631.
|
திண்படை
வயவர் பிணம்படு செங்கள் மதனிடை
முன்சிலர்
புண்படு வழிசொரி யுங்குடர் பொங்கிய கழுகு
பருந்தொடு
கொண்டெழு பொழுதினு முன்செயல் குன்றுத லிலர்
தலைநின்றனர்
விண்படர் கொடிவிடு பண்பயில் விஞ்சையர்
குமரரை
வென்றனர். 24 |
(இ-ள்.)
திண்படை...முன் சிலர் - வலிய படைவீரர்கள்
பட்ட பிணங்கள் வீழ்ந்த சிவந்த களத்தில் முன்னே சிலர்;
புண்படு......தலைநின்றனர் - படைகளால் ஊறுபட்ட புண்வாய்
வழியே சொரிந்த குடர்களை மிக்குக் கூடிய பருந்துகளோடு
கழுகுகள் பற்றி மேலெழுகின்ற காலத்திலும் சரியாது தமது
முன்னைச் செயலாகிய போரில் முயற்சி யுடையராகும் அவர்கள்;
விண்படர் ... வென்றனர் - விண்ணிற் செல்கின்ற - காற்றாடிப்
பட்டம் விடுகின்ற, இசை பயில்கின்ற வித்தியாதரர் சிறுவர்களை
வென்றனர்.
(வி-ரை.)
வயவர் - போர் மள்ளர். வெற்றிதரும் போர்த்
தொழில் செய்வாராதலின் வயவர் எனப்படுவர். வயம் -
வெற்றி.
பிணம்படு
செங்களம் - உடல்கள்
பிணங்களாக்கப்பட்டதனாலாகிய குருதி பரத்தலாற் சிவந்த
போர்க்களம்
முன்
- பிணமாய்ப் பட்டு வீழ்வதன் முன்னே, இங்குக்
குறித்த குடர்சரிந்து கழுகெடுத்த வீரரும் பின்னர்ச் சில நேரத்தில்
பிணமாய் வீழ உள்ளாராதலின் அவ்வாறு வீழுமுன் என்க.
புண்படுவழி......தலைநின்றனர்
- மாற்றாரது வாள்
முதலியவற்றால் உடலில் ஊறுபட்டுப் புண்ணாகியது. உள்ளிருந்து
அந்தப் புண்வாய் திறந்தவழி வெளியே குடர் சொரிந்தது. நீண்டு
கயிறு போலச் சொரிந்து வழிந்த அக்குடர்களைக் கழுகும்
பருந்தும் பற்றிக்கொண்டு மேல்பறந்தன. அதனால் இவர்களும்
நிலத்தினின்றும் தூக்கிச் செல்லப்பட்டு மேற்போந்தனர் என்றதுமாம்.
அப்போதும் சலியாது தாம் முன் செய்த அப்போர்த் தொழிலின்
முயற்சியிலே முனைத்தனர் என்பதாம். குடல் - 626ல்
உரைத்தவை பார்க்க, குடர் சொரிதலால் சிறிது போதிற்சாகும்படி
புண்பட்ட பின்னரும் உயிர்போகும்வரை முனைந்து நின்றனர் என
இவர் வீரத்தின் உறைப்புக் காட்டியபடி.
முன்
செயல் - தாம் செய்த வாட்போர் முதலியவாற்றால்
தன்னை எதிர்ந்தவனை அடர்க்கும் செயல். முன்
- கழுகு
குடர்கொண்டெழுமுன்.
குன்றுதல்
இலர் - குறையாதவர்களாகிய - சலியாது.
முற்றெச்சம் முன் செயல் குன்றுதலிலர் தலை நின்றனர் எனக் கூட்டி
முடிக்க.
தலைநின்றனர்
- ஒரு சொன்னீர்மைத்தாய் முயன்று
செய்தல் எனப் பொருள்படும். "தூபஞ், சாலவே நிறைந்து விம்ம
விடும்பணி தலைநின் றுள்ளார்" - (குங்குலியக்கலய நாயனார்
புராணம் - 6), "முன்னை நல்வினைத் தொழிற்றலை நின்றனர்" -
(வெள்ளானைச் சருக்கம் - 49) முதலியன காண்க. தலை -
ஏழாவதனுருபெனக் கொண்டு செயலிற் சலியாது நிலைத்து
நின்றனர் எனவும், தலையில் - சிறந்து நின்றனர்
எனவும்
உரைப்பாருமுண்டு. இவ்வாறன்றி நின்றனர் -
கீழ் வீழாது
நிற்றலைச் செய்தனர் என்றுரைப்பாருமுளர். பொங்கிய
-
வேகத்தாலும் கொழுமையாலும் மிக்க கூட்டமாய்வந்து
கூடிய என்றலுமாம். முன்னர், "வெருவர எருவை நெருங்கின" (626)
என்றது காண்க. பருந்து கழுகினத்திற் பெரிய
உருவுடையனவாய்
அச்சம் விளைக்குமாறு கொடுஞ்செயல் செய்யுமியல்புடையதோர்
சாதி. பருந்தொடு கழுகு குடர் கொண்டு எழுபொழுது
எனக்கூட்டுக. குடர் கொண்டெழுதல் - குடரினைப்பற்றி எழுதலும்
அதனாலே அத்தொடர்புப் பற்றிலே வீரனது உடலையும் மேலே
கொண்டு எழுதலும் உட்கொண்டது.
விஞ்சையர்
- வித்தியாதரர், தேவச்சாதியாருள்
ஒருவகையினர் வானிற் பறப்பர் - கானம்வல்லவர் - போர்
வன்மையுடையார் என்ப. விண்படர் - கொடிவிடு - பண்பயில்
என்பன மூன்றும் தனித்தனி விஞ்சையர் குமரர்க்கு அடை
மொழிகள். கொடிவிடு விஞ்சையர் குமரரை வென்றனர்
- காற்றாடிப்பட்டம் பறக்க விட்டு விளையாட்டயரும் வித்தியாதரச்
சிறுவரிலும் மிக்காராயினர். விஞ்சையர் குமரர் - மேலே
தூக்கிச்செல்லப்பட்ட வீரர்க்கும், பட்டம் - கழுகுபருந்துகட்கும்
பட்டம் விடும் கயிறு - ஒரு புறம் கழுகு பருந்துகளைப் பற்றியும்,
ஒருபுறம் வீரருடலைப்பற்றியுமுள்ள நீண்ட குடருக்கும் ஒப்புமையாக
உவமம் விரித்துக் கண்டுகொள்க. மெய்யும் தொழிலும்
பற்றிவந்ததோர் உவமம். கொடி - காற்றாடி, வென்றனர் -
குமரருக்குக் கொடிவிடுதல் வெறும் விளையாட்டேயாக, இங்கு
இவர்நிலை அமர் விளையாட்டின் மிக்க வீரங்குறித்தலால்
வென்றனர் என்றார்.
இவ்வாறன்றி
விண்படர் என்றதைக் கொடிக்கு அடையாக்கி
விண்ணிற் படரும் பட்டம்விடும் பண்புகொண்ட வித்தையுடைய
இளங்குமரரை வென்றனர் என்றுரைப்பாருமுண்டு. இப்பொருளில்
விஞ்சை - வித்தை. கொடிவிடுவதோர் தன்மை பெற்ற வித்தை
என்பர். இப்பொருட் பொருத்தமும் உவமானச்சிறப்பும்
ஆராயத்தக்கன.
போர் ஓய்ந்தபோது
நிணமுண்ணக்கூடிய பிராணிகளில்
முன்னர் 622ல் குறித்த காக்கைக் கூட்டத்தின் செயலை
மேற்பாட்டாலும், 626ல் கூறி கழுகுக் கூட்டங்களின் செயலை
இப்பாட்டாலும் கூறினார். முன்பாட்டுக்களில் வாள் - வேல் - வில்
- போர் விளைவுகளைப் பிரித்துத் தனித்தனி விரித்துப் போர்க்கள
நிகழ்ச்சி கூறிய ஆசிரியர், அவ்வீரர், போரில் எதிரெதிராவதன்றிப்
பிணமாந் தன்மை பெற்றுக் காக்கை கழுகுகட் கிரையாவதில்
யாவரும் ஒரு தன்மையராய் உள்ளராவதனாற் பிணம்படு நிகழ்ச்சி
கூறும் இவ்விரண்டு பாட்டுக்களினும் இருதிறத்து வீரருட்
பாகுபாடின்றிப் பொதுமையிற் கூறினார். 24
|