642.
வெண்ணீறு நெற்றி விரவப் புறம்பூசி
யுண்ணெஞ்சில் வஞ்சக் கறுப்பு முடன்கொண்டு
வண்ணச் சுடர்வாள் மணிப்பலகை கைக்கொண்டு
புண்ணியப்போர் வீரர்க்குச் சொன்ன
                        விடம்புகுந்தான்.
35

     642. (இ-ள்.) வெளிப்படை. திருவெண்ணீற்றினை நெற்றி
முழுதும் பொருந்தும்படி புறத்திற் பூசி, நெஞ்சினுள்ளே
வஞ்சனையாகிய கறுப்பினையும் உடனே கொண்டு அழகிய
சுடருடைய வாளினையும் மணிகளிழைத்த பலகையினையும் கைகளிற்
கொண்டு, புண்ணியப்போர் வீரராகிய ஏனாதிநாதருக்குத் தான்
சொல்லிவிட்ட அந்த இடத்திற் புகுந்தான். 35

     642. (வி-ரை.) வெண்ணீறு - நாயனார் நோக்குங்கருத்துப்
பற்றி மேற்பாட்டிற் றிருநீறு - என்றார். "பாவமறுப்பதுநீறு"
என்பதுமறை. ஆயின் இங்கு அது இவனுக்குத் திருநீறு பூசிய
பயன்றந்து பாவமறுக்காமல் அதற்குமாறாகப் பாதகப்பயனே தந்து,
வெண்ணீறாகும் அளவில் மட்டும் நீன்ற தென்பார் திருநீறு
என்னாது வெண்ணீறு என்றார். "புண்ணியர் பூசும் வெண்ணீறு"
என்றபடிக்கன்றி இவனைப் பாதகன் (647) என்று முடித்ததும்
காண்க. இங்கு இவன்பால் திருநீற்றின் நிறமாத்திரம் வெண்மையாய்
நின்ற தென்பார் பின்னர், கறுப்புமுடன் கொணடென்று உடன்
சேர்த்துக் கூறியதும் காண்க.

     நெற்றிவிரவப் புறம்பூசி - தாங்கிய நெற்றியினார் என
மேற்பாட்டிற் கூறிய பொருள் இங்கு நினைவு கூர்க. "பூசு நீறுபோ
லுள்ளும் புனிதர்கள்" என்று திருக்கூட்டச்சிறப்பிற்
கூறியபடிக்கில்லாமல், நீறு புறத்தேயும், அதற்குமாறாகக் கறுப்பு
உள்ளத்தேயும் இருந்தது என்று குறிக்கப் புறம் பூசி என்றும், கறுப்பு
முடன் கொண்டு
என்றும் கூறினார்.

     இது அவனது நான்காவது வஞ்சனை.

     நெஞ்சினுள் என மாற்றுக. கறுப்பாகிய வஞ்சம், கோபம்
முதலிய தீக்குணங்கள் தாமதகுணத்தின்பாற்பட்டவை. தாமதத்தின்
நிறம் கறுப்பு என்ப. நெற்றி விரவ நீறுபூசுதல் நல்லசெயலாக
விதிக்கப்பட்டது. அதனைக் குற்ற மென்று கூறலாகாது; குற்றம்
வேறாக அவன் உள்ளத்தில் நின்ற தென்று எச்சரிப்பார் நெஞ்சில்
கறுப்பு முடன் கொண்
டென்று உடன் கூறினார். திருநீற்றுப்
பொலிவுடன் இது சேர்த்தெண்ணத் தகாதென்பார் இழிவு சிறப்பும்மை
தந்து கறுப்பும் என வோதினார்.

     வண்ணச்சுடர்வாள் - மணிப்பலகை - மேலே, நாயனார்
ஏந்தியவற்றைச் சுடர்வாள் - பொற்பலகை (640) என்ற ஆசிரியர்,
இங்கு மாற்றலனாகிய பாதகனால் ஏந்தப்பட்டுப் பாதகத்துக்குத்
துணையாய் நின்ற இப்படைகளை இவ்வாறு அடைமொழிகள் தந்து
சிறப்பித்த தென்னை? எனின், பகைவன் ஏந்தியவை என்று காணாது
"அண்டர்பிரான் சீரடியா ராயினார்" (645) ஒருவர் ஏந்திய
படைகளாக நாயனார் இவற்றை நற்பாவனையிற் காண்டலாலும்,
இவை அவர்தந் திருமேனியுந் தீண்டும் பேறு பெறுதலாலும்,
"பற்றலர்தங் கைவாளாற் பாச மறுத்தருளி" (648) என்றபடி இவை
இறைவனது திருவருட் சொரூபமாகிப் பாசமறுக்கும்
கருவிகளாயினமையாலும் இவ்வாறு சிறபித்தார் என்க. அன்றியும்
அவனது தீச்செயலுக்குக் காரணமாய் நின்றது அவனது
வஞ்சகக்கறுப்பேயன்றி வாளும் பலகையுமன்று என்பதும் குறிப்பு.

     புண்ணியப் போர்வீரர் - அதிசூரன் போல வஞ்சனை
நெறியாகிய மறநெறியாற் போர் புரியாது அறநெறியாற் போர்
புரிபவர் என்பார் இவ்வாறு கூறினார். புண்ணியம் என்னும்
அடைமொழி பாவப்போரை நீக்குதலின் பிறிதினியைபு நீக்கிய
விசேடணம்.

     சொன்ன இடம் - முன்னர் வேறிடம் (638), அக்களம்
(639 - 640) என்றபடி பிறர்கண்ணுக்குப் புலப்படாது வஞ்சிக்க
ஏற்றதாய் அவன்தானே குறித்த இடம் அவன்தன் வஞ்சகத்தை
முற்றுவித்தற்கு இந்த மறைவிடத்தை ஒருபெருஞ் சாதனமாகக்
கொண்டான் என்பது.

     புகுந்தான் - அவர் தனிநின்றாராக (640) இவன்
எண்ணியபடி வலிந்து புகுந்து மூண்டு மறம்பூண்டான் என்க.

     வண்ணக் கதிர்வாள் - என்பதும் பாடம். 35