628.
கூர்முனை யயில்கொடு முட்டினர் கூடிமு னுருவிய
                                  தட்டுட
னேருர முருவ வுரப்புட னேர்பட வெதிரெதிர்
                                  குத்தின
ராருயிர் கழியவு நிற்பவ ராண்மையி லிருவரு
                                மொத்தமை
போரடு படைகொடளப்பவர் போல்பவரளவிலர்
                                பட்டனர்.
21

     (இ-ள்.) கூர்முனை...நிற்பவர் - கூரிய முனையுடைய
வேற்படையுடன் அணுகி எதிர்த்தவர்கள் முன்னால் நீட்டிய
பலகையினையும் மார்பினையும் நேராக ஊடுருவிச் செல்லும்படி
எதிரெதிராய் உரப்பாகக் குத்தினராகி அதனால் தத்தம் உயிர்கள்
போயின பின்னரும் அந்நிலையே நிற்கின்ற அவர்கள்;
ஆண்மையில்...போல்பவர் - வீரத்தில் இருவரும் ஒப்பார்
தன்மையைத் தத்தமது போர்ப் படையினைக் கொண்டு அளந்து
நிலையிடுவார் போன்றவராகிய வீரர் அளவிலர் பட்டனர் -
எண்ணிறந்தோர் இறந்துபட்டனர்.

     (வி-ரை.) இப்பாட்டு வேலின் போர்ப்பகுதீயின் சிறப்புக்
குறித்தது.

     முட்டினர் - "வேலொடு வேலெதிர் நீள்வன" (623) எனக்
கூறியவாறு வேற்படை, நீட்டிக் குத்திப் பொரும்
இயல்புடையதாதலின் முட்டிய என்றார். அயில் - வேல். தட்டு -
பலகை. முன் உருவிய தட்டு என்றது முன்னால் மெய்யை
மறைக்குமாறு உறை நீக்கி ஏந்திய பலகை.

     தட்டுடன் நேர் உரம் உருவ - தட்டினையும், அதனால்
நேரே மறைப்புண்டு நிற்கும் மார்பையும் ஊடுருவும்படி.

     உரப்புடன் - வீராவேசத்திற்குரிய சொல்லோடு என்பது
திரு. இராமநாதச் செட்டியார் உரைக்குறிப்பு. உறைப்புடன் என்பது
பாடமாயின் அதிக பலத்துடனே பலகையினையும் ஊடுருவி
மார்பைக் குத்துதற்குரிய மிக்க வலிமையுடனே என்க.

     நேர்பட - ஒப்பாக - இருவரும் ஒன்று போல. எதிர் எதிர்
குத்தினர்
- ஒரு கணமாவது முன்பின் என்றில்லாதபடி இருவரும்
குறிபார்த்து எதிரெதிராக ஒருவரை ஒருவர் குத்தினராகி. இது
வேற்போரின், நுணுகிய குறித்திறத்தின் மரபுகுறித்தது. இவ்வாறு
ஒத்த குறித்திறமில்லையாயின் ஒருவன் முன்னர்க் குத்துண்டு
இறந்துபட மற்றவன் வென்றவனாவன் என்பது. வாட்போரின்
குறித்திறன் மேற்பாட்டிற் குறித்தனர்.

     ஆருயிர் - பெறுதற்கரிய மானுடப் பிறவி பெற்ற உயிரின்
சிறப்புநோக்கி ஆருயிர் என்றார். கழியவும் - மார்பு பிளப்ப
வேலால்குத்துண்டபடியால் உயிர் போக; அது போயின
பின்னுமென்க, உயிரினுக்கு அழிவில்லை. அது நித்தப் பொருள்.
இங்குக் கழிய என்றது உடலினின்றும் கழிய என்றதாம். உயிர்
போயினபின் உடல் நிற்கலாற்றாது வீழுமியல்புடையது. இங்கு,
அவ்வாறன்றி இவருடல்கள் வீழாது நின்றன என்ற பொருளைக்
கழியவும் நிற்பவர்
எனச் சிறப்பும்மையாற் குறித்தார். உயிர்
போயின பின்னும் உடல் நிற்கும் நிலையுமுளதோ? எனின்,
நின்றிடும் நிலையாவது, இருவர் மார்பினுள்ளும் எதிரெதிர்
பலகைகளுடன் ஊடுருவி மார்பினுள் சென்ற வேல்கள் எதிரெதிராக
இரண்டு ஆப்புக்கள் கடாவியன போலாகவே, அவ்வேல்களை
விடாது பற்றிய இருகைப்பிடியும் நான்கு கால்களுமாகப்
பிணைத்ததோர் நாற்காலி போன்று நிற்பதாம்.

     ஆண்மையில்...போல்பவர் - இஃது தற்குறிப்பேற்ற உவமை.
படைகொடு அளப்பவர் - இவன் மார்பினுள் அவன் வேலும்,
அவன் மார்பினுள் இவன் வேலுமாக நீட்டிக் குத்தும் இருவரது
வேலும் அளவு காண்பது போன்றது. இது ஆண்மையில் இருவரும்
ஒத்த தன்மையைப் படையின் அளவாகிய கருவி கொண்டு
அளப்பவர் போன்றதாம் என்றார். கணமுந் தவறாது குறிபிறழாது
எதிரெதிர் குத்திய செயலே இவர்களது ஆண்மை ஒப்புக் காட்டிற்று.
இதனை இவர்கள் நின்ற நிலையின் மேல் ஏற்றிக் கூறினார்.
ஒத்தமையை அளப்பவர் - இரண்டாம் வேற்றுமைத் தொகை.
போல்பவர் அளப்பிலர்
- போல்பவராகிய எண்ணிறந்தோர்.
பட்டனர் - இறந்துபட்டனர்.

     கூடி முட்டினராய் நிற்பவர் அளப்பவர் போல்பவராகிய
அளவிலர் பட்டனர் என்று முடிக்க, முட்டினர் - குத்தினர் -
பட்டனர் - இறந்தகால வினைமுற்றுக்கள். இவை இவர்களின்
முற்றிய வினைகள் குறித்தன. நிற்பவர் - அளப்பவர் - போல்பவர்
- எதிர்கால வினையாலணையும் பெயர். இவை அவ்வினைகளால்
நிகழும் நிலைகள் குறித்தன.

     இது உறைப்புடைய வேற்போர் முடிந்து நின்ற
நிலையானமையால் முட்டினர் - தட்டுடன் என்பனவாதீ வல்லோசை
பெற்று முடிந்த சந்த யாப்பினாற் கூறினார். இவ்வாறன்றி வீழ்ந்த
நிலையில் உள்ள வாளின்போர், வில்லின்போர் முடிபுகளை மேல்
627ல் நடந்தெதிர் - என்பனவாதியாகவும், வரும் 629ல்
எதிர்த்தவர்
என்பனவாதியாகவும் மெல்லோசை பெற்று முடிந்த
சந்தயாப்பினாற் கூறுதலும் உன்னுக. இவற்றின் மேல் இரண்டு
பாட்டுக்களும் (630 - 631) அவ்வாறே மெல்லோசைச் சந்தத்தில்
யாத்தது இருபக்கத்துப் படைஞர் பலர் இறந்தொழிந்து மெலிந்த
நிலைகுறிக்க என்க. அதன்மேல் தலைவராகிய நாயனார் போர்
தொடங்குதலின் உயர்நடைபெற் றொழுகும் தரவு கொச்சகக்
கலிப்பாவாகிய வேறு யாப்பினாற் கூறும் யாப்பமைதியும்
நோக்குக. 21