650.
|
மேவலர்
புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக்கா ளத்திக் கண்ணப்பர் திருநா டென்ப
நாவலர் புகழ்ந்து போற்று நல்வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை சூழ்ந்தபொத் தப்பி நாடு. 1
|
650. (இ-ள்.)
வெளிப்படை. அடையலாரது முப்புரங்களை
அழித்த விடையவராகிய வேதவாய்மைக்காவலரது
திருக்காளத்தியிலே பேறடைந்த கண்ணப்பநாயனாரது திருநாடாவது,
புலவர்கள் புகழ்ந்து பாராட்டும் நல்ல வளங்கள் பெருகி
நிலைத்ததும் பூக்கள்மலர்ந்த வாவிகளும் சோலைகளும்
சூழ்ந்ததுமாகிய பொத்தப்பி நாடாகும் என்று சொல்வார் பெரியோர்.
650. (வி-ரை.)
மேவலர் - அடையலர்; பகைவர். புரங்கள்
- முப்புரம். செற்ற - நகைத்து அழித்த. செற்ற என்றதனால்
வேண்டுதல் வேண்டாமையிலாத இறைவனுக்குச் செற்றம் முதலிய
குற்றம் ஏற்றியதாகாது எனக் குறிக்க விடையவர் -
என்றார். விடை
- தருமதேவதையாகிய இடபம். புரங்களை இறைவன் எரித்தது
மறத்தினைப் போக்கி உயிர்களுக்குத் துன்பந்துடைத்துப்
போகமளித்தற்கேயாம். தருமம் யுகந்தோறுங் குறைந்துவந்து
இறுதியில் அழியாது இறைவனிடம் ஒடுங்கி நிற்குமென்பர். இனி,
"தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த வந்நாளில்
இடபமதாய்த்தாங்கினான் றிருமால்காண் சாழலோ" (திருவாசகம்)
என்றபடி முப்புரமெரித்த ஞான்று விடையாய் நின்ற திருமாலின்மீது
எழுந்தருளியவர் என இரண்டையும் உடன் குறிப்பார் செற்ற
விடையவர் என்றார் என்பதுமாம். முப்புரமெரித்தல் என்பது
மும்மலகாரியங்களை அழித்தலாகிய இறைவனது செயலைக்
குறிப்பதாகக் கூறுவர் திருமூல நாயனார்.
வேதவாய்மைக்
காவலர் - வேதங்களில் விதிக்கப்பட்ட
அறம் - வாய்மை - என்னு மிரண்டில் அறத்தை மேல் விடையவர்
என்றதனாற் கூறினாராதலின் ஏனை வாய்மையை இதனாற்
குறித்தார். அறவினை யாதெனிற் கொல்லாமை" "ஒன்றாக நல்லது
கொல்லாமை மற்றதன், பின்சாரப் பொய்யாமை நன்று"
என்றிவவிரண்டினையும் வரையறுத்து முறைப்படுத்திய நீதிநூலும்
காண்க. வேதமும், அறத்தைச்செய் சத்தியத்தைப்பேசு - என்று
இம்முறையிலே பேசிற்று. இம்முறைபற்றியே இங்கு ஆசிரியர்
விடையவர் என்றும், அதன்பின் வாய்மைக்காவலர்
என்றும்
வைத்த அமைப்பும் காண்க. கொல்லாமை அறமாகியவழி, அஃது
அவ்வறக்கடவுள் புரங்கள் செற்றார் என்றதனோடு முரணாமை
மேலுரைக்கப்பட்டது. இதனைக் "கொலையிற் கொடியாரை
வேந்தொறுத்தல்" என்பது போலக் காண்க.
இங்கு இச்சரிதத்தினும்
நாயனார் பலபிராணிகளை
வேட்டையாடிக் கொன்று இறைவனுக்கு நிவேதித்தனர். அவை
கொலையாகாது அவற்றை ஈடேறச்செய்த அருட்செயலேயாயின
என்று பின்னர்க் காண்போம். "ஒளிநின்று கொன்றருளி" (791)
என்பார் ஆசிரியர். இச்சரிதக் குறிப்பும் பெற இங்கு இவ்வாறு
தொடங்கினார்.
வாய்மை
- வாயின் தன்மை. அது சத்தியத்தினைப் பேசுதல்.
இதுவே, சத்தியத்தை உன்னும் உள்ளத்தின் நிலையில் உண்மை
என்றும், அதனை மெய்யாரச் செய்யும் நிலையில் மெய்மை
எனவும்
பெற உள்ளது. சத்து - அழியாதது. இங்கு இச்சரிதத்தில்
இறைவர்
தமது நின்மலமாகிய சத்தித்திருமேனியிற்கண் அதிற்
குருதிபோலவும் காட்டினர். இவ்வாறு இல்லாதவற்றை உள்ளன
போலும் காட்டியவரை வாய்மைக் காவலர் என்ற
தென்னை?
எனின், அவை நாயனாரின் உண்மையைக் காட்ட எழுந்தன
ஆகலின் வாய்மைக்காவலின் நிகழ்ந்தன என்க. இதுவும் இச்சரிதக்
குறிப்பாதல் காண்க.
இவ்வாறன்றி
வேதம் உபசார மாத்திரையாய் எல்லாத்
தேவரையும் சொல்லுமாயினும் உண்மையிற் சிவனையே முதல்வனாக
உள்ளத்தில் (இதயத்தில்) வைத்துக் கூறும் ஆதலின் அவ்வாறு வேத
உண்மையாய் நின்ற காவலர் என்றதுமாம்.
திருக்காளத்தி
- சிலந்தியும், காளனும் (பாம்பு), அத்தி
(யானை)யும் பூசித்துப் பேறு பெற்றமையால் இப்பேர் பெற்றது.
"இந்தமலை காளனோ டத்தி தம்மி லிகலிவழி பாடு செய விறைவர்
மேவு, மந்தமில்சீர்க் காளத்தி மலையாம்" (திருஞான - புராண -
1020) முதலியவைகாண்க. தலவிசேடம் பார்க்க.
திருக்காளத்திக்
கண்ணப்பர் - காளத்தியிலே வழிபட்டுக்
கண்ணப்பிப் பேறு பெற்றவர் என்றது சரிதக் குறிப்பு. காளத்தியும்
கண்ணப்பரும் பிரிக்கக்கூடாதபடி யிணைந்துள்ள நிலையும்
குறிப்பதாம். கண்ணப்பர் என்ற பேர் காளத்தியிற் போந்தது
என்பதும் குறித்தார்.
கண்ணப்பர்
திருநாடு - திருநாடு - அவதரித்த நாடு.
கண்ணப்பர் - இவருக்குத் தாய் தந்தையர்
இட்ட திண்ணன்
என்றதனினும் இப்பெயரே சிறந்தது. இஃது இறைவன் தந்தது.
ஆசாரியர்கள் யாவரும் இப்பெயர்கொண்டே துதித்தனர். இஃது
அவர் சரிதங் குறிப்பதுமாம்; ஆதலின் இப்பெயரால் தோற்றுவாய்
செய்தனர்.
நாவலர்
புகழ்ந்து போற்று நல்வளம் - குறிஞ்சிநில
வளத்தைத் தமிழ் இலக்கணம் முறை செய்யும் வகையினைப் புகழ்ந்து
என்றும், இந்நாட்டுக் குறிஞ்சி, தலையன்புக் கிலக்கியமாய் நிற்கும்
நாயனார் அவதரிக்கும் பேறு பெற்ற நாடாயினமையின் போற்றும்
என்றும் கூறினார். இது பற்றியே வளம் என்னாது நல்வளம்
என்றதுமாம். அச்சிறப்பு மிகுதியும் பெற்றதனோடு எஞ்ஞான்றும்
நிலைபெறவும் பெற்ற தென்பார் பெருகிநின்ற என்றார்.
நாவலர் -
கலைவாணி யருள்பெற்ற கலை நாவலரும், ஞான வாணி தந்நாவிற்
பதியப் பெற்ற ஞான நாவலரும் என நாவலராவார் இருவகையினர்.
இங்குக் கூறிய நாவலர் பிற்கூறிய நிலையினராகிய நக்கீரதேவர்,
சமய குரவர் முதலிய ஞானத்தமிழ் நாவலர். பதினொராந் திருமுறை
முதலாயின அருட்பாட்டுக்கள் காண்க.
பூ
அலர் வாவி சோலை - வாவியிற் பூப்பன தாமரை
முதலிய நீர்ப்பூக்கள். நால்வகைப் பூக்களில் ஏனை மூன்றும்
சோலையிற் பூப்பன. இவை யெல்லாம் இந்நாட்டிற்காண உளவாம்
என்பார் வாவி சோலை என்று சேர்த்துக்கூறினார்.
வாவிசோலை -
உம்மைத் தொகை. இவை ஏனை நாட்டிற் போலச் செயற்கையானன்றி
இங்கு இயல்பிற் பொருந்துவன என்ற குறிப்புப் பெறச் சூழ்ந்த
என்றார்.
பொத்தப்பி
நாடு - காளத்திமலைச் சாரலுக்கு வடக்கே 40 -
50 நாழிகையளவில் உள்ளது. குறிஞ்சிப் பகுதியைச் சேர்ந்த
மலைநாடு. இப்பெயர் இன்றும் வழக்கிலிருக்கின்றது. பொத்தப்பி
நாட்டைக் கண்ணப்பர் திருநாடென்ப எனக்கூட்டுக.
போற்ற
- பெருக - போத்தப்பி - என்பனவும்
பாடங்கள். 1
|