639.
இவ்வாறு கேட்டலுமே யேனாதி நாதனா
"ரவ்வாறு செய்த லழகி" தெனவமைந்து,
"கைவர ளமர்விளைக்கத் தான்கருது மக்களத்தில்
வெவ்வா ளுரவோன் வருக"வென மேற்கொள்வார்,
32

     639. (இ-ள்.) வெளிப்படை. இதனைக்கோட்டலும்
ஏனாதிநாதனார், "அவ்வாறு செய்தல் அழகிது" என்று
ஏற்றுக்கொண்டு, "கையில் வாளேந்திப் போர்செய்ய அவன்
எண்ணிய அந்தக் களத்திற் கொடிய வாளேந்திய வலிமையுடைய
அவன் வரக்கடவன்" என்று சொல்லி, அச்செயலை
மேற்கொண்டவராய், 32

     639. (வி-ரை.) இவ்வாறு - இந்தவகைக் குறிப்புக்கள் பெற
அவன் சொல்லியனுப்பிய வரலாற்றை, இரண்டாம் வேற்றுமைத்
தொகை.

     அவ்வாறு செய்தல் அழகிது - இது நாயனாரது மன
நிகழ்ச்சி. நாட்டாரைக் கொல்லாது இருவேமும் வேறுபொருதல்
சிறந்தது. அழைத்து - ஒப்பி. நீதிக்குப் பொருந்துவதாகக்
காண்டலின் அது நியாயம் என்று ஏற்றுக்கொண்டு. அழகிது என்பது
அமைதற்குக் காரணம்.

     கைவாள் அமர் - கையில் வாளேந்திச்செய்யும் வாட்போர்.
கை - வாளுக்கு அடைமொழி மாத்திரையாய் நின்றது. தம் கையே
துணையாகப் பிறிதொரு வரையும் துணைக் கூட்டாது என்று
குறிப்புமாம்.

     தான் கருதும் - அவ்வதிசூரன் குறித்துச்சொன்ன.

     அக்களம் - முன்னைப்போர் நிகழ்ந்த, யாவரும் காணத்தக்க
பொதுப்போர்க் களமல்லாத வேறிடம் என மேற் பாட்டிற்
அந்தக்களம். அகரச் சுட்டு முன் குறித்த அந்த என்றதாம். "முன்
சொல்லி வரக்குறித்த அக்களத்தே" என வரும் பாட்டிலும்
இதனையே சுட்டியது காண்க. வேறொருவரும் அறியாத
தனிப்போராதலின் குறித்த இடம் சேர்தல் அவசியமாயிற்று. நாயனார்
அக்கருத்தினை அழகிது என்றமைந்தாராதலின்
அக்குறிப்பினையேகொண்டு அக்களத்திற்கு முன் சென்றனர் என்பது
இருமுறையும் இடத்தையே முதன்மையாய்ச் சுட்டிக் கூறினார்.
இப்பாட்டில் அவனுக்கு இடம்பற்றிய இசைவை அறிவித்து, வரும்
பாட்டில் அவ்வாறே இவர் சென்றதனைக் கூறுவதனாற் கூறியது
கூறலாகாமையறிக.

     வெவ்வாள் உரவோன் வருக - கொடிய வாளினை யேந்தித்
தன்னை வலியோனாக எண்ணிக்கொண்டவன் வரக்கடவன் என்று
சொல்லி. மேற்கொள்வார் - போரேற்றவராகி.

     கேட்டலும் - ஏனாதிநாதனார் - அமைந்து - களத்தே -
உரவோன் வருக என மேற்கொள்வார் - போந்து - களத்தே -
வரவு பார்த்துத் தனிநின்றார் - என இவ்விரண்டு பாட்டுக்களையும்
தொடர்ந்து முடித்துக் கொள்க. 32