(இ-ள்.)
வெளிப்படை. மை செறிவு கொண்டாற் போலும்
மேனியும், வன்றொழிலும் உடைய மறவர்கள் தம்மிடத்து அச்சம்
அருள் எனுமில்விரண்டும் எக்காலத்தும் அடைதலில்லாதவர்; வலிய
தோலாலாகிய உடையினையுடையார்; மலைத்தேனும் ஊன் கலந்த
இனிய சோறும் உண்ணுகின்றவர்களாய் நஞ்சு ஊட்டிய அழல்
அம்புகளை உடையவர்கள்; இத்தகைய வேடர்களுக்குத் தலைவன்
நாகன் எனப்படுவான்.
(வி-ரை.)
மைச் செறிந்தனைய - அல்வழிககண்
வல்லொற்றுமிக்கது.
வன்றொழில்
- கொல் - எறி - குத்து (654) என்ற
சொற்களாற் பெறப்பட்டவையும், மேற்பாட்டிற் கூறியவையுமாம்.
மறவர்
- குறிஞ்சிநில மக்கள் பெயர்.
தம்பால்
என்றும் அச்சமும் அருளும் அடைவிலார் -
அச்சம் - தீய விலங்குகட்கும் மக்கட்கும் எக்காரணத்தாலும்
அஞ்சுதல். விலங்கிற் அஞ்சாமை வேட்டையாலும், மக்கட் கஞ்சாமை
ஆறலைத்தல் அயற்புலங்கவர்தல் முதலியவற்றாலும் பெறப்படும்.
அச்சம் அடைவிலார் - என்பதற்குத் தீவினையச்ச
மில்லாதார்
என்றலுமாம். அருள் - இரக்கம். தம்பால்
அடைவு இலார் -
தம்மிடத்துச் சேராதார் - வாராதுகாத்தவர். அச்சம், அருள் என்னு
மிரண்டுமே உயிர்க்கொலையிற்றுணியாது மக்களைத் தடுத்து
அறவழியில் நிறுத்தி இறைவன்பாற் செலுத்துவன. "அஞ்சி யாகிலு
மன்புபட் டாகிலும், நெஞ்சம் வாழி நினைமட நெஞ்சமே" என்பது
அப்பர் சுவாமிகள் திருவாக்கு. "அஞ்சி லன்பதி லொன்றறி யாதவன்"
என்ற கம்பர் பாட்டுங் காண்க. இவ்விரண்டும் தம்மிடத்து
அடையாது நின்றவர் இம்மறவர் என்றமையால் அறமென்பதே இவர்
அறியார்; வன்கண்மையும் கொலையுமே செய்வார் என்றவாறாம்.
மறவர் என்ற பெயராற் குறித்ததும் காண்க.
வன்தோல் உடையார்
என மாற்றுக.
பொச்சை
- மலை. காடு என்றலுமாம். ஊன் இன் புழுக்கல்
- ஊன் கலந்த இனிய பல்வகைச் சோறு. 683 பாட்டுப் பார்க்க.
உணவு கொள்ளும் - என்றதனால் மலைநாட்டு உணாவகை
உணர்த்தியபடியாம்.
நச்சு
அழல் பகழி - நஞ்சு ஊட்டி வடித்ததாய்த்
தீப்போன்ற அம்பு. இவற்றின் ஊறுபடவே, ஊற்றின் வலியானும்
அதுவன்றி இவற்றில் ஊட்டியுள்ள நஞ்சின் கலப்பினாலும்
பிராணிகள் இறந்துபடுதல் திண்ணமாதலின் இவ்வகைப் பகழிகளை
இவ்வேடர் கையாள்வது வழக்கம். இவ்வகை அம்புபட்ட பிராணி
அப்போது அங்கு நின்று தப்பி ஓடிவிடினும் பிறிதோரிடத்தில்
வீழ்ந்துபடும் பொருட்டுப் பகழிக்கு நஞ்சூட்டுவர். நஞ்சு என்றது
எதுகை நோக்கி நச்சு என விகாரமாயிற்று. இதன் செயலும்
விகாரமுடைய வலிந்த செயலாதல் குறிப்பு.
அதிபதி
- தலைவன். "தங்கள்குல முதற்றலைவ னாகி யுள்ள
தண்டெரியனாகன்" (693) முதலியவை காண்க.
நாகன்
- மலைவாழ்நராகிய குறிஞ்சித் திணைக்குரிய மக்கள்
இட்டு வழங்கும் பெயர்களில் ஒன்று. இவர்கள் அத்திணைக்குரிய
நாகம் முதலியவற்றைத் தெய்வமாகக் கொண்டும் வனதெய்வங்களை
வழிபட்டும் அவற்றின் பெயர்களையே தம் மக்கட்கு இட்டு
வழங்குவர். "காட்டிலுறை தெய்வங்கள்" (699), "கொற்றவன
தெய்வங்கள்" (700) என்பன காண்க. இவ்வாறு அங்கங்கும் தாந்தாம்
வழிபடு தெய்வங்களின் பெயரை மக்களிட்டு வழங்குதல் எங்கும்
காணும் உலக வழக்கு. பின்னர்த் தத்தை - நாணன் - காடன் என
வரும் பேர்களையும் காண்க.
என்பான்
- எனப்படுவான். படுவிகுதி தொக்கு நின்றது.
"இல்வாழ்வானென்பான்" என்புழிப்போல. வரும்பாட்டிலும் இவ்வாறே
தத்தை யென்பாள் - என்றார். இவை பெயர்ப்
பயனிலை கொண்டு
முடிந்தன.
இப்பாட்டால்
இந்நில மக்களும், தொழிலும், உணாவும், பிறவும்
கூறப்பட்டன. 7