655.
|
ஆறலைத்
துண்ணும் வேட ரயற்புலங் கவர்ந்து
கொண்ட
வேறுபல் லுருவின் மிக்கு விரவுமா நிரைக ளன்றி
யேறுடை வானந் தன்னி லிடிக்குர லெழிலி யோடு
மாறுகொண் முழக்கங் காட்டு மதக்கைமா நிரைக
ளெங்கும். 6 |
(இ-ள்.)
வெளிப்படை. அப்பதியெங்கும்
ஆறலைத்துண்ணுதலைத் தம்தொழிலாகக் கொண்ட வேடர்கள்
அயற்புலங்களிற் கவர்ந்து கொண்டு வந்த வெவ்வேறாகிய பல
உருவினால் மிக்கனவாய்ப் பொருந்திய ஆநிரைகளல்லாமல் வானில்
இடியேற்றின் குரலுடன் சூழும் மேகங்களோடு எதிராகிய
முழக்கத்தைக்காட்டும் மதமுடைய யானைக்கூட்டங்களும் உள்ளன.
(வி-ரை.)
ஆறலைத்துண்ணும் - ஆறலைத்துண்ணுதல் -
ஆநிரை கவர்தல் இவை குறிஞ்சிநில மக்களாகிய குன்றவர்
செய்தொழில்களாதலின் ஆறலைத்து உண்ணும் என்றார். Criminal
tribes என்பர் நவீனர். ஆறு அலைத்தல் வழிபோவாரை அலைத்து
அவர் பொருளைக் கவர்ந்து அது கொண்டு உண்டு வாழ்தல்.
"கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித், திடுகு
மொட்டெனக் குத்திக் கூறை கொண்டாறலைக்கு மிடம்" என்ற
திருமுருகன் பூண்டித் திருப்பதிகத்தில் ஆளுடைய நம்பிகள் இதன்
இயல்புகளை விரித்திருத்தல் காண்க. சிலப்பதிகாரம் வேட்டுவ
வரியும் பார்க்க.
அயற்புலம்
கவர்ந்து கொண்ட....ஆநிரைகள் - ஆநிரை
கவர்ந்து கொள்ளுதல் பண்டைத் தமிழ் நூல்களா னறியப்படும்
போர்முறைத் தொடக்கத்திற் பகைவர் நாட்டின் பசுக் கூட்டங்களைக்
கவர்ந்து செல்லும் மரபு பற்றியது. அயற்புலம் -
பகைவர் நாடு.
இதற்கு இவ்வாறன்றி அயல்நாடுகளினின்றும் கொள்ளை யடித்து
வந்த பசுக்கூட்டம் என்பாரும், வேறுபட்ட நிறங்களோடு கூடிய
விலங்குகள் என்பாரும் உண்டு. ஆறலைத்துண்ணும் என அதனை
அவர் உணவுத் தொழிலாக வேறு பிரித்துக் கூறினமையின் ஆநிரை
கவர்தல் அவரது சீவனத் தொழிலன்றென்க.
ஆநிரை
- குறிஞ்சி நிலக் கருப்பொருளாகாது
முல்லைக்குரிய கருப்பொருலாதலின் அயற்புலங் கவர்ந்துகொண்ட -
விரவும் ஆநிரை என்றார். அவைகளன்றிக் கைம்மாநிரை
எங்குமுள்ள என்றதனால் குறிஞ்சியும் முல்லையும் விரவிய திணை
மயக்கங் கூறியவாறும், இத்திணைக்குரிய கருப்பொருள்
கூறியவாறுமாயிற்று.
வானந்
தன்னில் இடிஏறுடைக் குரல் எழிலி என மாற்றுக.
இடியேறு - வல்லுருமேறு (622) என்றது காண்க. ஆண்டுரைத்தவை
பார்க்க. எழிலி (மேகம்) - யானைகளின்
பெரிய கரிய உருவிற்கும்,
இடிக்குரல் - அவற்றின் பிளிற்றோசையாகிய
பேரோசைக்கும்,
மழைநீர் - யானைகள் மிக்குப்பொழியும்
மதநீருக்கும் உவமை.
மெய்யும் பண்பும் பற்றி வந்த உவமம். ஏறுடைய வானம்
என்பதற்கு உயர்ந்த வானம் என்றுரைப்பாரு முண்டு.
கைம்மா
- கையையுடைய மிருகம். யானை. காரணப் பெயர்.
நிரை - கூட்டம். யானைகள் கூட்டமாகக் கூடிவாழுமியல்புடையன
என்பதும் உன்னுக. இவை கூட்டமாகக் கூடிப் பிளிறும் ஒலி
மலையின் எதிரொலியுடன் சேர்ந்து மேகங்களினின்றும் எழும் இடி
போன்றன என்பதாம். மலைகளின் உச்சியில் மேகந்தவழ்வன.
எனவே, மேலே இடியும், மலைச்சாரலில் யானைகளின் பிளிறலும்
ஒன்றற்கொன்று எதிர்த்து மாறு கொண்டு முழங்குதலைக்
காட்டுவன
என்க. மேகமுங் களிறு மெங்கும் - (81) முதலியவை காண்க. 6
|