1264.
வந்து மிகைசெய் தாதைதாண் மழுவாற் றுணித்த
                               மறைச்சிறுவர்
அந்த வுடம்பு தன்னுடனே யரனார் மகனா ராயினார்;
இந்த நிலைமை யறிந்தாரார்? ஈறி லாதார் தமக்கன்பு
தந்த வடியார் செய்தனவே தவமா மன்றோ
                              சாற்றுங்கால்? 59

     (இ-ள்.) வெளிப்படை. வந்து தகாதகாரியம் செய்ததந்தையுடைய கால்களை மழுவினால் வெட்டி வீழ்த்தியமறைச்சிறுவர் அந்த
உடம்புடனே சிவபெருமானாரது திருமகனாராக ஆயினார். யாவரே
இந்த நிலைமையினை அறிந்தவர்கள்? சொல்லப்புகுவோமாகில்
எஞ்ஞான்றும் ஈறில்லாதவராகிய சிவபெருமானுக்கு அன்பு தந்த
அடியார்கள் செய்தவை எவையோ அவையே தவமாகுமன்றோ?

     (வி-ரை.) வந்து - "மைந்தனார் தாம் போயினபின் மறைந்து
சென்று" (1249) எனவும், குராமரத்தின் மேலிருந்து கோபத்துடன்
வந்து, எனவும் உரைக்க. வந்து - வந்தும் - நல்ல குலத்தில், நல்ல
கோத்திரத்தில், நல்ல மரபில் வந்தும் என்று, உயர்வு சிறப்பும்மை
தொக்கதாகக் கொண்டு உரைப்பினும் பொருந்தும்.

     மிகை- செய்யத்தகாத செயல். வரம்புகடந்த செய்கை.

     அந்த உடம்பு - அந்த - இப்பூவுலகில் ஒரு பெயரும்
உருவும் தாங்கி எச்சதத்தனுக்கு மகனாராகப் பிறந்து வளர்ந்து
இதுகாறும் செயல்செய்த அந்த என முனனறிசுட்டு. உடம்பு-
"அங்கண் மாயை யாக்கை" (1260) என்றபடி மாயா உடம்பு.

     அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனா ராயினார்
என்றது மாயை உடம்பு அதன் தன்மை திரிந்து சிவமயமாய்ப்
பொங்கிஎழுந்து திருவருளின் மூழ்கிச் சிவவொளியில்
தோன்றியதாதலின் அவ்வுடம்புடனே சிவனார் மகனாராவதற்கு
ஏதுவாயிற்று. "ஊனுயிர் வேறுசெய்தான்", "யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான்", "மானவ யாக்கையொடு" என்பன
இத்தன்மையை விளக்குவனவாம்.

     அறிந்தார்ஆர்? வினா ஒருவரும் அறியும் வவியிலர் என்பது
குறித்தது. எவரும் பசுஞான பாசஞானங்களால் அறிய வலியிலர்.

     அன்புதந்த - தம்மையும் தம்முடையவாகக் கொண்ட
உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றையும் இறைவருக்குத்
தந்த; அவருக்கு உடைமையாக ஒப்புக்கொடுத்த.

     அடியார் - அடிமை செய்வோர். தம்மையே தந்து
விட்டமையால் அடிமைகளாய்த் தம்வசமின்றித் அவர் வசமேயாயினர்
என்று குறிக்க இங்கு அடியார் என்ற சொல்லாற் கூறினார்.

     செய்தனவே தவமாம் அன்றோ? ஏகாரம், தவமென்று
உலகில் விதிக்கப்படாதனவும் விதிக்கு மாறாயினவும் என்பதனைக்
குறிப்பாலுணர்த்தி நின்றது. "செய்தனவே தவமாக்கும் அத்தன்"என்ற
திருவாசகச் சொல்லும் பொருளும் ஆகிய ஆட்சி போற்றப்பட்டது
காண்க. (திருத்தோணோக்கம் - 6.)

     சாற்றுங்கால் தவமா மன்றோ? என்க. சொல்லப்புகின்
அடியார் செய்தனவே தவம்; தவம் என்பது வேறில்லை; தவமென்று
நூல்களால் விதிக்கப்படாதனவும் அடிமைத்திற முனைப்பில்உறைத்து
நின்று அடியார் செய்தனராகில் அவையே தவமாம்என்பது. "ஆருலகி
லிதனுண்மை யறிந்துரைக்க விசைந்தெழுவார்" (1205)என்று தொடங்கிக்
காட்டிய கருத்தையே இங்கு அனுபவத்தின் முடித்துக் காட்டிய
திறமும் பண்பும் காண்க.

     இவ்வுண்மையை "அரனடிக் கன்பர் செய்யும் பாவமு மறமதாகும்,
பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும், வரமுடைத் தக்கன்
செய்த மா வேள்வி தீமையாகி, நரரினிற் பாலன் செய்தபாதக நன்மை
யாய்த்தே" (2 -29) என்றும், "அவனிவனாய்நின்றமுறை யேக னாகி
யரன்பணியி னின்றிடவு மசலுங்குற்றஞ்......பரிவாற் பாதகத்தைச்
செய்திடினும் பணியாக்கி விடுமே" (10 - 1) என்று வரும் சிவஞான
சித்தியார்திருவாக்குக்கள் விளக்குவனவாம். 59

     குறிப்பு :- பாராயணஞ் செய்வோர் 1217 - 1221 - 1234 -
1243 - 1250 பாட்டுக்களில் நிறுத்தி வாசிக்கலாம்.