640.
சுற்றத்தார் யாரு மறியா வகைசுடர்வாள்
பொற்பலகை யுந்தாமே கொண்டு புறம்போந்து
மற்றவன்முன் சொல்லி வரக்குறித்த வக்களத்தே
பற்றலனை முன்வரவு பார்த்துத் தனிநின்றார்.     33

     640. (இ-ள்.) வெளிப்படை. தமது சுற்றத்தார் முதலிய
எவரும் இதனை அறியாதபடி தாமொருவரே, ஒளியுடைய
வாளினையும் அழகிய பூணிட்ட பலகையையும் ஏந்தி வெளிவந்து
மற்றவன் முன் சொல்லிவிட்டு வருமாறு குறித்த அந்தக் களத்திலே
பற்றலனாகிய அவனுக்கு முன்னமே சென்று அவன் வரவினை
எதிர்பார்த்துத் தனி நின்றார். 33
   

     640. (வி-ரை.) சுற்றத்தார் யாரும் - சுற்றத்தார் எவரேனும்
பிறர் யாரேனும். முன்னர் இவர் புறப்படுதல் கேட்டுத் தாமாகவே
ஓடி வந்து காளையருஞ் சுற்றத்தாரும் சேர்ந்தார் (619) ஆதலின்
அவ்வாறு அவர்கள் காணாவகையாலும், கேள்வியும் படாவகையாலும்
என்க. காண்பது - கேட்பது - என இரண்டு குறிக்க அறியா வகை
என்றார்.

     சுடர்வாள் பொற் பலகையும் - வாளும் பலகையும் என
உம்மை வாளுக்கும் கூட்டுக. பொற்பலகை - பொற்பூண் முதலியன
இட்டுத் தமது படையாகக் கொண்ட பலகை. பொன் பூண் முதலியன
இட்டுத் தத்தம் தொழிற் கருவிகளை அழகுபடுத்திக் கொள்ளுதல்
தொழிற்றுறை வழக்கு. பொன் - அழகு என்றலுமாம்.

     கூர்வாள் ஒளியுடைய வாள். முன்னான் (638) தனது ஒளி
காணச் சுற்றி வரும் வட்டணையில் மாற்றானைப் புறகிடச்
செய்தற்குத் துணையாக யிருந்தது வாளின் சுடர். ஆதலின்
அதனையே இங்குச் சுட்டினார். அந்தச் சுடர் வாள்
கையிலிருப்பவும் சரிதநிகழ்ச்சி முன்னைநாளிற் போலன்றி வேறு
வகையாயின தென்றற்குத் தோற்றுவாய் செய்தபடி.

     தாமே கொண்டு - இவற்றையும் பிறர்கொணர்ந்தால் அவர்
அறிவாராதலின் எவரும் அறியா வகை தாமே எடுத்துத் தாங்கினார்
என்ற உறுதிபெறத் தாம் என்றொழியாது தாமே என்று ஏகாரமுந்
தந்தோதினார். இவ்வாறு கூறியது தாம் அழகிதென அமைந்து
ஒப்புக் கொண்ட அதனை அவ்வாறே நிறைவேற்றுதலில் நாயனார்
கையாண்ட மனமார்ந்த உண்மைத் திறத்தின் ஏற்றமும், தான்
சொல்லிய அதனுள் மறைந்து நின்ற மாற்றானது வஞ்சனையின்
ஈனமிகுதியும் காட்டுதற் பொருட்டாம்.

     தாமே புறம் போந்து என்றும் கூட்டுக.

     மற்றவன்- தாம் கொண்டவாறு உண்மைத் திறத்தினில்லாத
வஞ்சமுடையவன். முன் சொல்லிக் குறித்த- வேறு கருத்தினை
எண்ணிக் குறித்துச் சொல்லிய என்க. இவர் சென்றதும் அவன்
குறித்ததும் அக்களமேயாயினும் இவர் குறித்துச் சென்ற காரணம்
வேறு; அவன் குறித்துச் சொன்ன காரணம் வேறு என்பது.

     பற்றலன் - பகைவன். இனி அவன் பற்றுதலின்றி
வஞ்சனையாற் றிருநீறு பூண்பான் என்பது குறிப்பு. முன் - அவன்
அக்களம் சேரு முன்பு.

     தனி நின்றார் - தனி - அவன் சொல்லியதில் தாம்
அமைந்த உண்மை நிலையை முற்றக் காப்பவராய்த் தாமே தனித்து.
தனி
- ஒப்பற்ற நிலையிலே என்றலுமாம்.

     நின்றார் - நிற்பாராயினார். 33