661.
|
பயில்வடுப்
பொலிந்த யாக்கை வேடர்தம் பதியா
நாகற்
கெயிலுடைப் புரங்கள் செற்ற வேந்தையார் மைந்த
ரான
மயிலுடைக் கொற்ற வூர்தி வரையுரங் கிழித்த
திண்மை
யயிலுடைத் தடக்கை வென்றி யண்ணலா ரருளி
னாலே,
12 |
661.
(இ-ள்.)வெளிப்படை. பயின்ற வடுக்கள் பொலிந்த
உடலினையுடைய வேடர்களது அதிபதியாகிய நாகனுக்கு மதில்களையுடைய முப்புரங்களையும் எரித்த
எந்தையாகிய
சிவபெருமானது மகனாராகிய வெற்றி பொருந்திய மயில்
ஊர்தியினையும் குரவுஞ்ச மலையினைப் பிளந்த திண்ணிய
வேற்படை யேந்திய பெரிய கையினையும் உடைய
வெற்றி
பொருந்திய பெருமையிற் சிறந்த முருகப் பெருமானது
திருவருளினாலே, 12
661.
(வி-ரை.) பயில்வடுப்
பொலிந்த யாக்கை - கரடி,
புலி, யானை முதலிய கொடிய மிருகங்களோடும், பகைவர்களோடும்
போர் பயின்றதனால் உண்டாகிய புண்களின் வடுக்கள்
விளங்குகின்றன உடம்பு. இது வீரர்களுக்கு இலக்கணமாகவும், அவர்
தம் வீரத்துக்கும் புகழுக்கும் அடையாளாமாகவும் கருதப்படும்.
இத்திறத்தை "வடிவே, மறப்புலி கடித்த வன்றிரண் முன்கை,
திறற்படை கிழித்த திண்வரை யகல, மெயிற்றெண்கு கவர்ந்த விருந்த
ணெற்றி" என, நாயனார் திருவடிவம் முதலியவற்றைக் கூறு
முகத்தாலே திருக்கண்ணப்பதேவர் திருமறத்தில் நக்கீரதேவர்
காட்டுதல் காண்க. (11 - ம் திருமுறை). இத்திறமாக நாயனாரது
திருமேனியில் ஊறுபட்டன என்று குறிப்பிடவும் பொறாத மரபுடைய
ஆசிரியர் இதனை நாகனது உடலின்மேல் வைத்துக காட்டிய
நயத்தின் அமைதி காண்க.
மைந்தரான
அண்ணலார் என்று கூட்டுக.
எந்தையார்
மைந்தரான - எந்தையார் - நம் எல்லார்க்குந்
தந்தையாராகிய சிவபெருமான். "எந்தை யீசனெம் பெருமான்" -
திருநெல்வாயிலரத்துறை - 1. ஆளுடைய பிள்ளையார் தேவாரம்.
"யாவர்க்குந் தந்தைதா யெனுமவரிப் படியளித்தா,
ராவதனாலாளுடைய பிள்ளையாராய்" (திருஞான - புரா - 69)
முதலியவற்றின் கருத்துக்களை இங்குவைத்துக் காண்க.
மயிலுடை.......வென்றி
- இவ்வளவும் அண்ணலாருக்கு
அடைமொழிகள். கொற்றமுடை மயில் ஊர்தி -
என மாற்றுக.
கொற்றத்தையுடைய மயிலாகிய ஊர்தி. சூரபதுமன் போரில்
மாயத்தினாலே நேமிப்பறவையாக வடிவுகொண்டு எதிர்ந்த போது
இந்திரன் மயிலுருக் கொள்ள முருகக்கடவுள், அதன்மேல் ஏறிப்
போர் செய்து சூரனது மாயவுருவைப் பிளந்தனர். இறுதியில்
மாயத்தாற் பெரிய மர மரமாமாய்நின்ற சூரன துருவைச் சுவாமியின்
வேலாயுதம் இருகூறாகப் பிளந்தது. அவ்விரு கூறுகளில்
ஒன்றுமயிலும் மற்றொன்று சேவலுமாகிவர, மயிலை ஊர்தியாகவும்
சேவலைக் கொடியாகவும் சுவாமி கொண்டு ஆட்கொண்டனர்.
இவை,
இந்திர
னனைய காலை யெம்பிரான் குறிப்புந் தன்மே
லந்தமி லருள்வைத் துள்ள தன்மையு மறிந்து நோக்கிச்
சுந்தர நெடுங்கட் பீலித் தோகைமா மயிலாய்த்
தோன்றி
வந்தனன் குமரற் போற்றி மரகத மலைபோ னின்றான்.
-
சூரபதுமன் வதைப்படலம் -
378
|
|
ஆட்படு நெறியிற்
சேர்த்து மாதியி னூழ்தந் துய்க்கத்
தாட்படை மயூர மாகித் தன்னிக ரில்லாச்
சூரன்
காட்படை யுளத்த னாகிக் கடவுள ரிரியல் போக
ஞாட்பியல் செருக்கில் வந்தான் ஞானநா யகன்றன் முன்னம்.
- சூரபதுமன் வதைப்படலம்
- 494
|
|
சீர்திகழ்
குமர மூர்த்தி செறிவிழி கொண்ட தொல்லை
யூர்தியி னிருக்கை நீங்கி யுணர்வுகொண் டொழுகி நின்ற
சூர்திகழ் மஞ்ஞை யேறிச் சுமக்குதி யெம்மை யென்னாப்
பார்திசை வான முற்றும் பரியென நடாத்த லுற்றான்.
-
சூரபதுமன் வதைப்படலம் - 499
|
என்பனவாதி கந்தபுராண
வரலாற்றினானறிக.
கொற்றமுடை
மயில் - கொற்றம் - இந்திரனாகிய மயில்,
சுவாமி அதனை ஊர்ந்து சூரனது நேமிப்புள்ளுருவம் பிளந்த
கொற்றத்தையும், சூரனாகிய மயில் தன்னை வென்று அடிப்படுத்தி
ஆட்கொண்டருளிய கொற்றத்தையும் காட்டி நிற்பன ஆதலின்
கொற்றமுடை என்றார். உடைய என்றது உடை
என ஈறு
குறைந்தது.
சாகத்தீவில்
பிரபாகரன் என்ற அரசனுக்கு அவன் மனைவி
சுகுமாரியினிடம் சூரன், பதுமன் என்ற இரட்டைப் பிள்ளைகள்
பிறந்தனர். இவர்க்குப் பின் சிங்கனும் அவன் பின் தாரகன்
என்பானும் பிறந்தனர். இவர்களுள்ளே சூரன் பதுமன் என்ற
இருவருக்கும் அகத்திய முனிவர் முருகப்பெருமானது மான்மியத்தைச்
சொல்லியருளச், சூரன் தான் முருகனது ஊர்தியாகிய மயிலாக
இருக்க விரும்பினான். பதுமன் அவரது கொடியாகிய சேவலாக
விரும்பினான். அவ்வாறே கிரணவிந்து, இடபயோகி என்ற
முனிவர்கள்பால் முறையே துர்க்கையின் மான்மியமும் சாத்தாவின்
மான்மியமும் கேட்ட சிங்கனும் தாரகனும் அவ்வவர் ஊர்திகளாக
விரும்பினர். இவை பெறுதற் பொருட்டு அவர்கள் தவஞ் செய்தனர்.
அதன் பயனாகப் பின் இப்பிறவி பெற்றனர் - என்றது முன் வரலாறு.
உபதேசகாண்டம் தணிகைப்புராணம் முதலியவை பார்க்க.
ஊர்தி
- "ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல்
வருவார்" - (திருக்கடவூர் மயானம் - ஆளுடையபிள்ளையார்
தேவாரம்) என்றபடி வேண்டுவாரிடத்து வேண்டு நடை நடக்கும்
வெள்ளேறேறி நடந்து வந்தருளுவார் எந்தையார். அவர்
மைந்தராகிய முருகப்பொருமான் வேண்டுவார்பால்
அவரினும்
விரைந்து தமது மயிலுடைக் கொற்றவூர்தியினை
ஊர்ந்து பறந்து
வருவாராதலின் இங்குப் பெருவிழா எடுத்தபின்றை (660)
அவரருளினாலே (661) தத்தைபாற் கருப்பநீட (662)
மகப்பேறு
விரைவிற் கூடிற்று என்று குறிப்பார் அருளுடைப் பெருமான்
மைந்தராந் தன்மையையும் மயிலூர்தி யுடைமையும் முதலிற்
சுட்டினார்.
சகச மலமாகிய
ஆணவமலத்துடன் கூடிய ஆன்மா இருதிற
னறிவுளது என்றும், சார்ந்ததன் வண்ணமாவதென்றும் சொல்லப்படும்.
பளிங்கிற் பவளம் பதித்தது போலத் தன்னை ஆன்மாவில் விளங்கச்
செய்து இறைவன் ஆட்கொள்ளும்போது,அதன் அசத்தாந்தன்மை
நீங்கும். சத்தாந் தன்மையே ஓங்கி நிற்கும். அதனை மறைத்து நின்ற
ஆணவமலம் வலியற்று இறைவனது ஆனந்தத்தை உயிர்
அனுபவித்தற்கு நிமித்தமாய் நிற்கும். "இன்பங் கொடுத்தலிறை
யித்தை விளைவித்தன் மலம்" என்றது ஞானசாத்திரம். இங்கு,
முருகப் பெருமான் சூரனாகிய மயிலை வாகனமாகக் கொண்டதன்
குறிப்பை ஆராயுங்கால் பல உண்மைகள் காணப்படுகின்றன.
ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களின்
நிலையர்களாகியோர் சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் என்ற மூவர்.
இவருள் ஆணவமல நிலையனாய் விளங்கினவன் சூரபதுமன் என்றது
இவன் பின்னர் ஏனைத் தாரகன் சிங்கமுகன்போ லழிந்து படாது
மயிலாய் வந்து முருகப்பெருமான்றிருவடிக்கீழ் என்றும் தங்கி
நின்றதனால் அறியப்படும். வானவில்லிற் காணப்படுவது போல
மிக்க நீலம் முதற் சிவப்பீறாக உள்ள ஏழு வன்னங்களும் மயிலிற்
காணப்படுவதனால் அவை ஆணவ மலத்தைக் குறிப்பாய்
விளக்குவனவென்பர். என்னை? காரிய வேறுபாட்டால் மோகம்,
மதம், அராகம், கவலை, தாபம் வாட்டம், விசித்திரம் என்ற
ஏழுவகைப்படும் ஆணவத்தின் தன்மையை இந்நிறங்களேழும்
குறிப்பன என்க. ஆன்மாவை இறைவன் தன் மலரடிக்கீழ் வைத்த
காலத்தேயும் ஆணவமும் ஆங்கு அழியாது வலியற்று
நிற்குமென்பது ஞானசாத்திரம். இறைவராகிய முருகப்பெருமான்
சூரன் முதலிய மூவரையும் வதைத்து, மும்மல காரியமாகிய
எயிலுடைப் புரங்கள் செற்ற தமது தந்தையார் போலத்தாமும்
உயிர்களுக்கு மலநீக்கம் செய்து, திருவடிக்கீழ் வைக்கும்
கொற்றத் திறத்தினை உணர்ந்த மயிலை ஊர்தியாக
ஊர்ந்தனர்
என்ற குறிப்பும் இங்குக் காணத்தக்கது.
வரை
உரம் கிழித்த திண்மை அயில் - வரை -
மாயத்தினால் அமைந்த மலை. இதில் தாரகன் மறைந்து மாயம்
செய்தான், உரங்கிழித்த - கிரவுஞ்சத்தைப்
பிளந்து தாரகனை
வதைத்த; முருகப்பெருமான் சூரசங்காரத்தின் பொருட்டுப்
பூதசேனைகளுடன் மகேந்திரபுரி நோக்கி வரும் வழியில் கிரவுஞ்ச
மலையாகிய மாயத்தின் மறைந்து தாரகன் போர்செய்ய அவனை
வதைத்தனர் எனும் நிகழ்ச்சி குறித்தது. இதனை "முன்னாள்
வரைகிழிய வேந்து மயில்வே னிலைகாட்டி, யிமையோ ரிகல்வெம்
பகைகடக்குஞ், சேந்தன்" (சண்டீசர் புராணம் - 1) என்று குறித்ததுங்
காண்க. விரிவு கந்தபுராணத்தினுட் கண்டு கொள்க. திண்மை
-
வலிமையுடைமை. அயில் - வேல். திண்மை அயில் -
வேல்
முருகப் பெருமானது ஞானசக்தி யென்ப. இச்சை - ஞானம் -
கிரியை - என்ற சத்திகள் மூன்றில் ஞானசத்தியே சிறந்தது.
"எத்திறம் ஞானமுள்ள தத்திறமிச்சை செய்தி" - என்பது
ஞானசாத்திரம். இறைவனது சத்தியினாலன்றிப் பிறிதொன்றினாலும்
வெல்லப்படாத வலிய வரம்பெற்ற வெஞ்சூரர்களையும் வதைத்த
வலிமை யுடையதும் முருகப் பெருமானது ஞான சத்தியுமாதலின்
திண்மைஅயில் என்று விதந்தோதினார். "கொன்னெடுவேற்,
றாரகனு மாயத் தடங்கிரியுந் தூளாக, வீர வடிவேல் விடுத்தோனே"
என்பது கந்தர்கலிவெண்பா, "குருகு பெயர்க் குன்றங் கொன்ற
நெடுவேலே" என்று (24 குன்றக் குரவை) சிலப்பதிகாரமும் துதிக்கும்.
"வீரவேல்! தாரைவேல்! விண்ணோர் சிறைமீட்ட, தீரவேல்!
செவ்வேள் திருக்கைவேல்! - வாரி, குளித்தவேல்! கொற்றவேல்!
சூர்மார்புங்குன்றும், துளைத்தவே! லுண்டே துணை" என
இதற்கென்று தனியாக வேற்பாட்டும் பாடித்துதித்தனர் பெரியார்.
அருணகிரிநாதர் வேல் வகுப்பும் வகுத்தனர்.
மயிலுடைக்
கொற்ற ஊர்தி - என்றதனால் சூரன் வதையும்,
வரையுரங் கிழித்த - என்றதனாற் றாரகன்
வதையும் கூறவே
இடைப்பட்ட சிங்கமுகன் வதமும் ஏனை அவுணர் சங்காரமும்
கொள்ளப்படும் என்பார் வென்றி அண்ணலார் என்றார்.
அயிலுடைத்
தடக்கை - சூர்முதல் தடிந்து, தேவர்
குறைமுடித்து விண்குடி யேற்றியருளும் பொருட்டுச் சிவபெருமான்
முருகப்பிரானைத் திருக்கயிலையிலிருந்து செல்ல விடுத்தருளும்போது
பதினோ ருருத்திரர்களையும் தோமாம் - கொடி - வாள்
- வலிய
சூலிசம் - பகழி அங்குசம் - மணி - பங்கயம் - தண்டம் -
வென்றிவில் - மழு என்ற பதினொரு படைகளாக அவரது
பதினொரு திருக்கரங்களிலும் அமரும் படி ஈந்தருளினர். பின்னர்
எல்லாப் படைகளுக்கும் நாயகமாகிய ஒப்பற்ற வேற்படையினை
நல்கி அவரது கையினிற் கொடுத்தருளினர்.
"பொன்றிகழ்
சடிலத் தண்ணறன் பெயரும் பொருவிலா வுருவமுந்
தொன்னா
ணன்றுபெற் றுடைய வுருத்திர கணத்தோர் நவிலருந் தோமரங்
கொடிவாள்
வன்றிறற் குலிசம் பகழியங் குசமு மணிமலர்ப் பங்கயத்
தண்டம் வென்றிவின் மழுவு மாகிவீற் றிருந்தார் விறன்மிகு
மறுமுகண் கரத்தில்"- |
|
"ஆயதற்
பின்ன ரேவின்மூ தண்டத் தைம்பெரும் பூதமு மடுவ;
தேய பல்லுயிரு மொருதலை முடிப்ப; தேவர்மேல் விடுக்கினு
மலர்தம்
மாயிருந் திறலும் வரங்களுஞ் சிந்தி மன்னுயி ருண்ப;
தெப் படைக்கு
நாயகமாவ; தொருதனிச் சுடர்வே னல்கியே
மதலைகைக்
கொடுத்தான்"-
-
விடைபெறு படலம் - 37 - 38
|
என்ற கந்தபுராணமும்
காண்க.
முருகப்பெருமான்
இவ்வெற்றிவேற் படையைச் சூரபதுமன்,
றாரகன் என்றிவர் மேல் ஏவி யவர்களை வதைத்தனர். ஆதலின்
மயிலுடைக் கொற்றம் - என்றும், வரையுரங் கிழித்த
என்றும்
கூறிய இவ்விடத்துத் திண்மை அயில் உடைத்
தடக்கை வென்றி
- என்று வேற்படையினையும் வெற்றியையும் புணர்த்திக்
விதந்தோதினார். "அவுணர் நல்லை மடங்கக்கவிழிணர், மாமுத
றடிந்த மறுவில் கொற்றத், தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்...."
எனவும், "வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ்செல்வ! குன்றங் கொன்ற
குன்றாக் கொற்றத்து"- எனவும் வரும் திருமுருகாற்றுப்படைக்
கருத்துக்களை இங்குவைத்துக் காண்க.
மைந்தர்
- அண்ணலார் - பன்மை யீறுகள் பெருமை
குறித்தன.
அருளினாலே
கருப்பநீட என வரும்பாட்டோடு தொடர்ந்து
கொள்க. குறவர் மங்கையாகிய வள்ளியம்மையாரோடு முருகவேள்
கூடிவீற்றிருந்து உலகத்துயிர் யாவைக்கும் உரியவாறு போகமு
முத்தியுங் கொடுத்து நல்லருள் புரிகின்றான் என உணர்கின்றோ
மாதலின் அவனருளினாலே குன்றவர் கோமானுக்கு மகப்பேறு
உண்டாகத் தத்தைபாற் கருப்ப நீடிற்று என்க. "பச்சிளங் கொங்கை
வனசரர் பாவையோடடொன்றி, யிச்ச கத்துயிர் யாவையு முய்யவீற்
றிருந்தான்" - (வள்ளியம்மை திருமணப் படலம் - 214) என்பது
கந்தபுராணம். மேற்பாட்டில் முருகவேளைப் பரவிய விழாவும்,
அவ்விழா எடுத்த வினை முடிவு கொள்ளு முன்னர் இப்பாட்டில்
அதனாற் பெறும் அவனருளும், வரும்பாட்டில் அவ்வருளாற் பெறும்
மகப்பேறும் அதுபற்றிய வெறியாட்டுமாக ஒன்றையொன்றுபற்றி
விரைந்து தொடர்ந்து முடிவுறும் சிறப்புக் காண்க.
சிவபெருமானைச்
"சதாசிவோம்!" என ஒருமுறை துதித்த
வேதங் குமாரப் பெருமானைச் "சுப்ரமண்யோம்!!!" என
மும்முறை
துதித்து அவரது அருட்பெருமையை விளக்கிற்று என்ப.
அதுபோலவே இங்கு ஆசிரியர் தமிழ் மறையாகிய இப்
புராணத்துள்ளேயும், புரங்கள் செற்ற எந்தையார்
என்று ஒரு
முறை துதித்த இடத்துச், "செவ்வேன் முருகவேள்" -
(659),
"போரணி நெடுவேலான்" (660), "அயிலுடைத்
தடக்கை வென்றி
யண்ணலார்" - (661) என மும்முறையும் அடுக்கி அவரது அருட்
சத்தியாகிய வேலுடனே கூட்டி முருகப்பெருமானைத் துதித்துக்
காட்டிய அருமைப்பாடும் காண்க. "பன்னிரண்டு கண்ணுடைய
பிள்ளை தோன்றும்" - என்றபடி பன்னிரண்டு திருக்கண்களும்
பன்னிரண்டு திருக்கைகளும் உடையாராகிய முருகப்பெருமானுடைய
திருவருள் வெளிப்பாட்டைக் கூறும் இப்பொருளைப்
பன்னிரண்டாவது திருமுறையின் கண்ணாகிய இப்புராணத்திற்
பன்னிரண்டாவது திருப்பாட்டிற் கூறிய தெய்வச் சிறப்பும் காண்க.
இவ்வாறு வருதல் ஆசிரியரது தெய்வ வாக்கிற் கூத்தப்பிரான்
அமைத்த தெய்விகச் சிறப்பான அமைப்புக்களில் ஒன்றென்க.
"ஆதியெழுத்தவை யைம்பதோ டொன்றென்பர்," "ஐம்பத்தோரக்கரி"
என்று போற்றப்படும் அம்மையார் காஞ்சியிலே தவஞ் செய்து
இறைவனைப் பூசித்த பொருள் திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
புராணத்தில் ஐம்பத்தொன்றாவது திருப்பாட்டிற் கூறவும், திருமந்திரம்
- நாலாந்தந்திரம் - திருவம் பலச் சக்கரப் பகுதியில்
"ஐம்பத்தொன்றாமே" என்று 51 - ம் திருமந்திரம் அருளவும்,
அமைந்த தெய்விகச்சிறப்பும்," அரிவையொர் பாகத்த, னஞ்சொடிரு
பத்து மூன்றுள வாகமம்" - (57) "சிந்தைசெய் தாகமம் செப்ப
வந்தேனே" (73) - முதற்றந்திரம் - திருமந்திரம், "தண்ணிலவார்
சடையார்தாந் தந்தவாகமப்பொருளை, மண்ணின் மிசைத் திருமூலர்
வாக்கினாற் றமிழ்வகுப்ப" - திருமூல நாயனார் புராணம் - (23),
என்பனவற்றானறிகின்றபடி, இருபத்தெட்டுச் சிவாக மங்களின்
பொருளைத் திருமந்திரங்களாகத் தமிழில் அருளிய திருமூலநாயனார்
சரிதத்தை இருபத்தெட்டுத் திருப்பாடல்களால் வகுக்க அமைந்த
தெய்விகச் சிறப்பும், இன்னும் இவைபோல்வன பலவும் இங்கு
உன்னுங்கால் நாம் மேலே கூறியது வெறும்புனைந்துரையன்றென்பது
விளங்கும். திருமூலர் திருமந்திரம் - நாலாந் தந்திரம் - நவகுண்டப்
பகுதியில் முருகனைப் பற்றிக் கூறும் "எந்தை பிரானுக்
கிருமூன்று
வட்டமாய்த், தந்தைதன் முன்னே சண்முகந் தோன்றலால்" என்பது
12 - வது திருமந்திரமாக அமைந்ததுங் காண்க. 12
|