664.
|
அருவரைக்
குறவர் தங்க ளகன்குடிச் சீறூ ராயம்
பெருவிழா வெடுத்து மிக்க பெருங்களி கூருங்
காலைக்
கருவரை காள மேக மேந்திய தென்னத் தாதை
பொருவரைத் தோள்க ளாரப் புதல்வனை யெடுத்துக்
கொண்டான். 15
|
(இ-ள்.)
வெளிப்படை. அரிய மலைக்குறவர்களுடைய
பெரிய குடிகள் வாழ்கின்ற சிற்றூரில் வசிக்கும் மக்கட் கூட்டம்
விழாக்கொண்டாடி மிக மகிழ்ச்சி கூருங் காலையில் கரிய
மலையானது காளமேகத்தை மேலேகொண்டு தாங்கியதே போலத்
தந்தையாகிய நரகன் போர்செய்யும் மலைபோன்ற தோள்கள்
ஆரும்படி புதல்வரை எடுத்துக்கொண்டான்.
(வி-ரை.)
வரைக்குறவர் - மலையில் வாழும் குறவர்
மலைகளாளு மறக்குலத் தலைவர்" (678) என்றது காண்க.
அகன்குடி
- பெருங்குடிகள். நீண்டகாலம் வழிவழி வரும்
பெருமையும் குலவொழுக்கப் பெருமையும் முதலியன குறித்தது.
சீறூர்
- சிற்றூர். குறிஞ்சி நிலத்து ஊர்களின் பெயர்.
ஏற்றமும் இழிவுமாயுள்ள நில அமைப்பினாலும், காடுகள்
சூழ்வதாலும், மருத நிலத்திற்போலப் பெரு நகரங்கள் குறிஞ்சி
நிலத்தில் அமைத்தல் இயலாது. சிற்சில மனைகள் கூடிய
தொகுதிகளாய் அங்கங்கு அமைந்து வாழ்வார் அந்நிலமக்கள்.
ஆதலின் இவை சீறூர் - சிறுகுடி எனப்பெயர் பெறும். ஆயம்
-
ஒருசார்புபற்றிய மக்கட் கூட்டம். இங்கு நாகனுடைய தலைமையின்
கீழ் வாழும் குடிமக்களின் கூட்டம் குறித்தது.
பெரு
விழா - பெருங்களி - பெருமகிழ்ச்சியால்
முத்தும்மணியும் மழைபோலப் பொழிந்தனர் என மேற்பாட்டிற்
கண்டோம். அம்மகிழ்ச்சி பற்றியே பெருவிழாக் கொண்டாடினர்.
பெருங்களியாட் டயர்ந்தனர். விழா - பொதுவிற்
பலர் கூடி
மகிழ்தல். களி - அவ்வவர் மனையில் தாந்தாம் மகிழ்தல்.
கருவரை
காளமேகம் ஏந்தியதென்ன - "பான்மதி உவரி
ஈன்றாலென" (662) என்றது மகப்பயந்தபோது தாயும் சேயுமாய்
நின்ற நிலைக்கும், இங்குக் கூறியது, அம்மகவினை எடுத்துக்
கொண்டு தந்தையும் மைந்தனுமாய் நின்ற நிலைக்கும் உவமைகளாம்.
இதுவும் உருவும் தொழிலும் பற்றிய உவமம். தந்தை எடுத்தேந்திய
நாளில் குழவி தனது குலத்துக் கியல்பாகிய கருநிறம் மிக்கு
விளங்கிற்று என்பது.
கருவரை
- கரிய மலை. காளமேகம். நீர்
சுமந்து
பெரும்பெயல் பெய்யநின்ற கருமேகம். மலையின் உச்சியில் நின்ற
சூல்கொண்ட மேகம் பெய்யும் பெருமழையினால் உலகு
உய்வதுபோல இக்குழவி பின்னர்க் காளத்தியுச்சியில் நின்று முன்பு
செய்தவத்தின் விளைந்த அன்பு மழையினால் உலகம் உய்திபெற
நின்றதென்ற குறிப்பினால் பயனுவமையாதல் ஈண்டும் பெறப்படும்.
பொருவரைத்
தோள்கள் ஆர - போர்த்தொழில்வல்ல
இருதோள்களும் பொருந்த. புதல்வன் - "புதல்வர்ப்பேறே"
(659)
என்றதுபோல இங்கும் கூறியது காண்க.
எடுத்துக்கொண்டான்
- எடுத்துக் கையில் ஏந்திக்
கொண்டான். குழவியை எடுத்தல் என்பது உலக வழக்கு.
வலித்தோள்களார்ப்ப
- என்பதும் பாடம். 15
|