளைவும் காட்டியன.
வாளொடு
நீள்கை துடித்தன - போர் செய்ய வாளினைப்
பிடித்து நீட்டிய கைகள் வாள் பிடித்தவாறே அறுபட்டு வீழ்ந்து,
அற்று வீழ்ந்தபின்னும் வாளின் பிடிவிடாமல் வாளொடு துடித்தன.
உடலினின்றும் அறுபட்ட துண்டங்கள் அவ்விரத்த ஒட்டம்
ஓயும்வரை துடித்தலும் பிடிவிடாது. பற்றியபடியே முடங்குதலும்
உடற்றத்துவமாம். இவ்வகையால் அற்றுவீழ்ந்த பின்னரும் வாளொடு
கைகள் துடித்ததனை அங்கங்களும் அப்போதும் வீரங்குன்றவாயின
என நாடகச்சுவை பெற உரைத்தது அணிநலமாம்.
மார்பொடு
வேல்கள் குளித்தன - எறிந்த வேல்கள்
எறியப்பட்டாரது மார்புகளுட்புக்குக் குருதியுட்டோய்ந்தன.
குருதிநிறைந்த இரத்தாசய இருப்பிடமாகிய மார்பினை நீர்நிலையாக்கி
அதிற்புக்கு மறைவதனைக் குளித்தல் என உருவகம் செய்தார். ஓடு
என்ற மூன்றனுருபு ஏழாவதன் பொருளில் வந்தது. உருபு மயக்கம்.
"மெய்வேல் பறியா நகும்" (குறள்) என்பதன் பொருளை இங்கு
வைத்துக் காண்க.
தோளொடு
வாளி நிலத்தன - வீரர்கள் ஏவின அம்புகள்
குறிபிழையாது தம் ஏவலைச் செய்தே வீழ்ந்தன என்பது குறிப்பு.
"சிலையிராமன் றோள்வலி" என்ற படி வில் வீரர் தோள்வலி
மிக்கார். ஆதலின் வில்வல்ல பகைவரது தோளினையே குறித்தெய்து
தோள் துணிப்பது கருதுவர் என்பார் தோளொடு வாளி என்றார்.
வில்லின் போர் வலிமை தோளின்பாலதாம் என்பது. இவ்வுட்கருத்தே
வாளொடு நீள்கை துடித்தன என்ற இடத்தும்
வாட்போருக்கும்
பொருந்துவது காண்க.
இங்கு வாள் -
வேல் - அம்பு எனும் இம்மூவகைப்படைகளில்,
வாள், பிடித்த கையினது பிடிப்பினுள்ளும், வேல் மார்பினுள்ளேயும்,
அம்பு அறுபட்டதோளின் வேறாயும் போந்த இயல்பு
காட்டியவகையில் இம் மூவகைப்படைச் செயலுக்குமுரிய மூவகை
வெவ்வேறு தன்மையும் காட்டியபடியாம்.
தோல்
- கேடகங்கள். தகைத்தன -
மோதுதலால்
நெருங்கின. தகைத்தன என்ற பாடம் தவறு. தோலொடு தோல்
-
சொற்பின் வருநிலை. இதற்குப் பல கைகளோடு பல கைகள்
முட்டின் என்றுரைப்பாரு முண்டு.
தாளொடு
வார் கழல் இற்றன - கால்களுடன்
அவற்றிற்கட்டிய கழலும் அற்றன. வார் கழல் -
வீரங்குறிக்க
வரிந்து கட்டிய கழல். கால் கழல் கட்டிய (623) என்றது காண்க.
அது தாளொடு வீழ்தல் என்றது தாள் துண்டிக்கப்பட்டு
அறும்வரையில் கழலாற் குறித்த வீரம் குறையாது போர்முனைந்து
வீரன் நின்றனன் எனவும், தாளறுத்து இவனது வீரங் குறைத்தாலன்றி
இவனை மாற்றலரிதென்றும், வேறு வழியில்லை என்றும் கண்ட
பகைவன் இவனது தாளினை இறச் செய்து இவனது வீரத்தைத்
தொலைத்தானென்றும் உட்குறிப்புப் பெறத் தாளொடு வார்கழல்
இற்றன என்றார். தாள் - முயற்சி எனக்கொண்டு,
விடாமுயற்சியொடு
பிரியாது பிணைந்து நின்ற கழல் இற்றன என்ற குறிப்புப்பட
உரைத்தலுமாம்.
சூழ்
தாரொடு சிரம் அற்றன - என மாற்றுக.
தார்
- போர்க்குரிய தும்பை - வாகை முதலியனவாகச்
சூடப்படும் அடையாள மாலைகள், மாலைசூடி மிக்கெழுந்த சில
வீரர் உயிரைப் பொருட்படுத்தாது அஞ்சாநெஞ்சுடன் தலையற்று
வீழும் வரை போர் செய்தனர் என்பது, தாளற்று வீழ்ந்த பின்னரும்
வீரஞ் செய்வாருளராதலின் அவர் வீரம் தலையற்ற போதே
ஒழிந்தன என்பதும் குறிப்பு. 627 பார்க்க. இங்குக் கை - மார்பு -
தோள் - தோல் - தாள் என ஒவ்வோர் அங்கமாகக் கூறி வந்தபின்
உடலினுட் டலைமையாகிய தலையினைக் கூறினார். பற்பல
அங்கமும் கண்டதுண்டமாக்கப்பட்டார் வீரர் என்பது. இதன்
விளைவு மேற்பாட்டிற் கூறுவது காண்க.
நாளொடு
சீறி மலைப்பவர் - வாழ்நாளுட.னும் சீறி -
இழைத்த நாளெல்லை என்னும் விதியுடனேயும் சினந்து என்பது.
இங்குப் போர் செய்தொழியாவிடின் இவர்கள் இன்னுஞ் சின்னான்
உலகின் வாழலாம்; அவ்வாறு போரின்றி வாழ்வது வீரராயினார்க்கு வாழ்வன்று; வீண்வாழ்வே
மென்று தம் வாணாளை முனிந்து
போர்துணிந்து செய்தனர் என்க. "பேசாத நாளெல்லாம் பிறவா
நாளே" என்ற ஞான நூன்முடிபுபோலப், போரிற் கழியா நாள்
நாளல்ல என்பது உலக நூல் வகையில் வீரர் முடிபு. "அசைவி
லூக்கத்து நசைபிறக் கொழியப், பகை விலக்கியதிப் பயங்கெழு
மலையென" (95 - 96 வரிகள் இந்திர விழவூரெடுத்த காதை -
சிலப்பதிகாரம்) என்றதும், அதற்குத் "தமிழ்நாட் டெல்லையுள்
தன்னோடு எதிர்த்துப் பொரும் அரசரை இரண்டு திசையினும்
பெறாத கரிகாலன் போரிலே பேராசை யுடையனாதலினாலே..."
என்பது முதலாக உரையாசிரியர். அடியார்க்குநல்லார் எழுதிய
உரையிற் கண்டவையும், 1பிறவும் இங்கு உன்னுக.
இவ்வாறு வாழ்நாளெல்லை
வருமுன் போரில் மடிவதனைச்
செய்தலால் நாளொடு சீறி மலைப்பவராயினர். அன்றியும் போரில்
மடிந்த பின்னும் குறையுடல்களாலும் சில நேரம் அப்போரினையே
தொடர்ந்து செய்தல் - ஆருயிர் கழியவு நிற்பவர் (628)
முதலியனவாகப் பின்னர்க் கூறுமாற்றால் அறியப்படுகின்றதனாலும்,
நாளெல்லை கடந்த பின்னும் சீறி மலைப்பவராயினர். எனவே
நாளெல்லையில் அமைவுட் படாது முன்னும் பின்னும் தமது
போரினாற் கடத்தலின், பிறருடன் கடக்க முடியாத நாளுடன் -
காலத்துடன் - சீறி மலைப்பவர் என்றார்.
இவ்வாறன்றித்
தம்ஆயுள் பெறுதற்கரிய சிறப்பிற்றாக
அதனையும் பொருட்படுத்தாது வெறுத்து மலைதலில் என்றும்,
நாளை விரும்பி யிருத்தல் போர்வரும் நாளைக் குறித்தேயாகலான்
அப்போர் வருங்கால் அப்போரை விரும்பி நாளை வெறுத்தார்
எனவும், நாள் முழுதும் கோபித்து யுத்தஞ் செய்வாரெனவும்
பலவாறு முரைப்பாருமுளர்.
மலைப்பவர்
- இப்போர்வீரர் தம் வினையான்
மலைபவராகாது, பிறர் வினையாற்கூடி மலைந்தாராதலின்
மலைப்பவர் எனப் பிறவினைப் பொருள் பெற ஒற்று இரட்டித்தது.
இப்பாட்டு மூண்டபோர்
நிகழ, இருபக்கத்தின் வன்செயல்
குறித்தலின் துடித்தன - குளித்தன - நிலத்தன - என எல்லா
வினைமுற்றுக்களும் வலித்த ஓசைபடப் புணர்த்திக்கூறினார்.
அதற்கேற்ப மலைப்பவர் என்றார் என்பதுமாம்.
வலிந்த போரின்
மூண்டசெயல் ஓய்ந்தபின் மெலிவு
நிகழுமாதலின் அந்நிகழ்வின் வரும் பாட்டில் பரந்தன -
அலைந்தன - என எல்லாம் மெல்லோசை பட வரும்
வினைமுற்றுக்களாற் கூறினதும் காண்க. மள்ளர்களுட் போர்
மூண்டு நடந்தபின்னர் மெலிந்து ஓய்வுறுங்காலையிற் பரந்த
களத்தில் அங்கங்கு ஒரோர் இடங்களிற்றனித்த வகையிற் போர்
நிகழும். அவ்வகைகளை அதன்மேல் 627, 628, 629, என்ற மூன்று
பாட்டானும், வாள், வேல், வில் என்ற இம்முறையே பற்றிக் கூறும்
சிறப்பு வகையும் காண்க.
621 வரை சரிதங்கூறிப்
போந்த யாப்பினை மாற்றிப் போர்
தொடங்கி நிகழும் வலிந்த நிகழ்ச்சிகளைக் குறிக்க முடுகிய சந்த
யாப்பின் 622 முதல் 631 வரை யாத்த நயமும் சொற்பொருட்
பொருத்தமும் காண்க. இது குடி மக்களுள் அக்காலத்து வழக்கில்
நிகழ்ந்த சிறுபோர். இவ்வாறே கண்ணப்பர்
புராணம் 68 முதல் 91
வரை வேட்டையும், புகழ்ச் சோழர் புராணம்
20 முதல் 33 வரை
நால்வகைச்சேனையுடைய பெரும்போரும் கூறிப்போந்த
சொற்பொருட் பொருத்தங்களும் அழகும் காண்க. 1613 பார்க்க.
இவ்வாறு கூறப்படும்
பொருட்குத் தக்க சொல்லமைதி பெற்று
ஒத்து இயலும் இலக்கணம் மாபெருங்கவிகளினிடத்தே
காணப்படுவதோ ரியல்பென்க.
மலைபவராகி நாடிய
போர் செய்யும் என்று கூட்டுக. 18
எனது சேக்கிழார் 107-111
பக்கங்கள் பார்க்க.
|