627.
நீளிடை முடுகி நடந்தெதிர் நேரிரு வரிலொரு
                             வன்றொடர்
தாளிரு தொடையற முன்பெயர் சாரிகை முறைமை
                             தடிந்தனன்;
வாளொடு விழுமுடல் வென்றவன் மார்பிடை
                          யறமு னெறிந்திட
வாளியினவனு மறிந்தன; னாயினர் பலருள
                            ரெங்கணும்.
20

     (இ-ள்.) நீள் இடை....ஒருவன் - நீண்டதூரமாக - நீண்ட
நேரமாக - விரைந்து எதிர்த்துப் போர்புரிந்து வந்த வீரர் இருவரில்
ஒருவன்; தொடர்...தடிந்தனன் - தன்னைத் தொடர்ந்தமாற்றானது
தாள்கள் இருதுடையோடு அற்று விழும்படிமுன் வெட்டி
வீழ்த்தினன்; வாளொடு...மறிந்தனன் - (இவ்வாறு வெட்டப்பட்டு)
விழுகின்ற உடலானது விழுமுன்னே தான் ஏந்திப் பொருத
வாளினாலே, தன்னை வென்றவனது மார்பு இடைபிளந்து அறும்படி
வீசவே சிங்கம்போன்ற அவனும் இறந்தான்; ஆயினர்...எங்கணும் -
இவ்வாறாக இறந்த வீரர்கள் பலர் அப்போர்க்களமெங்கும்
உள்ளாராயினர்.

     (வி-ரை.) இப்பாட்டான் அப்போர்க்களத்தில்
வெவ்வேறிடத்து நடந்த வாள் - வேல் - வில் எனும்
மூவகைப்போரில், வாட்போர் நிகழ்ந்த இடத்து ஓர் சிறப்புக்
கூறினார். 625-ல் போர்மூண்டு நிகழ்ந்த நிலைகூறி, 626ல் அது
ஓய்ந்த நிலைகூறி, இப்பாட்டால் அது ஓய்ந்தபின் அக்களத்துக்
காணும் ஓர் காட்சியைக் கூறுகின்றார்.

     நீள் இடை - காலத்தாலும் இடத்தாலும் நீண்ட இடை.
முடுகி நடந்து - ஓடுதற்கும் நடத்தற்கும் இடைப்பட்ட
வேகமுடையதோர் நடையில் நடந்து. இவ்விரு வீரரும் நேரத்தாலும்
தூரத்தாலும் நீண்டு வாள்வீசிப் பொருது விசையில் முன்னும்
பின்னுமாய் இடசாரி வலசாரியாக நடந்து போர்புரிந்து வந்தனர்.

     தொடர் தொடை அற - தாள் - தொடர்ந்து பொருதற்குத்
துணையாயிருந்த இரண்டு தாளும் தொடையோடு உடலினின்றும்
வேறாக அற்று விழும்படி. இரண்டு கால்களும் தொடையளவில்
வெட்டப்பட்டு வேறாக வீழ்ந்தன. உடலைத் தாங்கிநின்ற அவை
அறவே, இடையும் அதன்மேல் உள்ள உடற்பகுதியும் மற்றொரு
துண்டமாக வீழ்ந்தன என்க.

     சாரிகை முறைமை - வாட்போரில் முனைந்த இருவரும்
பலகையால் தத்தம் மெய்களை மறைத்துத் (623) தற்காப்புச்செய்து
போர் புரிவாராதலின், சாரிகை சுற்றி வாள் வீசிப் பொருதலில்
தொடையோடு வெட்டத்தக்க சமயம் நேர்ந்த வகையினாலே என்க.
"அடர்ந்தவனைக் கொல்லும் இடைதெரிந்து தாள் பெயர்க்கும்" (644)
எனப் பின்னர் இம்முறைமையை விளக்குதல் காண்க.
வேறுவகையால் அவனைக் கொன்று வெற்றி பெற இயலாமைபற்றி
இதுவரை தொடர்ந்து போர் செய்யத் துணைநின்ற தாள்களை
அறவெட்டி வீட்டி அவன் போரை ஒழிக்க எண்ணிய வீரன்
இவ்வாறு செய்தான் என்க. தாள் - முயற்சி என்ற குறிப்புமாம். 625
- பார்க்க.

     விழுமுடல் எறிந்திட என்று கூட்டிமுடிக்க.
தாள்தொடையோடு அறவெட்டப் பட்டதனால் மிக்க குருதி
வெளிப்பாட்டின் அதிர்ச்சியினாலும் (Shock and excessive loss
of blood)
நரம்புத் தாரைத் தொடர்ச்சி அற்றதனாலும் அவன்
உடனே இறந்துபடலால், அவன் எறிந்திட என்னாது, விழுமுடல் -
எறிந்திட என்றார். முன் - விழு முன்பே வென்றவன் மார்பு இடை
அறும்படி வாளினால் எறிந்திட என்க. இடையற - இடை
பிளவுபட.

     வென்றவன் - சாரிகை முறைமையில் தொடையறத் தாள்
வெட்டி வீழ்த்தியதனாலே தன்னை வென்றவனாக எண்ணிய அவன்.
மார்பு - அவ்வாறு எண்ணி இறுமாப்படைந்த நெஞ்சுக்கு
இடனாகிய மார்பு என்பது குறிப்பு. வீரர்களது வீரச் செருக்குக்கு
நிலைக்களன் மார்பிடமே என்பது "மண்டமர் கடந்தநின் வென்றா
டகலத்து" - (திருமுருகாற்றுப்படை), "திறற்படைகிழித்ததிண்
வரையகலம்" - (பதினொராந்திருமுறை - நக்கீரர்
- திருக்கண்ணப்பதேவர் திருமறம்), "நானென்று மார்தட்டும் பெருமானே" (திருப்புகழ்) முதலிய வற்றாளறிக.

     இங்கு, வீழும் உடலுடையான் தான் வீழுமுன்பே சாரிகை
முறையில் மாற்றானது மார்பைக் குறிவைத்து எறிந்தான் என்றும்
அவ் அளவில் தொடையற எறியப்பட்டான் என்றும் அறிக. இருவர்
எறிந்ததும் ஒரே கணத்தில் நிகழுமாறு சாரிகை முறையில்
வாட்போரின் கைவன்மை நிகழ்ந்ததென்பது.

     ஆளியின் அவனும் - சிங்கம்போன்ற அவனும். அவனும் -
விழுமுடல் என்றமையால் இவன் இறந்தமை - குறிப்பிடவே
இவனோடு அவனும் என இறந்தது தழுவிய எச்சவும்மை, இங்கு,
உம்மை சொன்மாத்திரையானன்றி உண்மையில் இறந்த தனையே
தழுவிய நயமூம் காண்க. உயர்வு சிறப்பும்மை என்றலுமாம்.
எங்கணும்
ஓரிடத்தினன்றிப் பல இடத்தும்.

     மரிந்தனன் - என்பதும் பாடம். 20