633.
வெஞ்சினவாள் தீயுமிழ வீரக் கழல்கலிப்ப
நஞ்சணிகண் டர்க்கன்பர் தாமெதிர்ந்த ஞாட்பின்க
ணெஞ்சியெதிர் நின்ற விகன்முனையில் வேலுழவர்
தஞ்சிரமுந் தோளுரமுந் தாளுரமுந் தாந்துணித்தார். 26

     (இ-ள்.) வெளிப்படை மிக்க கோபமுடைய வாளினின்றும்
தீப்பறக்கவும், காலில் வீரக்கழல் சத்திக்கவும், விடமணிந்த
கண்டமுடையவராகிய சிவபெருமானுக் கன்பராகிய ஏனாதிநாதர்
தாம் மேலே கண்டவாறு போர்க்களத்தில் முன் வந்து செயிர்த்
தெழுந்தபோது முன்னர் வீடாது எஞ்சியவர்களாய் அவரை
எதிர்த்துப் போரில் நின்ற படைஞர்களது தலையும் தோள்
வலிமையும் தாள் வலிமையும் தாம் துணித்தனர்.

     (வி-ரை.) வெம் சின வாள் - இவரது செயிர்ப்பு இவர்
ஏந்திய வாளின் மேல் ஏற்றப்பட்டது. வாள் தீ உமிழ - வாளின்
முனையிலிருந்து ஒளியுண்டாக வாள் தீயுமிழ்தல் இவர் ஒருவரே
தீப்பறக்கக் குருதி பொங்கப் பெருஞ்சினத்தோடு வட்டணை திரிந்து
வீசியபடியினால் வாளின் ஒளிமிக்குக் காணப்பட்டது.
போர்க்களமெங்கும் எதிர்த்த பலவகைவீரரையும் விரைந்து செல்லும்
சாரிகையில் வாள்வீசித் துணித்தலால் காலின் கழல் சத்தித்தன
என்க. "ஆண்டகை வீரர் தாமே யனைவர்க்கு மனைவராகிக்,
காண்டகு விசையிற் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார்"
(425) என்ற கருத்தை இங்கு வைத்துக் காண்க. கைவாள் தீயை
வீசியது; கால் அதற்கிசைய விரைய வட்டணை சுற்றிற்று. ஆதலின்,
இவ்விரண்டுமே கூட்டிக் கூறினார்.

     எஞ்சி இகன்முனையில் எதிர்நின்ற என மாற்றுக. எஞ்சி
-மடியாமல் எஞ்சி. எதிர் நின்ற - போர்க்களத்தில் எதிர்த்து நின்ற.
ஞாட்பு
- போர்க்களம்.

     வேலுழவர் - வேல் கொண்டு தொழில் செய்வோர்,
வேலினைப் பகைப் புலத்தினிற் செலுத்திப் போர் விளைத்தலால்
உழவு என உருவகப்படுத்தினார்.

     தம்சிரமும் தோள்உரமும் தாள் உரமும் - மெய்களைப்
பலகையால் மறைத்துத் (623) தற்காப்புச் செய்து வீரர்
பொருவாராதலின் சாரிகை முறையிற் குறி பார்த்துச் சிலரைச்
சிரமும், (அது கிட்டாதபோது) சிலரைப் படைபிடித்த தோளும்,
அக்குறியும் கிட்டாதபோது சிலரை அவர்களது போர் முயற்சிக்குத்
துணையாகிய தாளும் துணித்துவீழ்த்தார். எவ்வாற்றானும்
மேலடர்ந்து பொராத நிலையினை விளைத்தனர் என்பது. தாம் -
தாமே, பிறருதவியின்றித் தாமொருவரே. உரம் - வலிமை. தோள்
உரமும் தாளும்
என்று பாடங் கொண்டு தோளும் மார்பும் காலும்
என்றுரைப்பாருமுண்டு. தாள் துணிப்பதுபற்றி 627ல் உரைத்தவையும்
காண்க. தோளும் தாளும் துணித்தார் என்னாது தோள் உரமும்
தாள் உரமும் என்றது தோள் துணிப்பதும் தாள் துணிப்பதும் அவர்
கருத்தன்று; அவர்களது போர் வலிமை தவிர்ப்பதே குறியீடாகக்
கொண்டு அதற்கு வேண்டிய அளவே துணித்தலைச் செய்தனர்
என்றாதாம். 26