660.
|
வாரணச்
சேவ லோடு வாமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிக டூக்கிச் சுரும்பணி கதம்ப நாற்றிப்
போரணி நெடுவே லாற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங் காடல் செய்து பெருவிழா வெடுத்த
பின்றை,
11 |
660. (இ-ள்.)
வெளிப்படை. அந்நெறியிலே சேவற்
கோழிகளையும் வரிகளையுடைய மயில்களையும் காணிக்கையாக
விட்டும், தோரணமாக மணிகளைத் தொங்க வைத்தும், வண்டுகள்
மொய்க்கும் அழகிய கடப்ப மாலைகளைத் தொங்கவிட்டும், போரில்
வல்ல அழகிய நீண்ட வேலேந்திய முருகப் பெருமானுக்குப்
புகழ்
புரியும் குரவைக் கூத்தாடப் பெரிய அணங்காடல் செய்வித்தும்
பெருவிழா எடுத்துச் செய்த பின்னர், 11
660.
(வி-ரை.) வாரணச்
சேவல் - சேவற் கோழி.
ஆண்கோழியைச் சேவல் என்பது மரபு.
வரிமயிற்
குலங்கள் - தோகையில் பல வரிகளும் ஏழு
நிறங்களும் கண் போன்ற சித்திர அமைப்புக்களும் உடைய
மயில்கள். தொகையிற் பலவாக விடுதலும், வகையில் ஆணும்
பெண்ணுமாகச் சேர்த்துவிடுதலும் குறிப்பதுபற்றிக் குலங்கள்
என்றார். ஓடு என்ற மூன்றனுருபு உடனிகழ்ச்சிப்பொருளில்
வந்தது.
சேவலும் மயிலும் ஒருசேர விடுதல் குறித்ததாம். இவ்விரண்டும்
பிராணிவகையில் ஓரினத்தைச் சார்ந்தவையென வகுப்பர்
சாத்திரிகள். சேவல் குமாரக் கடவுளது கொடியும் மயில் அவரது
ஊர்தியுமாதலின் அவருக் குகந்தவை. இவை குறிஞ்சிக்
கருப்பொருள்களுமாம். "அறிந்த புள்ளின் சூழ் சிலம் போசை
கேட்டு" - (781) எனக் கோழியைப் பின்னர்ச் சுட்டிக் கூறுதல்
காண்க. சூரன் பதுமன் என்ற இரண்டசுரர்கள் ஒருகடலில் ஒன்றுகூடி
நிற்க, அதனைக் குமாரக் கடவுள் வேலாற் பிளக்க, இருவராகிச்
சேவலு மயிலுமாய் வரவே, சேவலைக் கொடியாகவும், மயிலை
ஊர்தியாகவும் அவர் கொண்டருளினார் என்பது கந்தபுராணம்.
இவ்வாறு பலவகையாலும் இவ்விரண்டும் இணைந்த வகையாதலின்
சேவலோடு வரிமயில் என்று கூறினார். கொடியாக
உயர்த்தப்பட்ட
உயர்வு பற்றிச் சேவலை முதலிற் கூறியதாம். விட்டு - இவற்றை
விடுதலாவது, தம்பொருளென்று கொண்ட இவற்றைத் தம் சார்புநீக்கி
இவை முருகக்கடவுளுக்கு உரியனவாகுக என்று சிந்தித்து அவரது
திருமுன்றிலிலே கொண்டுபோய்க் கட்டில்லாது விட்டிடுதல்.
"ஒருதலை மீன்படுந் தோறும், நட்ட மாடிய நம்பருக் கெனநளிர்
முந்நீர், விட்டு வந்தனர் விடாதவன் புடனென்றும்
விருப்பால்" (11)
என்ற அதிபத்தநாயனார் புராண வரலாற்றினை இங்கு நினைவு
கூர்க. இவ்வழக்கு இந்நாளினும் முருகப்பெருமானது பெருங்கோயில்
பலவற்றினும் நிகழ்வது காணலாம். இதனால் முருகக்கடவுள்
திருவுள்ள முவந்து அருள் தருவார் என்பது.
இவ்வுண்மைகளைச்
சிறிதும் உணராது இந்நாள் மக்கள்பலர்
சற்று மஞ்சாது அறியாமை மிகுதியால் வன்கண்மை பூண்டு
இவற்றைக் கொன்று தின்று முருகப் பெருமானது
கோபத்திற்காளாகிக் கொடுநரகடைகின்றார்கள். இன்னோர் முருகப்
பெருமானது கொடியையும் ஊர்தி (வாகனம்) யையும்
அறுத்துக்கொன்று அபசாரஞ் செய்து கொண்டே அவனை வழிபாடு
செய்வதனால் நரக மடைவதன்றி வேறு என்ன பயன் பெறுவர்?
இவர்களது வழிபாடு வஞ்சனையே யாகுமன்றோ? இனியாவது
இவ்வுண்மையை யுணர்ந்து இன்னோர் முருகப்பெருமானை வஞ்சிக்க
எண்ணாது அவருக் குகந்த இப்பிராணிகளையும், மயிலைப்
போலவே அவருக்கு வாகனமாகிய ஆடுகளையும், விட்டு, நன்னெறி
யொழுகி நன்மையடைவார்களாக!
மணிகள்
தோரணந் தூக்கி - என மாற்றுக. மணி
மாலைகளைத் தோரணமாகக் கட்டி, அசைத்து ஓசை உண்டாக்கும்
மணிகளைத் தோரணமாகக் கட்டி இசைப்பித்தலும் ஒருவகை
வழிபாடு. தூக்கி என்ற சொல்லாற்றலும் இதனைக் குறிக்கும். இங்கு
மணிகள் என்றதற்கு இவ்வாறன்றிப் பலவகை
மணிகளை
மாலைகளாக்கித் தூக்கிக் கட்டி அழகுசெய்து என்றுரைப்பாரு
முண்டு.
நாற்றுதல்
- தொங்கவைத்தல். பூமாலைகள் ஒரே
அளவுடையனவாக அறுத்துத் தோரணங்களில் தொங்க வைத்தல்
மரபு. "பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை, துணையுற வறுத்துத்
தூங்க நாற்றி" என்பது திருமுருகாற்றுப்படை.
கதம்பம்
- கடப்ப மலர்மாலை "தாதிவர்பூந் தொடைமாலைத்
தண்பந்தர் களுமமைத்து" (267) முதலியவையுங் காண்க.
போர்
அணிநெடுவேலான் - போர் - அணி - நெடு -
என்பன வேலுக்கு அடை. வேலான் - முருகன். இவற்றை
வேலானுக்குக் கூட்டி யுரைப்பினு மமையும். "தானைத் தலைவ",
"செருவி லொருவ பொருவிறன் மள்ள, " "வேல்கெழு தடக்கைச்
சால்பெருஞ் செல்வ", "போர்மிகு பொருந" என்பனவாதி
திருமுருகாற்றுப் படைத் திருவாக்குக்கள் காண்க. வேலாற்கு -
ஆடல் செய்து - எனக் கூட்டிமுடிக்க.
புகழ்புரி
குரவை தூங்க - புகழ் புரிதல் - அவ்வேலோன்
புகழ்களை எப்பொழுதுஞ் சொல்லுதல். "புகழ் புரிந்தார்க் கருள்
செய்யு மையஞ்சி னப்புறத்தான்" திருவாரூர் - அப்பர் சுவாமிகள்
தேவாரம். குரவை - ஒருவகைக்கூத்து. "குரவையென்பது கூறுங்
காலைச், செய்தோர் செய்த காமமும் விறலுமெய்த உரைக்குமியல்பிற்
றென்ப" என்பதிலக்கணம். இதனை, "காமமும் வென்றியும்
பொருளாகக் குரவைச் செய்யுட் பாட்டாக எழுவரேனும்
எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது" எனவும்,
"இது வரிக்கூத்தின் ஓருறுப்பு" எனவும் "இது விநோதக் கூத்துப்
பகுப்பினுள் வரும்" எனவும் பிறவும் உரையாசிரியர் அடியார்க்கு
நல்லார் சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை உரையினுள்விரித்தனர்.
"குரவை யென்பதெழுவர் மங்கையர், செந்நிலை மண்டலக் கடகக்
கைகோத், தந்நிலை கொட்பநின் றாட லாகும்" என அதற்கு
இலக்கணங் காட்டியதுங் காண்க. (பதிகம் 77)
மலைநாட்டுத்
திருச்செங்குன்று என்னும் மலைமேலேறி
வேங்கைமரத்தினிழலினின்று, கண்ணகி, விமானமேறி விண்ணாடு
செல்லக்கண்ட வேட்டுவமகளிர் அவளை வாழ்த்தித் தமது
குறிச்சியில் ஒரு குரவைக் கூத்து இயற்றிய வரலாறு பற்றிய
சிலப்பதிகாரம் 24 - குன்றக்குரவையும் காண்க. குரவைக்கூத்தானும்
திணைதோறும் அவ்வத்திணைக்குரிய தெய்வத்திறனைப் போற்றி
அவ்வம் மக்கள் அவ்வவற்றிற்கேற்றவாறு ஆடற்குரியதாம்.
"மாயோன் மேயகாடுறை யுலகம்" என்றபடி முல்லைநிலத்துக்குரிய
கண்ணன் புகழ் கூறி வாழ்த்தி ஆடியதாகக் கூறும்
ஆய்ச்சியர்குரவையும், சிலப்பதிகாரத்துக் காண்க. "சேயோன் மேய
மைவரை யுலகமும்" என்றபடி இங்குக்குறிஞ்சித் தெய்வமாகிய
வேலோனது புகழைப் புரிந்து அந்நில மக்கள் ஆடுவது
குன்றக்குரவையாம். இக்கூத்தினுள் சிறுகுடியாராகிய குன்றவரது பெண்கள் அருவியிலும் சுனையிலும்
நீராடியும், பின்னர்த்
தொண்டகப்பறை அடித்தும், கோடு (கொம்பு) வாய்வைத்தும்,
கொடுமணியியக்கியும், குறிஞ்சி பாடியும், நறும்புகை எடுத்தும்,
பூப்பலி செய்தும், காப்புக் கடை நிறுத்தும், பரவல் பரவியும்,
விரவுமலர் தூவியும், வெறியாடல் செய்து, முருகனையும் அவன்கை
வேலினையும் அவனது விறலினையும், ஏத்தி வேலன் வருக எனக்
கைகோத்து ஆடலும் பாடலுமாகப் பயில்வதாம். விரிவு சிலப்பதிகார
முதலிய பழந்தமிழ் நூல்களுட் காண்க.
"பெருந்தண் கணவீர
நறுந்தண் மாலை, துணையுற வறுத்துத்
தூங்க நாற்றி, நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி, நறும்புகை
யெடுத்துக் குறிஞ்சி பாடி, யிமிழிசை
யருவியோ டின்னியங் கறங்க,
வுருவப் பல்பூத் தூஉய் வெருவரம், குருதிச் செந்தினை பரப்பிக்
குறமகண், முருகிய நிறுத்து முரணின ருட்க, முருகாற்றுப் படுத்த
வுருகெழு வியனக, ராடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய்வைத்துக் கொடுமணியியக்கி, யோடாப்பூட்கைப்
பிணிமுகம்வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர்
வழிபட" என்ற
திருமுருகாற்றுப்படை முதலியனவுங் காண்க.
வேலாற்கு
- இக்குன்றக்குரவையி னேத்தப்படுவது
முருகப்பெருமான் கை வேலாதலின் வேலாற்கு என்றார்.
"உரவுநீர் மாகொன்ற
வேலேத்தி யேத்திக்
குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி!"-
|
|
"சீர்கெழு
செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமு நீங்கா விறைவன்கை வேலன்றே
பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாட்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே" - |
|
"அணிமுகங்க
ளோராறு மீராறு கையு
மிணையின்றித் தானுடையா னேந்தியவே லன்றே
பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ண
மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே" - |
|
"சரவணப்பூம்
பொய்கையினிற் றாய்மா ரறுவர்
திருமுலைப்பா லுண்டான் றிருக்கைவே லன்றே
வருதிகிரி யோனவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர்க் குன்றங் கொன்ற நெடுவேலே" - |
என்பன ஏறக்குறைய இரண்டாயிரம்
ஆண்டுகளின் முன்னர் வழங்கிய
குன்றக் குரவைக் கூத்தினை உடனிருந்துகண்ட இளங்கோவடிகள்
சிலப்பதிகாரத்துக் கூறிய பாட்டுக்கள்.
குரவை
தூங்க - குரவைக் கூத்தாட. தூங்க - ஈண்டு
ஆடலும், அதனொடு கலந்து பயின்ற பாடலுமாக இயல என்ற
பொருளில் வந்தது.
பேர்
அணங்கு ஆடல் செய்து - பேர் - பெரிய -
அணங்காடல் - வெறியாடல் செய்து முருகனை
ஆவேசித்துவர
வழைத்தல். "வேலன் றைஇய வெறியயர்களனும் "திருமுருகாற்றுப்படை.
"வெறியாட றான்விரும்பி வேலன்வருகென்றாள்", "மாமலை
வெற்பனோய் தீர்க்கவரும் வேலன்" (குன்றக்குரவை) என்ற
சிலப்பதிகாரமுங் காண்க. இவ்வெறியாட்டில் பயின்றவன்
வேலினையேந்தி முருகனைத் துதித்து ஆடல் செய்து வர, முருகன்
அவன்மேல் ஆவேசித்து வருவதும், வந்தபின்னர் அவனிடத்துத்
தாம் வேண்டிய வரங்கள் கேட்பதும் மரபாம். இதற்கு இவ்வாறன்றி
அணங்கு - பெண் என்று கொண்டு, பெரிய தேவராட்டியை
வெறியாட்டயர்வித்து என்றும், தேவராட்டி சன்னதம் வந்து சொல்லி
என்றும் உரைப்பினுமமையும். ஆடல் செய்து சன்னதம் சொல்லி,
அதனாற் பெருவிழா எடுத்தபின் என்று உரைப்பாரு முண்டு.
பெருவிழா
எடுத்த பின்றை - இவ்வாறு, விட்டு - தூக்கி -
நாற்றி - தூங்க - ஆடல் செய்து - கூடிய பெரிய திருவிழாத்
தொடங்கி நடத்திய பின்பு. இப்பாட்டில் விழா அணிவகை கூறினார்.
மேற்பாட்டிற் சொல்லியவை அவ்விருவரும் தாமே பராவுக்கடன்
பூண்ட நெறிநின்ற ஒழுக்கமாகிய பூசனை கூறினார். இப்பாட்டில்
அவர்கள் பிறரைக் கொண்டு செய்வித்த சிறப்புக் கூறினார். விழா
வெடுத்தல்
- ஒரு சொன்னீர்மையாய்த் திருவிழாக்
கொண்டாடுதல் எனும் பொருளில் வந்தது. இத்திருவிழாவுக்குக்
கோழி - மயில் - விடுதல், தோரண மணிகளும் கதம்பமும் நாற்றுதல்,
குரவையாடுதல், குரவை பாடுதல், அணங்காடுதல் முதலியவை
அங்கங்களாம்.
எடுத்த
பின்னர் - என்பது பாடம். |