626.
|
குருதியி
னதிகள் பரந்தன; குறையுட லோடி யலைந்தன;
பொருபடை யறுதுணி சிந்தின; புடைசொரி குடருடல்
பம்பின;
வெருவர வெருவை நெருங்கின; விசியறு துடிகள்
புரண்டன;
இருபடை தனினுமெதிர்ந்தவரெதிரெதி
ரமர்செய்பறந்தலை. 19 |
(இ-ள்.)
வெளிப்படை. இருபக்கத்துப் படைகளிலும் முன்நின்ற
வீரர்கள் எதிரெதிராகப் போர் செய்யும் போர்க்களத்தில்,
இரத்தப்பெருக்குகள் ஆறுகள் போலப் பரவின; உடற்குறைகளாகிய
முண்டங்கள் ஓடி அலைந்தன; போர்ப்படை வீரர்களுடலின்
அற்றதுண்டங்கள் சிந்தின; பக்கங்களில் வெளிவந்த குடல்களோடு
கூடிய உடல்கள் நிரம்பிக் கிடந்தன; அச்சப்படுமாறு கழுகுகள்
கூடின; வார்கள் அறுபட்ட உடுக்கைகள் புரண்டன.
(வி-ரை.)
குருதியின் நதிகள் பரந்தன - நதிகளிற்
குருதிபரந்தன என இன் - விகுதி பிரித்துக் கூட்டுக. இன் - ஒப்புப்
பொருளில் வந்த ஐந்தனுருபு. பெருகி ஓடுவதனை ஆறு என்பது
வழக்கு. ஆறுபோல இரத்த வெள்ளங்கள் பெருகிப் பரவின
என்பதாம். பண்பு உவமை. இங்ஙனமின்றிக் குருதியாலாகிய நதி
என உருவமாகக் கொண்டுரைத்தலுமாம்.
வாள் - வேல்
- வில் - என்ற மூவகைப் படைகளின் போர்
வெவ்வேறிடங்களில் மூண்டதனால் அவ்வக்களத்தினின்றும் இரத்த
வெள்ளம் பரந்தமையாலே நதிகள் என்று பன்மையாற் கூறினார்.
மழை யுண்டாயின் ஆறு பெருகுதலியல்பு. இங்குப் படைகள்
மழைபோலப் பொழிந்தனவாதலின் அதன் விளைவாகிய இரத்தப்
பெருக்கை நதிகள் என்று வமித்தார். பரந்தன என்று குறிப்புமது.
குறை
உடல் - உடலிற் றலையங்கமாகிய தலைகுறைந்த
உடல், முண்டம் என்க. கவந்தமென்பர். உடற்குறை என்றும்
வழங்குவர்.
ஓடி
அலைந்தன - தலையற்ற பின்னும் முண்டமான
அவ்வுடல்கள் இரத்த ஓட்டமும் உயிர்ச்சத்தியும் ஓயும் வரை சிறிது
போது துள்ளி அலைவது இயல்பு. மேற்பாட்டில் நீள்கை துடித்தன
என்றதும் அது. அவ்வாறு துள்ளும்போது தமது முன்னை முயற்சியிற்
றொடர்ந்தபடியே செல்வனவாயினும் ஒரு குறியில்லாது
குதிப்பனவாதலின் அலைந்தன என்றார்.
படை
- படை ஏந்திய மள்ளர். ஆகுபெயர். படை -
பொருத வெவ்வேறு படைக்கலங்கள் என்று கொண்டு
துண்டிக்கப்பட்ட வாள் - வில் முதலிய படைத் துண்டங்களே
நிலத்திற் சிந்தின. அவற்றின் எஞ்சிய பகுதி அவற்றை ஏந்திய வீரர்
கைப் பிடியினின்றும் நீங்காது அவர் கையினுள் நின்றன.
என்றலுமாம். விற்படைதுணிய்வும் (629) என்றது காண்க. துணி -
துண்டம், துணிக்கப்படுதலால் துணி எனப்பட்டது.
புடை
சொரி குடர்உடல் பம்பின - வயிற்றினிடை வாளும்,
வேலும், அம்பும் தாக்கக் குடல்கள் உடலின் பக்கங்களில்
வெளிவந்து சொரிந்தன. குடர் - குடல் ஈற்றுப்போலி.
இது பெரு
வயிற்றினைத் தொடர்ந்து கீழ்வயிற்றினுள், 34 அடி நீளம் வரை
குழாய் போன்று சுருள்சுருளா யமைந்த உடற்பகுதி. வயிற்றின்
ஊறுபட்ட திறப்பின் வழியே அவை வெளிவந்து நீண்டு
உள்ளிருக்கும் சீரணித்த உணவுப் பண்டங்களுடன் தொங்குதல்
இங்குச் சொரிகுடர் எனப்பட்டது. இவை நீண்டு சரியுந் தன்மையைப்
பின்னர்ப் "புண்படு வழி சொரிகுடர்" (631) என்றது காண்க.
பம்பின
- பம்புதல் - நிறைதல்.
எருவை
- கழுகுகள், சாதியொருமை யாதலின் நிறைந்தன
எனப் பன்மை வினைகொண்டு முடிந்தது. இவை பிணந் தின்பதற்குக்
கூடுவன. வீரர்கள் உயிருடன் போருக்குச் செல்லும்போதே
அவர்களது பிணத்தைத் தமது இயற்கையறிவால் அறிந்து
எதிர்பார்த்துக் கூடிய காகங்கள் போலல்லாது, அவர்கள்
உயிரற்றபின் பிணமும் நிணமும் கண்டபின்னர் அவற்றை உண்ணக்
கூடும், அறிவுக் கூர்மையற்ற கழுகுகளை வெருவா
என்றது
இவற்றின் பயம் விளைவிக்கும் கோரச் செயல்கள் கருதி என்க.
இவற்றுள் சில கழுகுகள் பெரிய உருவுடையனவாகிக் கொடுமை
பெற உடலைப் பிடுங்கித்தின்பன; மனித உடலை அவ்வாறே
தூக்கிப் பறந்து செல்லவும் வல்லனவாதலும் காண்க. "கழுகு
பருந்தொடு கொண்டெழு பொழுதினும்" - (631) என்று பின்னர்க்
குறித்தலும் காண்க.
விசி
அறு துடிகள் - விசித்தல் - கட்டுதல், இங்கு விசி
என்பது கட்டப்பட்ட வாருக்கு வந்தது. ஆகுபெயர். துடிகள்
-
போர்முனையிற் சங்கு - துடி - முதலியன முழங்குதல் வழக்கு,
"வியன்துடி" (581) என முன்னர்க் குறித்ததும் காண்க.
புரண்டன -
விசித்த வார்கள் அற்றெறியப்படுதலால் உருண்டோடின:
எதிர்ந்தவர்
- போரில் எதிர்த்துப் பொருதவீரர், அமர்
-
போர், பறந்தலை - போர்க்களம். ஏழாம்
வேற்றுமைத் தொகை.
பறந்தலையினிடத்துப் - பரந்தன - அலைந்தன என்பன முதலாகக்
கூட்டியுரைக்க.
போர் ஓய்ந்த
களத்திற் பரந்த இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த
உறுப்புக்கள் - முண்டங்கள் - நிணங்கள் - முதலியனவும்
துள்ளியும் சிதறியும் ஒன்றோடொன்று தாக்கித் தொடர்ந்து போர்
புரிவன போன்றன. அதற்கு இணங்க வாரறுந்த துடிகளும் உருண்டு
தாக்கி ஓசை முழக்கின் என ஒரு தொடர்பாக நகையும் வீரமும்
விரவிய சுவைபட உரைத்த குறிப்பும் காண்க.
இருபடையினினும்
- என்பதும் பாடம். 19
|