634.
தலைப்பட்டா ரெல்லாருந் தனிவீரர் வாளிற்
கொலைப்பட்டார்; முட்டாதார் கொல்களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதி
லலைப்பட்ட வார்வமுதற் குற்றம்போ லாயினார். 27

     (இ-ள்.) வெளிப்படை. கூடி எதிர்ந்தவர்கள் எல்லாரும்,
ஒப்பற்ற வீரராகிய ஏனாதிநாதருடைய வாளினாற்
கொல்லப்பட்டொழிந்தனர். இது கண்டு, வந்தெதிர்க்காத படைஞர்
படுகளத்தை விட்டு, நிலைத்த மெய்யுணர்வின் முன் அலைந்து
ஒழிகின்ற ஆர்வ முதலிய குற்றங்கள் போல ஆயினார்கள்.

     (வி-ரை.) தலைப்படுதல் - கூடுதல் - ஒன்றுதல். இங்குப்
போரில் முனைந்து ஒருவரோ டொருவர் பொருந்தக் கிட்டுதல்
குறித்தது. "தன்னை மறந்தாடன் னாமங் கெட்டா டலைப்பட்டா
ணங்கை தலைவன் றாளே" (திருவாரூர்த் திருத் தாண்டகம்) என்றது
அப்பர் சுவாமிகள் திருவாக்கு. "தலைப்படுஞ் சார்வு நோக்கி"
(திருஞான புரா - 1244) என்றதும் காண்க. அதிற்றலைப்பட்டான் -
தலையிட்டான் - அதற்குத் தலைகொடுத்தான் என்ற உலக
வழக்குக்களும் காண்க. போராதலின், இங்கு உவமை முகத்தானன்றி
உண்மையானும் தலையையே பட முனைந்தார் என்ற சுவையும்
காண்க.

     வாளிற் கொலைப்பட்டார் - இல் - ஐந்தனுருபு ஆல்
எனக் கருவிப் பொருளில் மூன்றனுருபாக வந்த உருபு மயக்கம்.
வாளினாற் கொலையுண்டார். படு விகுதி செய்யப்பாட்டு
வினைப்பொருள் தந்தது.

     முட்டாதார் - மாற்றானது படைவீரர்களுள், அவ்வாறு எதிர்
வந்து போரில் முனையாதவர்கள்.

     கொல்களம் - போர்க்களம். ஓர் இடத்திற்குப் பெயர்
அவ்வப்போது அங்கு நிகழும் நிகழ்ச்சியாற் கூடுவதியல்பு. இங்கு
இந்த இடம், முதலில் இந்தவெளி (620) என்றது, போர் குறித்து
இருபடையும் சேர்ந்தபோது "செருக்களம்"(621) ஆயிற்று. அதன்பின்
போர் மூண்டு நிகழும்போது போர்செய்களம் (625) என்றாயிற்று.
பின் படைஞரது போர் ஓய்ந்தபின் மேலும் போர் நிகழ நிற்றலின்
பறந்தலை (626) எனப்பட்டது. இங்குத் தனிவீரர் வாளிமுன்
எதிர்ந்தார் தம் படைஒன்றும் பயன்படாது கொல்லப்பட்டாராதலின்
கொல்களம்
எனப்பட்டது காண்க. பின்னர் இவ்வகையிலும்
நிகழ்ச்சி உளதாகாமையின் வேறிடம் (638) அக்களம் (639), (640),
இடம்
(642) எனப்படுவதும் காண்க.

     கொல்களத்தை விட்டு...குற்றம்போல் ஆயினார் -
கொல்களத்தில் அவர்கள் கொல்லப்ப டவுமில்லை.
காணப்படவுமில்லை. ஆதலின் அவர்தாம் யாதாயினர் எனின்
மெய்யுணர்வு வெளிப்பட அதன்முன் ஆர்வம் முதலிய குற்றங்கள்
யாதாகுமோ அது போல் ஆயினர் என்க. செயலற்றுப் போய் அங்கு
எதிர் நிற்கலாற்றாது மறைந்து போயினர் என்பது. ஒளிந்து
மறைந்தனர் என்னாது "குற்றம்போல் ஆயினார்" என்றிவ்வாறு
கூறியது அவர்கள் யாதாயினர்
என்றே தெரியா வகை மறைந்தனர்
என வீரச்சுவை நீங்க நகைச் சுவைபடக் கூறியவாறு. இறந்தவரினும்
ஓடினார் கொடியரென்பார் குற்றம்போல் என்றார் என
வுரைப்பாருமுண்டு.

     நிலைப்பட்ட மெய்யுணர்வு - மெய்யுணர்வு - உண்மைப்
பொருள் உணரும் உணர்வு. ஞானமென்ப. வீட்டிற்கு நிமித்தமாகிய
செம்பொருளைக் காண்பதுவே மெய்யுணர்வாம். அஃதாவது
அருட்கண்ணாகிய
சிவஞானத்தால் விளங்கிச் சிவம் - உயிர் -
பாசம் என்ற பொருளைக் காணும் மெய்யுணர்வாம். அவ்வகை
உணர்வின் முன்னர் ஆர்வம் முதலிய குற்றங்கள் முனைந்து
நிற்கலாற்றாது காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத்துய் போலவும்,
ஒளியின்முன் இருள் போலவும் ஒழிந்துபோம், இவைகளைச்
"சார்புணர்ந்து சார்புகெட", "மூன்றன் நாமம்கெட" என்ற திருக்குறட்
பாக்களின் கீழ்க் கண்டு கொள்க. மெய்யுணர்வின் இயல்பும்,
ஆர்வம் முதற்குற்றங்களி னியல்பும், மெய்யுணர்வின் முன் குற்றம்
நில்லாத இல்பும் ஞான சாத்திரங்களுட் காண்க. நிலைப்பட்ட -
"கல் லெறியப் பாசி கலைந்து நன்னீர் காணுதல்போல"
அப்போதைக்குக் காணப்பட்டு மறையும் உணர்வாயின், அது
பின்னர் அப்பாகத்தால் மறைக்கப்படுமாதலின், அவ்வாறல்லாது
குற்றங்கள் அறவே ஒழியுமாறு நிலை நின்ற மெய்யுணர் வென்பாார்
நிலைப்பட்ட என்று சிறப்பித்தார். "இடையறாத ஞான
யோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத் தீ முன்னர்
பஞ்சுத்துய் போலுமாதலின்" என்றார் பரிமேலழகர். நிலைப்பட்ட
மெய்யுணர்வாவது
திருவடி மறவாதிருத்தல். "மறக்குமா றிலாத
வென்னை" (பண் - நட்ட ராகம் - திருவிராகம் - திருத்துருத்தி - 5)
என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும், "பண்டு திருவடி
மறவாப் பான்மையோர்" (திருஞான - புரா - 55) என்ற புராணமும்
முதலிய திருவாக்குக்களிற் குறித்த நிலை இது.

     ஆர்வம் முதல் குற்றம் - இவை காமம் - வெகுளி -
மயக்கம் என்ற மூன்றென்பர். "காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமல் கெடக்கெடு நோய்" என்ற குறளின் கீழ் "அநாதியாய
அவிச்சையும், அது பற்றி யானென மதிக்கும் அகங்காரமும்; அது
பற்றி எனக்கிது வேண்டுமென்னு மவாவும், அதுபற்றி அப்பொருட்கட்
செல்லுமாசையும், அது பற்றி அதன் மறுதலைக்கட் செல்லுங்
கோபமும் என வடநூலார் குற்றமைந்தென்பர். இவர் அவற்றுள்
அகங்காரம் அவிச்சையின் கண்ணும், அவாவுதல் ஆசைக்கண்ணும்
அடங்குதலால் மூன்றென்றார்" என்பன முதலாக உரைத்தவை
காண்க. இவற்றைக் காமம், குரோதம், லோபம, மோகம், மதம்
மாச்சரியம் என ஆறாகவும் வகுப்பர். "கலையமைத்த காமச்செற்றக்
குரோதலோப மதவருடை, உலையமைத்திங் கொன்றமாட்டே
னோணகாந்தன் றளியுளீரே" (8) என்ற ஆளுடைய நம்பிகள்
தேவாரமும் பிறவும் காண்க. இவையெல்லா மடங்க "ஆர்வமுதற்
குற்ற" மென்றார். இவை மூலமலத்தின் காரியம். நெல்லிற்குமிதவிடும்
நீள்செம்பினிற் களிம்பும்போல.

     அலைப்பட்ட - இக்குற்றம் உயிரைப்பற்றி நின்ற முன்னை
நிலையினின்றும் மெய்யுணர்வு இவற்றை அலைக்க, அதிலேபட்டுப்
பெயர்ந்த என்க. மெய்யுணர் வொன்றே நிலைப்படுவதென்றும்,
ஏனைய குற்றங்கள் ஒரு காலத்து அலைப்பட்டொழிவன என்றும்
குறித்ததும் காண்க.

     இங்கு உவமான உவமேயங்களில் நிலைப்பட்ட
மெய்யுணர்வுடையார் ஏனாதி நாதரும், ஆர்வமுதற் குற்றமுடையார்
அதிசூரனும் அவன் படை வீரருமாயின பொருத்தமும் அழகும்
கண்டு களிக்க.

     கொல்களத்தினும் நிலைப்பட்ட மெய்யுணர்வு மயமாக
விளங்கினார் நாயனார் என்பது, பின்னர்த் திருநீற்றின் பொலிவினை
மாற்றானெற்றியிற் கண்டபோதே அவனது கொள்கைக்கு
குறிவழிநின்ற நேர்மையாலும், அதன்மேலும் நிராயுதரைக்
கொன்றானெனும் தீமை அவனுக்கு எய்தாமைப் பொருட்டே
மலைவார்போற் காட்டி அவன் கருத்து முற்றுமளவும் வாளா
படைதாங்கி நின்ற நேர்மையாலும் துணியப்படும்.

    இவையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும்; உண்மையுணர்ந்த
ஞான தேசிகர்பாலறியத்தக்கன.

     வெம்போரில் தமது உயிர் கொடுத்தும் மெய்யுணர்வின்கண்
நின்ற நாயனார் திறத்தின் முன் மாற்றார் படை ஒழிந்த திறத்திற்கு
உரியவாறு கொலைக்களத்திலும் நிலைப்பட்ட மெய்யுணர்வும்
அலைப்பட்ட குற்றமும் உவமித்த ஆசிரியரது நிலைப்பட்ட
மெய்யுணர்வு கண்டு வியக்கற்பாலதாம். இங்குப் போரிற் படை
மக்கள் சிகரமுந் தோளும் தாளும் துணிக்கப்பட்டுக் கிடக்கும்
கொல்களத்தினிடையிற் பிறழாது மெய்யுணர்வின் நின்றதுபோலவே
திண்ணனார் வேட்டையில் மாக்கள் படும் கொல்களத் தினிடையும்,

"பலதுறைகளின் வெருவரலொடு பயில்வளையற நுழைமா
 வுலமொடுபடர் வனதகையுற வுறுசினமொடு கவர்நாய்
 நிலவியவிரு வினைவலையிடை நிலைசுழல்பவர் நெறிசேர்
 புலனுறுமன னிடைதடைசெய்த பொறிகளினள
வுளவே" (734)

என்று மெய்யுணர்விற் பிறழா நேர்மையின் உவமித்ததும்,
இவ்வாறுள்ளன பிறவுங் கண்டுய்வோமாக. 27