632.
இம்முனைய வெம்போரி லிருபடையின் வாள்வீரர்
வெம்முனையில் வீடியபின் வீடாது மிக்கொழிந்த
தம்முடைய பல்படைஞர் பின்னாகத் தாமுன்பு
தெம்முனையி லேனாதி நாதர் செயிர்த்தெழுந்தார். 25

     (இ-ள்.) வெளிப்படை இவ்வாறு மூண்டதாகிய கொடிய
போரிலே இருபக்கத்தும் வீரமிக்க படைஞர் கடும்போர் புரிந்து
பலர் இறந்த பின்னர், மடியாது எஞ்சிய தம்முடைய பல
படைஞர்களும் பின்னாகத் தாம் முன்பு போந்து, போர்
செய்வாராகி ஏனாதிநாதர் சினத்தோடு மேலெழுந்தனர்.

     (வி-ரை.) இம்முனைய வெம்போர் - இகரச்சுட்டு
இவ்வகையிலே - என முன்னர் விரித்துக் கூறியனவற்றையெல்லா
மடக்கிச் சுட்டிக்காட்டியபடி. முனையபோர் - முனைத்தலை
உடையதாகிய - பகையையுடைய - போர். வெம்போர் -
வெம்மை -
கடுமை.

     வாள்வீரர் - வாள் இங்கு ஆயுதப் பொதுமை குறித்தது.
வெம்முனையில்
- முனை - போர். போர் செய்தலால். விடுதல் -
இறத்தல். பின்னாகத் தாம் முன்பு - தலைவர்கள் பின்னின்று
ஏவுவதும் அதன்படி படைகள் முன்னின்று போர் புரிதலும் மரபு.
இது முதற்போரின் (போர்த்தொடக்கம்) இயல். போர் முற்றிய பின்
தமது படைகள் தளர்வடையுங்கால் தலைவர் முன்வந்து தாமே
நேராகப் போரில் முனைந்து படைஞரை ஊக்குதல் வழக்கு.
இம்முறையைக் கந்தபுராண முதலிய மாபுராண சரிதங்களிற் காண்க.
இங்குத் தமது படைஞர் பலர் மடிந்தும் எஞ்சியோர் போர்
மெலிந்தும் நின்ற நிலையில் முன்னணியில் நின்று பொருத
அவர்கள் பின்னாகுமாறு தாம் அவர்கட்கு முன்பு வந்து தாமே
போருக்கு எழுந்தார் என்பதாம். பின்னாக - பின்னே வர
என்பாருமுண்டு.

     தெம்முனையில் - தெவ் - பகை. தெவ்வர் - பகைவர்.
தெவ்முனை என்றது தெம் முனை என்றாயிற்று. முனை - போர்
மூளுதல். முன்பு - முன்னணியில்.

     செயிர்த்து - எழுந்தார் - செயிர்ப்பின்றிப் போர்
நிகழாதாகலின் செயிர்த்து என்றார். இது இங்குப் போரின்
பொருட்டு வந்ததே யன்றிக் குணவசத்தான் வந்ததன் றென்பார்
தெம்முனையிற்
செயிர்த்து என்றார். குணவசத்தான் வந்த
தொன்றாயின் அது இவரைத்தன்வயமாக்கி மன நிறையினை யழிவு
செய்திருக்கும். அவ்வாறு இவர் அதன் வயப்பட்டாரிலர் என்பது
பின்னர் இவர் மாற்றானெற்றியில் நீறு கண்டதுபோது தந்நிலையே
நின்று கொண்ட திருஉள்ளநிலையா லறியப்படும். 645 - 646
பாட்டுக்கள் பார்க்க. இச்சரித உட்கிடையும் காண்க.

     எழுந்தார் - மனக்கிளர்ச்சி குறித்தது. பாய்ந்தார்
என்றலுமாம். 25