662.
கானவர் குலம்வி ளங்கத் தத்தைபாற் கருப்ப நீட
வூனமில் பலிகள் போக்கி யுறுகடன் வெறியாட்
                                  டோடும்
ஆனவத் திங்கள் செல்ல வளவில் செய் தவத்தி
                                 னாலே
பான்மதி யுவரி யீன்றா லெனமகப் பயந்த போது, 13

     662. (இ-ள்.) வெளிப்படை. வேடர்களது குலம் விளங்கும்படி
தத்தையின் வயிற்றிலே கருப்பம் தரித்ததாக, ஊனமில் பலிகளைக்
கொடுத்துக் கடமையாயுற்ற வெறியாட்டுடனே, ஒவ்வொன்றாய்
ஆயின அந்த மாதங்கள் சென்றனவாக, முன்னே அளவில்லாது
செய்த தவத்தினாலே நற்பான்மையுடைய நிறைமதியை உவர்க்கடல்
பெற்றது போலத் தத்தை மகவினைப் பெற்றெடுத்தபோது, 13

     662. (வி-ரை.) கானவர் குலம் விளங்க - கானவர் -
வேட்டுவர். குறிஞ்சி நிலமக்கள். கண்ணப்ப நாயனாரைத்
தன்னகத்துப் பெற்றதனால் வேடர்குலம் விளக்கம்பெற்றது என்பது.
"மறை, கைப்படுத்த சீலத்துக் கவுணியர்கோத் திரம் விளங்கச்,
செப்புநெறி வழிவந்தார் சிவபாத விருதயர்" - (திருஞான - புரா -
15). "உபயகுல மணிவிளக்காஞ் சேக்கிழார்" - (திருத்தொண்டர்
புராண வரலாறு - 11) என்பன காண்க. ஒரு பெரியார் ஒரு குலத்தில்
அவதரித்தாராயின் அவரால் அக்குலமுழுவதும் விளக்கமடைந்து
உய்யும் என்பது ஆன்றோர் துணிபு. திருவண்ணாமலைக்
கார்த்திகைச் சோதி தரிசித்தவரின் "கோத்திரத்தி லிருபத்தோர்
தலைமுறைக்கு முத்திவரங் கொடுப்போ மென்றார்" என்ற
அருணாசலபுராணமுங் காண்க.

     தத்தைபால் கருப்பம் நீட - தத்தையின் வயிற்றிலே
கருப்பம் தங்க. "சேவடிக்கீழ் வழிபட்டுக், கருத்துமுடிந் திடப்பரவுங்
காதலியார் மணிவயிற்றில், உருத்தெரிய வரும்பெரும்பே றுலகுய்ய
வுளதாக" - (திருஞான - புரா - 20) என்பது காண்க. நீடுதல் -
தங்குதல். "அளிநீடளகம்" - திருக்கோவையார் - 122. நீட - வளர
என்றுரைப்பாருமுண்டு.

     ஊனமில் பலிகள் - மாதந்தோறும் ஒழுங்குபெற முற்றிக்
கருப்பம் வளராமற் செய்யும் ஊனங்களை யில்லையாகச் செய்யும்
பலிகள். போக்கி - இட்டு - கொடுத்து. இம்மாதங்களின் வரும்
ஊனங்களைத் திருவாசகத்தில் (போற்றித் திருவகவல்).

"மானுடப் பிறப்பினுண் மாதா வுதரத், தீனமில் கிருமிச்
                       செருவினிற் பிழைத்து,
மொருமதித் தான்றியி னிருமையிற் பிழைத்து, மிருமதி
                    விளைவி னொருமையிற் பிழைத்து,
மும்மதிதன்னுளம் மதம்பிழைத்து, மீரிருதிங்களிற் பேரிருள்
                                  பிழைத்து,
மஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்து, வாறு திங்களி
                                 னூறலர்
பிழைத்து, மேழு திங்களிற் றாழ்புவி பிழைத்து, மெட்டுத்
                                 திங்களிற்
கட்டமும் பிழைத்து, மொன்பதில் வருதரு துன்பமும்
                                 பிழைத்துந், தக்க
தசமதி தாயொடு தான்படுந், துக்க சாகரத் துயரிடைப்
                                  பிழைத்தும்....."

என்பனவாதியாக மணிவாசகப் பெருமான் அருளியனவற்றை இங்கு
நினைவு கூர்க.

     உறுகடன் வெறியாட்டோடும் -அவ்வம் மாதந்தோறும்
கடமையாகச் செய்யும் வெறியாடல்களுடன். வெறியாடல்வகை மேல்
அணங்காடல் - (660) என்ற விடத்துரைக்கப்பட்டது.

     ஆன அத்திங்கள் செல்ல - கருப்பம் தரித்தபின்
"கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை கருநரம்பும்
வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி, யுருவாகிப் புறப்பட்டு"
(திருத்தாண்டகம் - திருவாரூர் - 6) என்றபடி வளர்ச்சி முற்றுவதான
பத்துத்திங்களும் நிரம்பிச் செல்ல. "முட்டை பிறந்தது முந்நூறு
நாளினில்" என்பது திருமந்திரம். இதனை 280 நாட்களுக்குமேல்
முந்நூறு நாட்களுக்குள் என்பர் நவீன சாத்திரிகள். முற்றுவதற்கு
வேண்டிய அந்த என அகரம் உலகறிசுட்டு.

     செய் அளவில் தவத்தினாலே என மாற்றுக. தத்தையும்
நரகனும் செய்தவம் - கானவர்குலஞ் செய்தவம் - மாதவஞ் செய்த
தென்றிசை செய்தவம் - அன்புநிலை உணராது ஆணவத்தி னழுந்தி
உழலும் உயிரெல்லாஞ் செய்தவம் என்று பலவாறு கூட்டி யுரைக்க
நின்ற அழகுங் காண்க. "முந்தை யெம்பெருந் தவத்தினாலென்கோ
முனிவ ரிங்கெழுந் தருளியது" (408) பார்க்க. உவரிசெய் தவத்தினாற்
பரன்மதி யீன்றாலென என்று கூட்டி யுரைப்பதுமாம். பாற்கடலைத்
தேவர்கள் கடைய அதிற் பிறந்தது மதி என்பர். அதுபோலத் தானும்
ஒரு மதியினையீனும் பொருட்டு உவரியாகிய கருங்கடலும் தவஞ்
செய்து பெற்றதுபோல
என்பதாம். கடல் தவஞ்செய்தல்
எற்றுக்கெனின் தனது கருமை, உவர்ப்பு மண்ணீருமாகாத தன்மை,
கழிநாற்றம் முதலிய இழிபுகளைப் போக்கும்படிக்கும், பாற்கடல்
பெற்ற அந்த மதிக் குழவியின் மேம்பட்ட குழவிமதியை
நன்றெடுக்கவும் ஆம் என்க. இவ்வாறுரைப்பின் தற்குறிப்பேற்றமாம்.
அக்குழவியின் மேம்படுதலாவது அது வெண்மதியாய்க், கலைகள்
வளர்வதும் தேய்வதுமுடைய தாய்த், தேவரிலொன்றாய், இறப்பும்
பிறப்பும் உடையதாய், இறைவனாற் காக்கப்பட்டுள்ளதாய் நிற்பது;
தான் பெறும் இக்குழவி அவ்வாறன்றிக் கருங்கதிர் விரிக்குமேனிக்
காமர் பெற்றுடையதாய், பதினாறாண்டிற் கலைவளர்வதாய்ப், பின்னர்
என்றும் குறைவில்லாததாய், இறப்பும் பிறப்பு மில்லாததாய், இறைவன்
பக்கத்திருந்து அகலாது அவருக்குக் காவல் புரிவதாய் உள்ளது
என்ப.

     உவரி - தத்தைக்கும், பான்மதி - நாயனாராகிய மகவுக்கும்
உவமை, உருவும் தொழிலும் பற்றி வந்தது. பான்மதி -
நற்பான்மையும் நிறைவும் பெற்ற மதி என்க. பால் போன்ற
வெள்ளிய சந்திரன் என்றுரைப்பாருமுளர். முழுமதி தோன்றும்போது
சிவந்து காட்டும். அன்றியும் இம்மகவு பின்னர்க் "கருங்கதிர் விரிக்கு
மேனி" (665) யுடையதாம். ஆதலின் அவ்வுரை பொருந்தாமையறிக.
குழவிகள் பின்னர் எந்நிறமுடையனவாக ஆயினும், தாய்
வயிற்றினின்றும் பிறக்கும்போது புதிய இரத்தஊற்றத்தினால் எல்லாக்
குழவிகளும் செம்மை நிறமே தந்நிறத்தின் மிக்குக்காட்டும். இங்குத்
தத்தையீன்றபோது உவரியின் தோன்றும் பான்மதியாயின இம்மகவு,
தாதை எடுக்கும்போது "காளமேகம்" (664) ஒப்பாயினதென்
றுரைத்தலும் காண்க.

     இனி, இறைவனது நெற்றிக் கண்ணாகிய கனற் கண்ணினின்றும்
அவதரித்தவர் முருகப்பெருமான். அவர் "பலர் புகழ் ஞாயிறு
கடற்கண்டா அங்கு" என்றபடி "வெம்புந்திய கதிரோனொளி" யென
விளங்குபவர். இம்மகவு அவரது தண்ணருளாலே போந்தது ஆதலின்
இது மதி போன்றது என்றார் என்றலுமாம். ஞாயிற்றின் ஒளி, "வெம்பு
உந்திய" தாகலின் வெப்பமுடையது; அதனைப் பல உயிர்களும்
தரித்தாற்றலாகாதாம்; ஆயினும் அந்த ஞாயிற்றின் ஒளிபெற்று
விளங்கும் மதி அமுதமாக்குவது; "தோற்று மன்னுயிர் கட்கெலாந்
தூய்மையே சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோ, யாற்ற
வண்டமெ லாம்பரந் தண்ணல் வெண், ணீற்றின் பேரொளி" (308)
போன்றது; அது ஞாயிற்றின் கதிரொளியைத் தான் பெற்று அதனால்
கண்ணிதாய் விளங்குவது என்பது பௌதிக சாத்திர உண்மை.
அதுபோல இந்தப் பான்மதியும் முருகனாகிய ஞாயிற்றின்
அருளொளியால் விளங்கி உலவி உலகுக்கு அன்பாகிய தண்ணொளி
பரப்பி உய்விப்பதாயிற்று என்றதொரு குறிப்பினாற்
பயனுவமையாதலும் பெறப்படும்.

     மகப் பய்ந்த போது - தத்தை மகவை யீன்றபோது. தத்தை
என்பது வருவிக்க. பயந்தபோது - பொழிந்தது - ஆர்த்த என
வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க.

     பலிகளோக்கி - பலிகளோச்சி - என்பனவும் பாடங்கள்.
13