784.
எய்தியசீ ராகமத்தி லியம்பியபூ சனைக்கேற்பக்
கொய்தமல ரும்புனலு முதலான
                       கொண்டணைந்தார்
மைதழையுங் கண்டத்து மலைமருந்தை வழிபாடு
செய்துவருந் தவமுடைய முனிவர்சிவ கோசரியார்.
135

     784. (இ-ள்.) வெளிப்படை. சிறப்புப் பொருந்திய
சிவாகமங்களிற் சொல்லப்பட்ட சிவபூசை விதிகளுக்கேற்றபடி
கொய்துகொண்ட மலர்களும், எடுத்துக்கொண்ட நறும்புனலும்
முதலான பூசைப் பொருள்களைக்கொண்டு, விடம் விளங்கும்
கண்டத்தினையுடைய அந்த மலையின் எழும் மருந்தாகிய
காளத்திநாதரை நியதியாய் வழிபாடு செய்து வருதலாகிய தவமுடைய
சிவகோசரியார் என்ற முனிவரர் வந்து அணைந்தனர். 135

     784. (வி-ரை.) எய்திய - இறைவனிடத்திருந்து வந்த
என்றலுமாம். சீர் எய்திய ஆகமம் என மாற்றுக. ஆகமம் -
சிவாகமம். சீர் - சிறப்பு. சிவாகமங்களின் சிறப்புச் சத்தினிபாதர்க்
குரியதாதல். இவை, பாசத்தையும் உயிர்களையும் இறைவனையும்
அறிவித்து, பாசங்களிற் கட்டுப்பட்டுழலும் உயிர்கள் அவற்றினின்று
நீங்கி இறைவனை யறிந்து பற்றி, வீடுபெற்று இன்பமடையும்
நெறிகளை வகுத்துக் கூறுவனவாம். - இறைவன்; - உயிர்;
- மலம் - (பாசம்) எனும் இவை நுதலிய பொருளைப்
பெயரமைப்பினாலே அறிவித்து நிற்றல் காண்க. மலம் சடம்
எனக்காட்ட உயிரொடு கூடிய வழி யல்லது இயங்காத என்ற
மெய் யெழுத்தாலும், உயிர் அவ்வாறன்றி உயிர்க்குயிராகிய
இறைவனால் வியாபிக்கப்பட்டு இயக்கப்படும் தன்மையும் மலத்தாற்
பீடிக்கப்படும் தன்மையும், உடையதாய்ச் சதசத்து எனப் படுதலால்
என்ற உயிர்மெய்யெழுத்தாலும், இறைவன் இவ்விருதிறமுமன்றி
மேம்பட்ட முதல்வனாய், அவற்றை இயக்குவனாய் உள்ளவனாதலின்
என்ற உயிர் எழுத்தாலும், குறிக்கப்பட்டது என்பர். எனவே
முப்பொருள்களையும் உணர்த்தி உயிர்கள் உண்மை கண்டு ஒழுகி
உய்யும் படி செய்யும் நூல்கள் என்றதாம். "ஆ - சிவஞானம், -
முத்தி, - மலநாசம், என்னும் பொருண்மேனிற்றலால்
உயிர்களுக்கு மலநாசம் செய்து சிவஞானத்தை யுதிப்பித்து முத்தி
சாதனமாகும் நூலெனவும்; என்பது பாசம், என்பது பசு,
என்பது பதி எனப் பொருள்படு" தலால் திரிபதார்த்தத்தை
உணர்த்தும் நூல் எனவும் கொள்ளப்படும்.

     சிவாகமங்கள் இருபத்தெட்டென்பர். "அஞ்சன மேனி
யரிவையொர் பாகத்த, னஞ்சொடிருபத்து மூன்றுள வாகம, மஞ்சலி
கூப்பி யறுபத் தறுவரு, மஞ்சா முகத்தி லரும்பொருள் கேட்டதே"
என்பது திருமூலர் திருமந்திரம் (ஆகமச் சிறப்பு - முதற் றந்திரம் -
57). அவையாவன : காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம்,
தீப்தம், குக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம்,
நிச்சுவாசம், சுவாயம்புவம், அனலம், வீரம், இரௌரவம்,
மருடம்,
விமலம், சந்திரஞானம், முகலிம்பம், புரோற்கீதம், இலளிதம்,
சித்தம், சந்தானம், சருவோத்தமம், பாரமேச்சுரம், கிரணம், வாதுளம்
என்பன. இவற்றின் வழிநூல் நாரசிங்கம்முதல் விசுவான்மகம்
ஈறாகிய இருநூற்றேழென்ப. இவற்றை உபாகமங்கள் என்பர். இவை
சிவபெருமானாலே தமது மகாசதாசிவமூர்த்தத்தின் உச்சி
முகத்தினிடமுள்ள ஐம்முகங்களாலும் அருளிச்செய்யப்பட்டன என்பர்.
"மன்னு மாமலை மகேந்திர மதனிற், சொன்ன வாகமந்
தோற்றுவித்தருளியும்....மாவேட் டாகிய வாகமம் வாங்கியும், மற்றவை
தம்மை மகேந்திரத்திருந், துற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும்."
(கீர்த்தித் திருவகவல் - 10 - 20) என்ற திருவாசகங்களும், திருமூலர்
திருமந்திர முதலியனவும் காண்க. ஆகமங்கள் ஞானம், யோகம்,
கிரியை, சரியை என்ற நான்கு பாதங்களை யுடையன. வேத
சிவாகமங்க ளிரண்டும் பதிவாக்கியங்களாதலின் மேற்பிரமாணம்
வேண்டப்படாது தமக்குத்தாமே பிரமாணமாம். சிவாகமங்களை
"வேதாந்தத் தெளிவாஞ் சைவ சித்தாந்தம்" என்பர். உயிர்களுக்கு
இறைவனைக் காட்டிக் கூட்டிமுடிக்கின்ற வரையில் எல்லாப்
பொருள்களையும் சிவாகமங்கள் கூறுதலின் இவை முடிந்தமுடிபு
அல்லது சித்தாந்தம் எனப்படும். இவற்றில் ஞானபாதம் பதி பசு
பாசம் என்னு முப்பொருள்களையும், யோகபாதம் சிவயோகத்தையும்,
கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம் சந்தியா வந்தனம் பூசை
செபம் ஓமம் என்றிவற்றையும் சரியாபாதம் சமயாசாரங்களையும்
அறிவிப்பன. சிவன் கோயில்களெங்கும் நித்திய, சைமித்திக,
பவித்திர முதலிய பூசைகளும், கோயில் கட்டுதல், பிரதிட்டை
செய்தல் முதலியனவும், உயிர்களுக்குரிய கரும நியமங்களும்,
தீக்கை, ஆன்மார்த்த பூசை முதலியனவும் இவற்றில் விதித்தபடியே
நடைபெறத்தக்கன. இவை வேதங்களிலேனும் வேறு நூல்களிலேனும்
விதிக்கப்பட்டில.

     பூசலார் நாயனார் நினைப்பினால் எடுத்த கோயிலும், அவர்
சரிதத்திற் கண்ட காடவ அரசர் எடுத்த கச்சிக்கற்றளியும் அவற்றின்
பிரதிட்டைகளும், ஆகம விதிப்படியே அமைந்தனவாம்.
மனுச்சோழச்சிவாலயங்களின் பூசனைக்குத் துங்க ஆகமஞ்சொன்ன
முறைமையால் அங்கங்கும் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்து அமைத்த
செய்தி திருநகரச் சிறப்பிலும் (101), சோழவரசர்
புற்றிடங்கொண்டார்க்கு வேதாகமநூல் விதிவிளங்க நிபந்தம்
பலவும், வீதி விடங்கப் பெருமாளுக்குப் பங்குனி யுத்திரத் திருநாட்
சிற்ப்புக் குரியனவும் அரியணையின் மீது இருந்து அமைத்தார்
என்பது நமிநந்தியடிக ணாயனார் புராணத்திலும் அறிகின்றோம்.
உமை யம்மையார் "ஆகம விதியெலாஞ் செய்த" பரார்த்த
பூசையியல்பினைத் திருக்குறிப்புத் தொண்டநாயனார் புராணத்திலும்,
ஆகமங்
களின் "நின்ற விதியின் விளையாட்டா னிறைந்த வரும்
பூசனை" யாகச சண்டீசுர நாயனார் செய்த ஆன்மார்த்த பூசை
வியல்பினை அவர் தம் புராணத்திலும் காண்க. இவ்வாகமங்களை
இறைவன் உவமையம்மையாருக்கு உபதேசித்தருளினர். அவற்றைக்
கேட்டருளிய அம்மையார்கு, அவ்வாறு "எண்ணி லாகம மியம்பிய
விறைவர்தாம் விரும்பும் உண்மையாவது பூசனை என"வும்
உரைத்தருளினர். அதனையே கொண்டு அம்மையார் அவ்வாறே
தமது நித்திமாகிய பூசை செய்து உயிர்களுக்குப் போகங்களையும்
முத்தியினையும் அடையும் வழிகாட்டி வரமும் தந்தருள்கின்றார்
என்பதும் அறியப்படும். இவைபற்றித் திருக்குறிப்புத் தொண்ட
நாயனார் புராணத்தினுள் 50 முதல் 71 திருப்பாட்டுக்களிற்
கூறியனவும், பிறவும் காண்க. இங்கு இச்சரித்திரத்திலும்
சிவகோசரியார் ஆகம விதிப்படியே பூசையும், பவித்திர முதலியன
செய்து வழிபடுதலும், அவர் வழிபட்டவாறு கேட்டு அந்நெறியே
திண்ணனாரும் ஒழுகித் திருமஞ்சன முதலிய வழிபாடுசெய்தலும்,
இவர்கட்கு இறைவன் அருள் செய்தலும் காண்க.

     இயம்பிய - மண்ணினிற் பிறந்தார் பெறும் பயனிவையேயாம்
என்று எடுத்துச் சொல்லிய. "எண்ணிலாகம மியம்பிய"
என்றதுங்காண்க.

     பூசனைக்கு - பூசனைக்காக. ஏற்பக்கொய்த மலரும் -
ஏற்பக் கொய்தலாவது விதித்தபடி கொய்தலாம். இவைபற்றி எறிபத்த
நாயனார் புராணத்திலும், பின் முருகநாயனார் புராணத்திலும் காண்க.

     ஏற்ப - ஏற்பக்கொண்ட புனலும் முதலான என்றும் கூட்டி
உரைத்துக் கொள்க. முதலான - அமுது முதலாயினவற்றை.
இரண்டாம் வேற்றுமைத் தொகை. கொண்டு - ஏற்ப
அமைத்துக்கொண்டு.

     அணைந்தார் சிவகோசரியார் - எனப் பயனிலையை முன்
வைத்தார் அவரது தீவிர பத்தியும் அன்பும் அவர்முன் அணைந்தன
என்று குறிக்க. "அன்பு முன்பு நளிர்வரை யேற" (752) என்றது
நினைவுகூர்க.

     மைதழையும் கண்டம் - திருநீலகண்டம். மை - விடம்.
தழைதல் - நின்று விளங்கிப் பயன்றருதல். இதன் பொருள்
முன்னர்த் திருநீலகண்ட நாயனார் புராணத் துரைக்கப்பட்டது.
தழையும்
- தழைப்பிக்கும் - தழைக்கச்செய்யும் எனப்
பிறவினையாகக் கொண்டு, அழித்தலைச் செய்யும் விடம் இங்கு
நின்று உயிர்கள் அழியாது அருள்பெற்றுய்ந்து தழைசக்கச்
செய்தற்கிடமாகிய கண்டம் என்றலுமாம். மை - கருமை. அதனையுடைய விடத்துக்காயினமையின் பண்பாகு பெயர்.

     மலைமருந்து - மலையில் எழுந்த மருந்தாகிய
காளத்தியப்பர்.மலையின் மருந்துகள் சிறப்புடையன என்பது
மருத்துவ நூல். மருந்து - எல்லா நோய்க்குங் கொடியதாகிய
பிறவிப்பிணி தீர்க்கும் மருந்து. மருந்து போல்வாரை மருந்தென்றார்;
உருவகவணி. அவரே மருந்துமாகிப் பிணி தீர்ப்பார் என்றலுமாம்.
"மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்"
(திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம்) என்ற தேவாரமுங்
காண்க. மரணத்தைச் செய்யும மையானது தழையினும் அந்த
மரணத்தைப் போக்கும் மருந்து அவரேயாவர் என்ற குறிப்புப் பெற
இங்கு மருந்து என்றார். "ஆயிர மரவ மார்த்த வமுதனே"
(தனிநேரிசை) என்றது காண்க. "பிறவிப்(பெரும்) பிணி்க்கோர்
மருந்தே" (திருவாசகம் - புணர்ச்சிப்பத்து - 9), (மீனாட்சியம்மை
பிள்ளைத் தமிழ்).

     வழிபாடு செய்துவரும் தவம் - சிவ வழிபாடு செய்து
வருவதற் கேதுவாகியதவம். வழிபாடு - சிவபூசை. சிவபூசையே
தவமெனப்படும். அது செய்து வருவதற்கும் முன்னைத் தவம்
வேண்டும். "தவமும் தவமுடையார்க் காகும்" என்றது காண்க.
சண்டீசர் ஆளுடைய பிள்ளையார் புராணங்களும் கருக.

     சிவகோசரியார் - சிவத்தையே எப்போதும் கோசரித்துக்
கொண்டிருப்பவர் என்பது பொருள். இஃது இவர்க்குக் காரண
இடுகுறிப் பெயராமைந்தது. சிவபாதவிருதயர் என்றது போலக்காண்க.
"எட்டுக் கொண்டார் தமைத் தொட்டுக் கொண்டே நின்றார்" என்ற
திருவுந்தியார்க் கருத்தும் காண்க. கோசரித்தல் - அறிவுக்கு
விடயமாக்கிக் கொள்ளுதல் - தியானித்தல். சிந்தை நியமம் (785),
தணிந்த மனம் (789), புனைதவம் (808) என்பன இவரது
நிலையினையுணர்த்துவன காண்க. வாக்குமனாதீத கோசரமாய் நின்ற
வதுவே சத்தாயுள்ள சிவமாதலின் அறிவுக்கறிவாகிய அந்தச்
சிவத்தை அச்சிவனருலே கண்ணாகக் கண்டு நிற்பது இவர்
தன்மையாம். "அதுவென்றறிய விரண்டல்ல னாங்கறிவுணிற்ற,
லறியுமறி வேசிவமு மாம்" (சிவஞான போதம் 6-ம் சூத்), "என்னுளே
மன்னி நின்ற சீர்மைய தாயி னானைஎன்னுளே நினைய மாட்டேன்"
(குறைந்த திருநேரிசை - 4) என்றவையுங்காண்க.

     முனிவராகிய சிவகோசரியார் - என்க. அணைந்தார்
என்ற மொழியின் தகுதியும் சிறப்பும் முன்னர் உரைக்கப்பட்டன.
அணைந்தோர் தன்மை குறிப்பதும் காண்க. "பொருட்பற்றிச்
செய்கின்ற பூசனைகள் போல்விளங்க" (திருத்தோணோ - 3) என்ற
திருவாசகமும் சிந்திக்க. 135