653.
|
வன்புலிக்
குருளை யோடும் வயக்கரிக்
கன்றினோடும்
புன்றலைச் சிறுமகார்கள் புரிந்துட னாடலன்றி
யன்புறு காதல் கூர வணையுமான் பிணைகளோடும்
இன்புற மருவி யாடு மெயிற்றியர் மகளி ரெங்கும். 4 |
(இ-ள்.)
வெளிப்படை. அப்பதியில் எங்கும் வலிய
புலிக்குட்டிகளோடும் வெற்றியுடைய யானைக்கன்றுகளோடும்,
புன்றலையினையுடைய வேட்டுவச்சிறுவர்கள் விரும்பி விளையாடுதல்
உள்ளது. அன்றி அன்போடு ஆசைமிக அணைகின்ற பெண்
மான்களோடு இன்பமுறக் கூடிவிளையாடும் வேட்டுவச் சிறுமிகளும்
உள்ளனர்.
(வி-ரை.)
புலிக்குருளை - யானைக்கன்று - மான்பிணை
- இவை அவ்வச்சாதிக்குரிய பெயர்மரபு. "எப்பொரு ளெச்சொலி
னெவ்வா றுயர்ந்தோர், செப்பினரப்படிச் செப்புதல் மரபே"
என்பதிலக்கணம். "நாயே பன்றி புலி முயல் நான்கும், ஆயுங்காலைக்
குருளையென்ப" (8) "யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையும்,
ஆனோடைந்துங் கன்றெனற்குரிய" (15), புல்வாய் நவ்வி
யுழையே
கவரி சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே" (57) என்ற
தொல்காப்பிய மரபிற் சூத்திரங்கள் காண்க. வன்புலி - வயக்கரி
- அடைமொழிகள் அவ்வச் சாதிக்குரிய பண்பு குறித்தன.
புன்றலைச்
சிறுமகார்கள் - புன்றலை - எண்ணெயிடுதல்,
சிக்கறுத்தல் முதலிய பண்பாடின்றிக் குறுகிச் சுருண்டு பிளவுபட்டுச்
செறிந்த மயிர்கொண்ட தலையினையுடைய. மக - மக்களிளமைப்
பெயர். ஆர் - என்னும் பன்மைவிகுதி யேற்று மகார் என நின்றது.
"குழவியு மகவு மாயிரண் டல்லவை, கிழவ வல்வ மக்கட் கண்ணே"
- (மரபியல் - 23) என்பது தொல்காப்பியம். பின்னர் மகளிரை
வேறு பிரித்தமையால் இங்கு மகார் - என்பது இடநோக்கி
ஆண்மக்களைக் குறித்து நின்றது. வேடர் சிறுமகார்கள் புலிக்
குருளை யானைக்கன்றுகளோடு விரும்பி விளையாடுகின்றார்கள்.
வேட்டுவச் சிறுமியர் மான்பிணைகளோடு இன்புற
மருவியாடுகின்றார்கள். இவ்விருவகையினரும் அங்குள்ளார். ஆடும்
மகளிர் என்றது போல ஆடும் மகார்கள் என்னாது மகார்கள்
ஆடல் என்றது அவராடல்களின் வீரச்சிறப்பு நோக்கி என்க.
இக்கருத்துப்பற்றி மகார்கள் ஆடலன்றி என்றாரேனும் ஆடும்
மகார்களன்றி என்பது கருத்தாகக்கொள்க. வேடர் மகார்கள்
மரபுக்கேற்ப இளமையிலே வீரத்தன்மையுடையார் என்பதுகுறிப்பு.
புரிந்து - விரும்பி.
அன்புறு
காதல் கூர அணையும் - பழக்கத்தாலும்
புல்முதலியன ஊட்டிப் பாராட்டும் அன்பினாலும் தமக்குரிய
இயற்கைத் தன்மையினாலும் மான்பிணைகள் மகளிர்பால் தாமே
அணைகின்றன என்க. பெண்களின் கண்கள் தமது கண்களின்
மேலாயினமை
கண்டு அவர்கள்பால் மான்கள் அணைகின்றன
என்பது குறிப்பு. எயிற்றியர் - குறிஞ்சிநிலப்பெண்
மக்களின்
பெயர். ஈண்டு மகளிர் என்றது சிறுமிகளை.
மான் ஆன் முதலிய
பிளந்த குளம்புடையவாகிய
காயிலைதின்னும் பிராணிகள் கூட்டமாய் வாழு மியல்புடையனவாம்.
அவை மக்களால் வீட்டில் வளர்க்கப்பட்டு அவர்களோடு மிக
விரைவிற் பழகி அன்பு பூண்டு வாழ்வன. குடும்பப் பிராணிகள்
(Domestic animals),
என்பர் நவீனர். இவற்றின் இணையற்ற
புனிதமான அன்புக்கு எதிராகத் தம்மை அன்போடு அணையும்
இவற்றை இழிதகைமையால் வன்புடன் கொன்று தின்று
வாழ்கின்றவர் பலர். இவர்கள் கொடுமைதானென்னே!1
சிறுவர்களும்
சிறுமியர்களும் இளமையிலே தங்கள் தங்கள்
தகுதிக் கேற்றவாறு வெவ்வேறுவகை ஆடல்கள் பயில்கின்றனர்.
மகார்கள், வீரம், ஆண்மை, பெருமிதம், வலிமை முதலியவற்றின்
முளைகளாகி வளர்பவராதலின் புலிக்குருளை கரிக்கன்று
இவைகளுடன் ஆடினர். மகளிர் அவ்வாறன்றி அன்பு இன்பம்
முதலியவற்றின் நிலைக்களமாய் வளரவேண்டுபவர்களாதலின்
அன்புற அணையும் மான்பிணைகளோடு இன்புற மருவியாடினர்.
ஆணும் பெண்ணும் மக்கட்டன்மையில் ஒரு தன்மையினரே
யென்றும், இருவருமுடன் பயின்று ஒரேவகைக் கல்வி, பயிற்சி,
தொழில் முதலியவற்றிற்குரியார் என்றும் கூறி அதுபற்றி ஒரே
பள்ளியில் இருவரும் உடன்பயிலக் கல்விச் சாலையும்
பயிற்சியமைப்பும் அமைத்தும் பலவாறு கூவித் தடுமாறி யுழன்றும்
உலகுக்கு நிலைகேடு விளைக்கும் நவீனர் இக்கருத்துக்களை யறிந்து
சிந்தித்துத் திருந்துவாராக.
இங்குக் கூறிய
புலிக்குருளை முதலியன மேலே கூறிய
பார்வை மிருகங்கள் ஈன்றவையாம் என்றும், அன்றி இவையும்
பிடித்துக்கட்டி வளர்க்கப்படுவனவாம் என்றும்
கொள்ளக்கிடக்கின்றது. 675-ம் பாட்டுப் பார்க்க.
ஆடும் மகார்களன்றி
ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்
உள்ளார் என்க. உள்ளார் என்றது வருவிக்கப்பட்டது.
இவ்வாறே மேல்வரும்
இரண்டு பாட்டுக்களிலும் வினைமுற்று
வருவிக்க. 4
1எங்கள்
கொங்கு நாட்டு மலைச்சாரற் காடுகளிற் கொடிய
மிருகங்கள் உண்டு. அவற்றை வேட்டையாடச் சென்றனர் ஒரு
வேட்டைக் கூட்டத்தார். வேட்டை தொடங்கி இவர்கள் செய்த
ஆர்ப்பரவங்களுக்குப் பயந்து வேட்டைக் காட்டுக் குள்ளிருந்து
ஒரு கலைமான் வெளியில் ஓடிவந்து இவர்களிடமே நேரில்
அடைக்கலம் புகுந்ததுபோல அன்புடன் வந்தணைந்தது. ஒரு
சிறிதும் கருணையின்றி உடனே அதனைப்பற்றித் தலையைத் திருகிக்
கொன்று எடுத்துக் கொண்டனர். இக்கொடுமையைக் கண்ட
கூட்டத்திற் சேர்ந்த என் நண்பர் ஒருவர் நடுநடுங்கி அதுமுதல்
அவ்வேட்டை கூட்டத்தாரை விட்டகன்றனர். இது நான் அறிந்த
செய்தி - பதிப்பாசிரியன்.
|