643.
வென்றி மடங்கல் விடக்குவர முன்பார்த்து
நின்றாற்போ னின்ற நிலைகண்டு தன்னெற்றி
சென்று கிடைப்பளவுந் திண்பலகை யான்மறைத்து
முன்றனிவீ ரர்க்கெதிரே மூண்டான்
                        மறம்பூண்டான்.
36

     (இ-ள்.) வெளிப்படை. வெற்றியுடைய சிங்கம் தன்
இரைக்குரிய பிராணி வருதலை எதிர்பார்த்து நின்றாற்போல நின்ற
நிலையினைக் கண்டு, அவர்பாற்சென்று நெருங்க அணுகுமளவும்
தனது நெற்றியை வலிய பலகையால் மறைத்துக் கொண்டே, முன்பு
சென்று ஒப்பற்ற வீரராகிய அவர்க்கெதிராக மறம் பூண்டானாகிய
அவன் போரில் தோன்றினான்.

     (வி-ரை.) வென்றி மடங்கல் - மிருகங்கட்கு அரசாகி,
எதிர்த்து எதுவரினும் வெற்றியே பெரும் சிங்கம். எஞ்ஞான்றும்
அரியேறு போல வெற்றியே பெற்ற நாயனாரது நிலை குறித்தது.
முன்னர் வெம்புலியேறு (635) என்றனர். இங்கு வென்றி மடங்கல்
என்றது இவ்விடமே புலியேற்றினும் மிக்க உயர்வாகிய இவரது
பேருயர்ச்சி வெளிப்படும் இடம் இதுவென்பதும், எவ்விடத்திலும்
இழிதகைமையிற் சொல்லாத மடங்கல் போல இங்கும் நாயனார்
பெறுவது வெற்றியே என்பதும் குறிப்பு.

     விடக்கு - உணவாகிய மாமிசம். அதனையுடைய பிராணிக்கு
வந்தது. ஆகுபெயர். "விடக்கொருவர் நன்றென விடக்கொருவர்
தீதென" (பண் - இந்தனம் - திருவிராகம் - திருப்புறம்பயம் - 10)
என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும், "வேற்று விகார
விடக்குடம்பி னுட்கிடப்ப" என்ற திருவாசகமும் காண்க. தன்னையும்
ஒரு வீரனென்று எண்ணிக்கொண்டு போருக்கென வந்த அதிசூரனை
வெறும் மாமிசபிண்டத்துக்கு ஒப்பாக்கிக் கூறினார். 617-ல்
உரைத்தவை காண்க. மடங்கலின் முன்வரும் ஒரு விடக்கினுக்கு
ஒரு பாய்ச்சலில் ஓரரையிற் பற்றுண்டு கொல்லப்படுதலன்றி மற்று
எதிர்ச்செயல் வேறில்லையாதல்போல் அவனுக்கும் வேறு
செயலில்லை என்பதை அவர் நின்றநிலையினாற் குறித்தார்.

     நிலை கண்டு - தன்னால் வேறொன்றுமியலாமை கண்டு
அதனால் வஞ்சனை முற்றும் வகை குறித்து.

     கிடைத்தல் - கிட்டுதல் - நெருங்குதல். "கிடைத்தனர்" (572).

     பலகையான் தன் நெற்றி மறைத்து எனக் கூட்டுக.
மறைத்து
- கரவாடும் வன்னெஞ்சனாதலின் தன்னை மறைத்தான்
என்பதும் குறிப்பு. "நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்"
"நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர்" என்றவை காண்க.

     மறம் பூண்டான் மூண்டான் என மாற்றுக. மறம் -
அறத்திற் றிறம்புதலாகிய மறமாம். இங்கு வஞ்சித்து வெல்லுதல்
குறித்தது. பூண்டானாகிய அவன். வினையாலணையும் பெயர்.
மூண்டான் - போர் செய்வான்போல் தோன்றினான். "மூளாத்தீப்
போல்" என்ற நம்பிகள் தேவாரங் காண்க.

     பலகையால் மறைத்தல் போரில் வீரர் செய்யும் தற்காப்புச்
செயல். இதனையே தன் வஞ்சச் செயலை மறைக்குமாறு அவன்
மேற்கொண்டது ஐந்தாவது வஞ்சனைச் செய்கை என்க.
அதனாலும் மறம் பூண்டான் என வற்புறுத்தியவாறு.

     நின்றார் நிலை - என்பதும் பாடம். 36